வீடுகளில் பிள்ளைகளுடன் அரசியல் பேசுங்கள்! திமுக மகளிரணி கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி வேண்டுகோள்!

 

சென்னை, ஜூன் 14- சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று (13.6.2026) திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் விழிப்புணர்வு குறித்துப் பேசினார்.

அவர் பேசியதாவது: “அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி வன்கொடுமைகளை எல்லாம் நாம் கடந்து வந்திருக்கிறோம். ஆனால் இன்று, தவெக (தமிழக வெற்றிக் கழகம்) நிர்வாகி ஒருவர் 50-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி, ஆபாசமாக காட்சிப் பதிவு எடுத்த செய்தி பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. பெண்கள் மீண்டும் ஒரு பாதுகாப்பற்ற சூழலை எதிர்நோக்கியுள்ளனர்.”

மேலும் த.வெ.க. தலைவர் சி.ஜோசப் விஜய்யின் பேச்சுக்கு பதிலளித்த கனிமொழி, “தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று தேர்தலுக்கு முன்பு சொன்ன ஜோசப் விஜய் தான், தற்போது டில்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் 42 சதவீத பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள் என்று பேசியுள்ளார். இந்த சாதனை யாருடையது? இது முழுக்க முழுக்க திமுக அரசின் உழைப்பு. தமிழ்நாட்டின் பொருளாதாரம் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட காரணமே முந்தைய திமுக ஆட்சி தான்” என்று குறிப்பிட்டார்.

திமுக அரசு வழங்கிய ரூ.1,000 உரிமைத் தொகை பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான சமூக மாற்றத்தை உருவாக்கியவர் என்றார்.

இறுதியாக மகளிரணியினருக்கு வேண்டுகோள் விடுத்த அவர், “நம் வீடுகளில் பிள்ளைகளிடமும், உறவினர்களிடமும் அரசியல் பேசுங்கள். சமூக வலைத்தளங்கள், ரீல்ஸ் தாண்டி இந்த சமூகத்தை அரசியல்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் நாம் செய்த சாதனைகள், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பெண்களுக்கான சொத்துரிமை பற்றி அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூற வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் சரியான முடிவை எடுப்பார்கள்” என்று வலியுறுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *