கருநாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு ஒரு திறந்த மடல் எழுதியிருக்கிறார். “இந்தியா முழுவதும் 60,000-க்கும் மேற்பட்ட ஷாகாக்களையும், கோடிக்கணக்கான ஸ்வயம்சேவக்குகளையும் கொண்டிருப்பதாகக் கூறும் ஓர் அமைப்பு, வெளிப்படைத் தன்மையையும் அரசியலமைப்புக்கு உட்பட்ட பொறுப்புணர்வையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமல்லவா? ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மிக உயர்ந்த மற்றும் முக்கியமான முடிவெடுக்கும் அமைப்பான ‘அகில பாரதிய பிரதிநிதி சபா’வின் 2025–2026 கருநாடக மாநில அறிக்கையின்படி, கருநாடகாவில் அந்த அமைப்பு 4,127 தினசரி ஷாகாக்கள், 1,389 வாராந்திரக் கூட்டங்கள், 60 மாதாந்திர மண்டலங்கள், 19.61 லட்சம் பங்கேற்பாளர்களுடன் 2,194 சமாஜோத்சவாக்கள்; மேலும், சீருடை அணிந்த 2.21 லட்சம் பங்கேற்பாளர்களுடன் 562 அணிவகுப்புகளையும் நடத்தியுள்ளது. இத்தகைய பெரிய, செல்வாக்குக் கொண்ட ஆர்.எஸ்.எஸ், தனது சட்டப்பூர்வ நிலை, பதிவு, அலுவலகப் பொறுப்பாளர்கள், நிதி ஆதாரம், செலவினங்கள், வரி விதிப்பு மற்றும் பொதுச் செயல்பாடுகளுக்கான அனுமதி ஆகியவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும்.
குடிமக்கள், தொழிலாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், கோயில்கள் மற்றும் நிறுவனங்கள் பதிவு செய்யவும், தகவல்களை வெளியிடவும், சட்டத்திற்குக் கட்டுப்படவும் எதிர்பார்க்கப்படும்போது, ஆர்.எஸ்.எஸ் மட்டும் ஏன் இதற்கு விதிவிலக்காக இருக்க வேண்டும்? தனது நூற்றாண்டு காணும் ஆண்டில், ஆர்.எஸ்.எஸ். பொறுப்புடன் அரசியலமைப்பைக் கடைப்பிடித்து, பதிவுசெய்து, தகவல்களை வெளியிட்டு, பொருந்தக்கூடிய வரிகளைச் செலுத்தி, அரசியலமைப்பிற்கு உட்பட்டு வெளிப்படையாகச் செயல்பட வேண்டும்” என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர இந்தியாவில் சட்டப்படி மூன்று முறை தடைசெய்யப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ்! இன்றும் உலகம் முழுவதும் ஏராளமான கிளைகளையும், துணை அமைப்புகளையும் கொண்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய என்.ஜி.ஓ. என்று ஆர்.எஸ்.எஸ்.சைப் புகழ்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி! ஆனால், அந்த அமைப்பு இந்தியாவில் சட்டப்படியாகப் பதிவு செய்யப்படவில்லை. அதற்கென்று கணக்கு வழக்குகள் இல்லை. எப்படி இவையெல்லாம் நடக்கின்றன என்பதற்கு எந்தக் கேள்வி கேட்பாரும் கிடையாது! இவ்வளவு நாள் தவிர்த்துவந்த கேள்விக்கு, இப்போது “கேள்வி கேட்க முடியாது” என்று பொருள்படும்படி பதில் சொல்லியிருக்கிறார் அதன் தலைவர் மோகன் பாகவத்.
“அரசிடமிருந்து நிதி எதிர்பார்க்கும் நிறுவனங்கள்தான் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க வேண்டும். எங்களுக்கு அது தேவையில்லை” என்கிறார். தனி மனிதர்கள் உள்பட எந்த ஒரு நிறுவனமும், வரவு செலவுக் கணக்குகளை அரசுக்குக் காட்ட வேண்டிய நாட்டில் தான் இப்படிப் பட்ட பதில் வருகிறது.
குரு தட்சணை என்று விஜயதசமி நாளில் குவியும் பணத்துக்கு என்ன கணக்கு? ஆர்.எஸ்.எஸ்.சில் நிதி எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதை “நான் இந்துவாக இருக்க முடியாது (I could not be a Hindu) என்ற நூலில் மேனாள் ஆர்.எஸ்.எஸ். சுயம் சேவக்கான பன்வர் மெக்வன்ஷி வெளிப்படுத்தியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்.சுக்கும், பனியாக்களுக்கும் உள்ள தொடர்பும், முறையான கணக்குகளின்றி, அதற்குக் கிடைக்கும் நன்கொடைகள் எப்படி வணிகம், ஹவாலா, கருப்புப் பணம், வன்முறை, தீவிரவாதம் என்றெல்லாம் உலா வருகிறது என்பதற்கு அவருடைய புத்தகத்தைப் போல மேலும் பல புத்தகங்களில் ஆதாரங்கள் உள்ளன. அதன் உலகளாவிய தொடர்புகள் பற்றி விரிவான பல செய்திகளை ‘ஃப்ரண்ட்லைன்’ உள்ளிட்ட ஏடுகள் அம்பலப்படுத்தியுள்ளன. இதுபற்றி பன்னாட்டு அமைப்புகள் எச்சரிக்கின்றன. இந்தியாவின் இறையாண்மைக்கே ஆபத்தான இதைப்பற்றியெல்லாம் கேள்வி எழுப்ப இந்தியாவின் வருமான வரித் துறையோ, அமலாக்கத் துறையோ, பிற சட்டப்பூர்வ அமைப்புகளோ முயன்றதில்லை. ஆனாலும் இங்கு சட்டத்தின் ஆட்சி நடப்பதாக நாம் நம்ப வேண்டும்! உயர்நீதிமன்ற நீதிபதி போக்குவரத்தில் சிக்கிக் கொண்டதற்கெல்லாம் ‘சுயோமோட்டோ’ வழக்கு போடும் நீதித்துறையின் கண்களில் இவையெல்லாம் தெரியவில்லை என்றே நம்புவோம்!
இந்தச் சூழலில் தான் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா (FCRA Amendment Bill) நம் கவனம் பெறுகிறது. முறையாகக் கணக்குகளைக் காட்டி, அனுமதி பெற்று, நடத்தப்பட்டு வரும் சிறுபான்மை மதத்தவரின் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அனைத்துத் தொண்டு அமைப்புகளுக்கும் வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடைகளைத் தடுக்கும் வகையிலும், அப்படி பெறப்பட்டு உருவாக்கப்பட்ட கட்டடங்களையே அபகரிக்கும் வகையிலும் சட்டத்தைக் கொண்டு வர முனையும் ஒரு நாட்டில் தான், ஆர்.எஸ்.எஸ். என்ற ஆகப்பெரிய ஆக்டோபஸுக்கு எந்த கணக்குவழக்கும் தேவையில்லை; பதிவும் தேவையில்லை, கட்டுப்பாடுகள் இல்லை என்று அதன் தலைவரால் ஊரறியச் சொல்ல முடிகிறது. மதச்சார்பற்ற ஒரு நாட்டின் ஒன்றிய அரசு, மிக வெளிப்படையாக பார்ப்பன ஆதிக்கக் கூட்டத்தையும், மதச் சிறுபான்மையினரையும் எப்படி ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்று நடத்துகிறது என்பதற்குப் பட்டவர்த்தனமான சான்று இது!
ஆனால், இப்போது கேள்வி எழுப்பியிருப்பது பிரியங்க் கார்கே என்ற தனி நபரல்ல. கருநாடக அரசின் உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே! ‘சுயம்சேவக்குகள் மத்தியில் மோகன் பாகவத் என்ன சொன்னாலும் அவர்கள் ஏற்பார்கள். ஆனால் கர்நாடக அரசு அதை அப்படியே ஏற்க வேண்டிய அவசியமில்லை’’ என்று உறுதியாகத் தெரிவித்திருக்கிறார் அவர். அரசின் கேள்விக்கு ஆர்.எஸ்.எஸ். என்ன பதில் சொல்லப் போகிறது?
