பெங்களூரு, ஜூன் 15 இந்திய கல்வித்துறையில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் நீட் தேர்வு வினாத் தாள் கசிவு உள்ளிட்ட பல் வேறு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று வலியுறுத்தி பெங்களூருவில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.
நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு
பெங்களூருவில் உள்ள பிரீடம் பார்க் (Freedom Park) பகுதியில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ சார்பில் இந்த அமைதிவழி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பிரபல நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ்ராஜ் நேரில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.
டில்லியில் துவக்கம்: கடந்த ஜூன் 6ஆம் தேதி, டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே தலைமையில் முதற்கட்டமாக இந்த அமைதிவழி போராட்டம் நடைபெற்றது.
அரசியலமைப்பு சட்டத்துடன் மக்கள்: டில்லி போராட்டத்தைத் தொடர்ந்து, இதனை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில் நேற்று (14.6.2026) பெங்களூருவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஏராளமான பொதுமக்களும், மாணவர்களும் இந்திய கல்வித்துறையில் சீர்திருத்தம் வேண்டும் என்பதை வலி யுறுத்தி, கைகளில் இந்திய அரசியலமைப்பு சட்டப் புத்தகம் மற்றும் தேசியக் கொடியை ஏந்தி தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
அடுத்தடுத்த நகரங்களில் போராட்டம்
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை இந்தப் போராட்டத்தைக் கை விடுவதில்லை என போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர். இதன் அடுத்த கட்டமாக லக்னோ, அமிர்தசரஸ், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கும் போராட் டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (15.6.2026) ஜெய்ப்பூரில் நடைபெறும் போராட்டத்தில் பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
