சென்னை, ஜூன் 19 கொள்கையை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை பெரியாரிடம் எப்பொழுதும் இருந்ததில்லை! தன் கொள்கைக்குப் பிறர் இணங்கி வரவேண்டும்; பிறர் வழிக்கு இவர் இணங்கவே மாட்டார். ஒரு சீர்திருத்தவாதிக்கு இருக்க வேண்டிய குணம் இதுவே! தனது கொள்கைகளில் எள்ளளவும் விட்டுக் கொடுக்காது இன்றைய சீர்திருத்தங்களில் உறுதியுடையவர் பெரியார் ஒருவரே – ஆதலால், இவர் உலகப் பெரியார்! என்று சாமி.சிதம்பரனார் எழுதியதைச் சுட்டிக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–2)
கடந்த 11.6.2026 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில், ‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–2) என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
பெரியாரின் சிந்தனை முத்துகளை –
அவருடைய கூர்மையினால் விளைந்தவற்றை
நாம் எடுத்துச் சொல்கிறோம்!
பெரியாரைப்பற்றிச் சொல்லும்போது, நாம் யாருக்கும் எதிரி இல்லை. அய்யா கருத்து எவ்வளவு முற்போக்கானது என்பதுபற்றி, அறிஞர் அண்ணா, ‘Putting Centuries in Capsules’ என்று சொன்னார். ஒரு பெரிய கடல் இருக்கிறது. அந்தக் கடலில் முத்து குளிப்பது போன்று நாம் இறங்கி, மூழ்கியிருக்கிறோம். அந்த சிந்தனை முத்துக்கள் – அவருடைய கூர்மையினால் விளைந்தவற்றை நாம் எடுத்துச் சொல்கிறோம்.
மானுடப்பற்றுதான் சுயமரியாதை இயக்கம். நியாய மாகப் பார்த்தால், அதை யாரும் குற்றம் சொல்லவே முடியாது. அதற்கு அரசியல் சாயம் பூசலாம் என்று நினைக்கலாமே தவிர வேறொன்றுமில்லை.
அமெரிக்கா – ஈரான் போருக்கு
அடிப்படை என்ன?
ஏன் ஒருவன் உயர்ந்தவன்; ஏன் ஒருவன் தாழ்ந்தவன். ஏன் ஒருவன் மேல்ஜாதி; இன்னொருவன் கீழ்ஜாதி என்பது எப்படி? இன்றைக்கு மேற்காசியாவில் நடைபெறுகின்ற போரால், உலகம் முழுவதும் நாடுகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. அதற்கு அடிப்படைக் காரணம் என்ன? மதம்தான். வரலாற்றைப் படிக்கும்போது, சமீப காரணம், மூல காரணம் என்று சொல்லிக் கொடுப்பார்கள். மூல காரணம் என்னவென்றால், மதம்தான். மதச் சண்டை தான். இஸ்ரேலுக்கும் – ஈரானுக்கும் ஏன் சண்டை? மத அடிப்படைதானே! அதேபோன்று, அமெரிக்கா – ஈரான் போருக்கு அடிப்படை என்ன? மதவாதிகளால்தானே!
இன்றைக்கு வலதுசாரிகள் மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்; பிற்போக்குவாதிகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். மதவெறி அங்கே ஏகபோகமாக இருக்கிறது. இங்கே எப்படி ஹிந்து மதவெறி இருக்கிறதோ, அதுபோல, அங்கே ஒரு குறிப்பிட்ட மதமான கிறித்தவ மதம். அந்த மதத்திலேயே அடிப்படைவாதம் என்று சொல்லக்கூடியது இருக்கிறது.
சமூக அமைப்பு குறித்து அய்யா கூறியதற்கு எதிரான தூற்றுதல் என்ன என்பதையும் நாம் பார்க்கவேண்டும்.
பெரியாரை ‘வகுப்புவாதி’ என்று கூறுபவர்கள் யார்?
“இப்பொழுதுள்ள சமூக அமைப்பு, பல பிரிவினை களுக்கு இடமானது; உயர்வு தாழ்வுகளுக்கு அடிப்படை யானது; சண்டை சச்சரவுகளுக்குக் காரணமானது; மக்களுக்குள் ஒற்றுமை தோன்றுவதற்கு இடமளிக்காதது; பிற நாட்டினர் ஆதிக்கம் செலுத்துவதற்கு வழிகோலி யது; ஆதலால், இப்பொழுதுள்ள சமூக அமைப்பு அடியோடு மாற வேண்டும். மக்களெல்லாம் ஒரு குலம் ஆகும்படியான புதிய சமூகமாக மாற வேண்டும்” என்னும் கருத்துடையவர் பெரியார். ஆதலால், இவரை வகுப்புவாதியெனத் தூற்றுகின்றனர் ஒரு சாரார். “வகுப்புப் பிரிவினைகள் நிலைத்திருக்க வேண்டும்; நாம் அவ்வகுப்புகளின் மேல் ஆதிக்கம் செலுத்த வேண்டும்” என்னும் கருத்துடைய உண்மை வகுப்புவாதிகளே பெரியாரை வகுப்புவாதி எனக் கூறுகின்றனர்’’ என்று அன்றே தெளிவாகப் பதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அன்றையிலிருந்து இன்றுவரை தூற்றல்கள் நடந்துகொண்டுதான் உள்ளது.
வி.பி.சிங்கை, ‘ஜாதி வெறியர்’ என்று சொன்ன கூட்டம் அல்லவா!
ஜாதியை ஒழிப்பதற்காக, சமத்துவம் உருவாக இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சொன்ன வி.பி. சிங்கை என்ன சொன்னார்கள்? அவர் மண்டல் கமிஷனை அமல்படுத்தியவுடனே, ‘காஸ்டிஸ்ட்’ என்று இங்கிலீஷ் வார்த்தையைச் சொன்னார்கள். அவர் ஒரு ஜாதி வெறியர் என்றனர்.
ஜாதியை ஒழிப்பதற்காகத்தான் சமத்துவம் கொடுக்கிறோம். வகுப்புரிமை என்பதே என்றைக்கும் நிலைநாட்டுவதற்காக அல்ல. சமத்துவம், சமப்படுத்த வேண்டும் என்பதுதான் அதனுடைய ஆழ்ந்த தத்துவம். அதைத்தான் எடுத்துச் சொன்னார்.
அய்யாவைப்பற்றி சாமி.சிதம்பரனார் சொல்கிறார்,

‘‘அரசியல் துறையிலும் இவருடைய போக்கு மிக முற்போக்கானது. ‘சமதர்மமே எனது அரசியல் நோக்கம்’ என்று கூறி வருகின்றார். இக்காரணத்தால், பணக்காரர்கள் இவரை வெறுக்கின்றனர். முதலாளித்துவத்தை நிலைக்க வைக்க விரும்பும் தேசியவாதிகள் இவரை வெறுக்கின்றனர்.’’
ஆகவே, இன்றைக்கு அம்பானி, அதானியைப்பற்றி எல்லாம் மற்றவர்கள் பேசுவார்கள். அடித்தளத்தில் இதற்கெல்லாம் மூலம் பெரியாருடைய சிந்தனையுடைய கூர்மைதானே.
‘‘பார்ப்பனப் – பனியா கூட்டுக் கட்சி!’’
பா.ஜ.க.வைப்பற்றிச் சொல்லும்போது அம்பேத்கரும் சரி, தந்தை பெரியாரும் சரி, அழகாக இரண்டே வார்த்தையில் சொன்னார்கள், ‘‘பார்ப்பனப் – பனியா கூட்டுக் கட்சி’’ என்று.
அந்தக் காலத்தில், மிகப்பெரிய அளவிற்கு ஒரு காலண்டர் போட்டார்கள். அந்தக் காலண்டரில், தமிழ்நாடு வரைபடம் இருக்கும். தென்னாட்டில், மூன்று பேர் ஓடுவார்கள்; அந்தப் படத்தில் இருக்கும். முதலில், பின்னால் வந்தவன், முன்னால் நிற்பான். பிரிட்டிஷ்காரன் ஓடுற மாதிரி ஒரு உருவம். அதற்க டுத்தது பனியா, முதலாளி. அதற்கும் கீழே பார்ப்பனர். உருவகப்படுத்தி இருப்பார்கள்.
நாம் தனிப்பட்ட முறையில் அவர்களைச் சொல்ல வில்லை. இந்தத் தத்துவங்களை அடிப்படையாக வைத்துதான் மிகப்பெரிய அளவிற்கு உரிமை வந்தது.
இதில், பெரியாருடைய சிந்தனையினுடைய புரட்சியை, அந்தக் கூர்மையைப் பற்றிச் சொல்லும்போது சாமி.சிதம்பரனார் அவர்கள் எவ்வளவு அழகாக விளக்கு கிறார் என்றால், இந்தப் பகுதி மிகவும் இலக்கிய நயத்தோடு இருக்கிறது. மிக ஆழமாகச் சிந்திக்க வேண்டியதாகும்.
ஒரு நல்ல புத்தகத்தையோ, நல்ல கருத்தியலையோ பார்க்கும் போதும், கேட்கும் போதும் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ, அதே மாதிரி பார்த்தீர்கள் என்றால், இங்கே சொல்கிறார் பாருங்கள்,
பிறப்பிலேயே மதப்புரட்சிக்காரராகப் பிறந்தார்; சமூகப் புரட்சிக்காரராகப் பிறந்தார்; சமதர்மவாதியாகப் பிறந்தார்!
‘‘இவ்வாறு மதம், சமூகம், அரசியல் ஆகிய மூன்றி லும் பெரியார் ஒரு புரட்சிக்காரராக விளங்குகிறார். பெரியார் ஒரு மதவாதியாக இருந்து பின்னர், மதப் புரட்சிக்காரராக மாறவில்லை. ஒரு சமூகவாதியாக இருந்து பின்னர், சமூகப் புரட்சிக்காரராக மாறவில்லை. ஒரு முதலாளித்துவவாதியாக இருந்து பின்னர், சமதர்மவாதியாக மாறவில்லை. பிறப்பிலேயே மதப்புரட்சிக்காரராகப் பிறந்தார். சமூகப் புரட்சிக்காரராகப் பிறந்தார்; சமதர்மவாதியாகப் பிறந்தார்.’’
‘ஜீன் மெஸ்லியரின் மரண சாசனம்!’
‘ஜீன் மெஸ்லியரின் மரண சாசனம்’ என்று புத்தகம் இருக்கிறது. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு கத்தோலிக்க பாதிரியாரான ஜீன் மெஸ்லியர் (Jean Meslier, 1664–1729), தன் வாழ்நாளுக்குப் பிறகு தன் parishioners (இறைமக்கள்)-க்காக எழுதி வைத்த ஒரு புரட்சிகரமான நாத்திக மற்றும் சுயமரியாதை தத்துவ நூலாகும் அது. அப்படிப்பட்டவர், பிற்காலத்தில் அவர், ‘கடவுள் இல்லை; நான் மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்தேன்’’ என்று அக்னிேஹாத்திரம் தாத்தாச்சாரியார் கடைசியில் எழுதியது போல இவரும் எழுதினார்.
கடவுளைப்பற்றி அக்குவேராக, ஆணிவேராக சொல்லப்பட்டு இருக்கும்!
ஆனால், அந்தப் பாதிரியார் கடைசியாக என்ன எழுதியிருந்தார் என்றால், ‘‘இதை நான் இறந்த பிற்பாடுதான் வெளியிட வேண்டும்’’ என்று. அந்தப் புத்தகம் மூன்று பாகங்களாக இருக்கும். கடவுளைப்பற்றி அக்குவேராக, ஆணிவேராக சொல்லப்பட்டு இருக்கும். புத்தகம் வாங்குகிறவர்கள்கூட ‘ஜீன் மெஸ்லியரின் மரண சாசனம்’ என்று இருக்கிறதே, அதில் என்னவோ ஒன்றை எழுதியிருப்பார் என்று நினைப்பார்கள்.
ஆனால், அந்தப் புத்தகத்தினுடைய உள்பகுதியைப் பார்த்தீர்களேயானால், மதம் எப்படி மோசமானது? கடவுளை எப்படிக் காட்டி ஏமாற்றுகிறார்கள்? அந்த மாதிரி வருகிற போது, மதவாதிகளாய் இருந்து புரட்சிக்காரர்களாக வந்திருக்கிறார்கள். அந்த வரி சையில், அக்னிேஹாத்திரம் தாத்தாச்சாரியார் வரை யில் சொல்லலாம், நமக்குத் தெரிந்த வரையில், புரட்சிக்காரரா, இல்லையா என்பது பிரச்சினை இல்லை. புரட்சி என்றால், மாறுதல். பிற்போக்குக் கருத்துகளுக்கு எதிரானது. அவ்வளவுதானே தவிர, வேறொன்றும் இல்லை. அப்படி வரும்போது, தந்தை பெரியாருடைய தனித்தன்மை, இந்தக் கூர்மைக்கு எது அடித்தளம்? என்பதற்கு இந்த விளக்கம் கிடைக்கிறது.
‘‘பெரியார் ஒரு மதவாதியாக இருந்து பின்னர், மதப் புரட்சிக்காரராக மாறவில்லை.’’
‘‘ஒரு சமூகவாதியாக இருந்து பின்னர், சமூகப் புரட்சிக்காரராக மாறவில்லை.’’
‘‘ஒரு முதலாளித்துவவாதியாக இருந்து பின்னர், சமதர்மவாதியாக மாறவில்லை.’’
‘‘பிறப்பிலேயே மதப்புரட்சிக்காரராகப் பிறந்தார்.’’
வீட்டில், காலட்சேபம் செய்து கொண்டிருப்பதை ‘பெரியார்’ திரைப்படத்தில் நீங்கள் எல்லாம் பார்த்தி ருப்பீர்கள்.
அந்தக் காட்சிகளை எப்படி அமைத்தால், சுவையாக இருக்கும் என்று நான், கவிஞர், மற்றவர்கள் எல்லாம் அமர்ந்து ஆலோசனை செய்தோம். அந்தக் காட்சியில், இனமுரசு சத்யராஜ், அவர்கள் கேள்வி கேட்பார். வைரமுத்து அவர்கள் மிகச் சிறப்பாக பாடலை எழுதியிருப்பார்.
‘‘சீதாபிராட்டிக்கு முதுகில் ஏன் கோடு இல்லை? அவர், சீதாபிராட்டியைத்
தொட்டுப் பார்க்கவே இல்லையா?’’
‘‘இராமன் அணிலுக்கு மூணு கோடு போட்டான்’’ என்று வரும். உடனே பெரியார் அவர்கள், ‘‘சீதாபிராட்டிக்கு முதுகில் ஏன் கோடு இல்லை? அவர், சீதாபிராட்டியைத் தொட்டுப் பார்க்கவே இல்லையா?’’ என்று கேள்வி கேட்பார். பெரியார் அவர்கள் ஒரு மதவாதியாக இருந்து, அதேபோல சமூக புரட்சியாளராக இருந்து, பிறப்பிலேயே மதப் புரட்சிக்காரர். வீட்டிலே கேள்வி கேட்டார்.
சமூக புரட்சியாளராகப் பிறந்தார் என்றால், என்ன ஆச்சரியமாக இருக்கிறதே என்று எல்லாம் நினைப்பார்கள். புராணக் கதை மாதிரி இருக்கிறது என்று. அது அப்படியல்ல. பள்ளிக்கூடத்துக்குந் போகிறார்; திண்ணைப் பள்ளிக்கூடத்திற்குப் போகிறார். அதற்கு மேல் அவர் மூன்றாம் வகுப்பிற்கோ, அதற்கு மேலேயோ போகவில்லை.
அவருக்கு அந்த சிந்தனையுடைய தாக்கம் எப்படி வருகிறது?
தண்ணீர் குடிக்கிறார்; அப்படித் தண்ணீர் குடிக்கும்போது, ஒரு வீட்டில், தூக்கிக் குடிங்கிறான்; இன்னொரு வீட்டில், இல்லை, இல்லை நீ கவ்விக் குடிங்கிறான். தூக்கிக் குடிக்கும்போது மூக்கு உள்ளே தண்ணீர் போகிறது. ‘‘தண்ணீர் கொடுக்கமாட்டேன்ம்பா, நீங்கள் மேல் ஜாதி; நாங்கள் கீழ் ஜாதி. யாருக்காவது தெரிந்தால், எங்களிடம் சண்டை போடுவார்கள்’’ என்று சொல்கிறார்கள்.
‘‘அதெல்லாம் ஒன்னும் இல்லை. எனக்குத் தாகமாக இருக்கிறது; தண்ணீர் கொடுங்கள்’’ என்று கேட்டுத் தண்ணீர் குடிக்கிறார்.
அப்பொழுதுதான் யோசித்துப் பார்க்கிறார், சின்ன குழந்தை உள்ளத்தில். இரண்டு வீடுமே பார்ப்பனர் வீடு இல்லை. ஒன்று செட்டியார் வீடு; இன்னொன்று சாதாரண வாணிபச் செட்டியார் வீடு. ஜாதியை எல்லாம் பார்க்கும்போது. எல்லாமே சூத்திர பட்டியல்தான். அவர்களை ஜாதி அடிப்படையில் அடுக்கி வைத்திருக்கிறார்கள். அய்யா சொல்கிறார், ‘‘ஏன் அந்த வீட்டில் மட்டும் ‘கவ்விக் குடிங்கள், பரவாயில்லை’ என்று கீழ்ஜாதி என்கிறவர்கள் சொல்கிறார்கள், மனிதநேயத்தோடு. இந்த வீட்டில், தண்ணீர் குடிக்கும்போது, ‘தூக்கிக் குடி; அதுமட்டுமல்ல, மூக்கின் உள்ளே தண்ணீர் போனாலும் பரவாயில்லை. குடித்த அந்த டம்ளரை தனியே வை, நான் தண்ணீர் தெளித்துத்தான் உள்ள எடுத்துக்கொண்டு போவேன்’’ என்கிறார்கள்.
அப்போது சிந்திக்க ஆரம்பித்தார், பாருங்கள்; அதுதான் அவரை மிகப்பெரிய ஒரு சமூகவாதியாக, ஏன் என்று கேட்ட, அந்த வார்த்தைகளில் எல்லாமே அதன் உள்ளே அடங்கி இருக்கிறது.
மேலும், சாமி.சிதம்பரனார் தொடருகிறார்,
‘‘இளமை முதல் இன்றுவரை (இன்றுவரை என்றால், 1939) இவர் கொள்கையில் மாறுதல் இல்லை. விளையாட்டுப் பருவத்தில் இவரிடம் இயற்கையில் அமைந்திருந்த குணங்களே பிற்காலத்தில் இவருடைய கொள்கையாக மாறின; சொற்பெருக்குகளாக வழிந்தன; ஓர் இயக்கமாக உருப்பட்டன. தன் கொள்கையை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இவரிடம் எப்பொழுதும் இருந்ததில்லை. தன் கொள்கைக்குப் பிறர் இணங்கி வரவேண்டும்; பிறர் வழிக்கு இவர் இணங்கவே மாட்டார். ஒரு சீர்திருத்தவாதிக்கு இருக்க வேண்டிய குணம் இதுவே. புத்தர், சாக்ரட்டீஸ், கன்ஃபூஷியஸ், ஏசுகிறிஸ்து, முகம்மது நபி போன்ற பெரியார்கள் தங்கள் கொள்கையில் வெற்றி பெற்றதற்குக் காரணம் இதுவே. அவர்கள் பகைவர்களால் பல துன்பங்களுக்கு ஆளாகியும், தங்கள் கொள்கைகளில் எள்ளளவும் விட்டுக் கொடுக்காத உறுதியுடையவர்களாயிருந்தனர். இன்றைய சீர்திருத்தங்களில் இத்தகைய உறுதியுடை யவர் பெரியார் ஒருவரே. ஆதலால், இவர் உலகப் பெரியாராவர்.
இவரைப் பற்றிப் பகைவர்கள், “கொள்கை இல்லா தவர்; கொள்கையை விட்டுக் கொடுப்பவர்; கட்சி மாறு கிறவர்; கட்சியைக் காட்டிக் கொடுப்பவர்” என்றெல்லாம் பழி கூறுவர். இப்பழி ஆதாரமற்ற பொறாமைப் பேச்சு. இவருடைய பொதுஜன செல்வாக்கைக் குறைக்கும் கெடு நினைப்புடன் கூறும் கூற்று. இவர் கட்சி மாறியிருப்பதும் உண்மை. காங்கிரசிலிருந்து மாறினார். ஏன்? அதன் போக்குத் தன் கொள்கைக்கு மாறாக விருந்தது. தன் கொள்கைக்குக் காங்கிரசைத் திருப்ப முயன்றார்; முடியவில்லை. அதனால், அதைவிட்டு விலகினார். இதுவே இவருடைய கொள்கையில் இவருக்குள்ள உறுதியான பிடிப்பைக் காட்டுவதாகும்’’ என்கிறார் சாமி.சிதம்பரனார்.
(தொடரும்)
