சென்னை, ஜூன் 14- திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று (13.6.2026)நடைபெற்றது. கூட்டத்துக்கு, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமை வகித்தார். இதில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டரணிச் செயலாளர் நாமக்கல் ப.ராணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த ஆட்சியில் குற்றங்கள் பெருகிவிட்டன. நியூஸ் சேனல்களை வைத்தாலே, கொடூரமான குற்றச்சம்பவங்கள் தான் செய்திகளாக வருகின்றன. எனக்கு முன்பு பேசிய கனிமொழி சொன்னார், அண்மையில் சிறீவைகுண்டத்தில் ஆளும்கட்சியைச் சேர்ந்த பெண்ணுக்கு, அந்தக் கட்சியினரே பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். இதுபற்றி 2 அமைச்சர்களிடம் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை.
12.6.2026 அன்று கூட, ஆலந்தூரிலும், சேலத்திலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நபர்களே பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகச் செய்திகள் வந்தன. இப்போது நமது முதலமைச்சர் என்ன செய்கிறார் தெரியுமா? அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார். நமக்கு என்ன சந்தேகம் என்றால், அவர் ஆட்சி மீது அவருக்கே நம்பிக்கை இல்லையா அல்லது அவருக்கு ஆதரவு கொடுத்திருக்கிற மற்ற கட்சிகள் மீது நம்பிக்கை இல்லையா? முதலில் அவர் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அதிமுக எம்எல்ஏக்களை தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தார்.
இப்போது, அவர்களை பதவி விலக வைத்துவிட்டு, அடுத்த நொடியே தன்னுடைய கட்சியில் இணைத்திருக்கிறார். பாஜ மற்ற மாநிலங்களில் செய்வதையே இங்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்து கொண்டிருக்கிறார். அதாவது, பாஜவின் ஜெராக்ஸ் மாதிரி செயல்படுகிறார். ஒரே மாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளிலிருந்து விலகி தவெகவில் சேர்கிறார்களே, அந்தளவுக்கு அப்படி என்ன ஆஃபர் தவெகவில் கிடைத்திருக்கும் என்று பேச வேண்டுமா வேண்டாமா? ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிற அசிங்கமான ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது.
முதலமைச்சர் தான் மேடைக்கு மேடை “கான்பிடண்ட்டா இருங்க” என்று சொல்கிறாரே தவிர, அவரே முதலில் கான்பிடண்ட்டாக இருக்கிறாரா, அதனால்தான், தீர்ந்துபோன சக்தி என்று சொன்னவர்களுடைய உறுப்பினர்களையே திருடிக் கொண்டிருக்கிறார். தீர்ந்துபோன சக்தியிடமே திருடுகிற இவர், எவ்வளவு காய்ந்து போன சக்தியாக இருப்பார் என்று பாருங்கள்.
பாலியல் வன்முறைகள், அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு என்று நடப்பதையெல்லாம் பார்த்தால், யாராலாவது விமர்சிக்காமல் இருக்க முடியுமா? வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு டைம் தரலாம். ஆனால், பொதுமக்களுடைய பாதுகாப்பு பற்றி எப்படிப் பேசாமல் இருக்க முடியும்? 11.6.2026 அன்று, டில்லியில் பிரதமர் தலைமையில் முதலமைச்சர்கள் எல்லாம் கலந்து கொள்ளும் நித்தி ஆயோக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்திற்கு இங்கிருக்கும் முதலமைச்சரும் போயிருக்கிறார். அங்கு சென்று என்ன பேசினார் என்று உங்களுக்குத் தெரியும். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு உரிமைகளுக்காக நாம் வைத்த கோரிக்கைகளில் சிலவற்றையும், நமது ஆட்சியில் செய்த சாதனைகளில் சிலவற்றையும் தன்னுடைய உரையில் முதலமைச்சராக இருக்கும் ஜோசப் விஜய் பேசியிருக்கிறார். அதை நாம் வரவேற்கிறோம்.
அதே சமயத்தில், நான் முதலமைச்ச ராக இருக்கும்போது, இதே மாதிரி டில்லி சென்று பேசியபோது, இப்போது முதலமைச்சராக இருக் கிறவர் என்னவெல்லாம் பேசினார் என்று தெரியுமா? அவருக்கு நான் ஞாபகப்படுத்துகிறேன்.
“அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகப் போனார்கள்”, “பாஜ காலில் விழுந்து மறைமுகக் கூட்டணி வைத்திருக்கிறார்கள்”, “அதனால்தான் குரூப் போட்டோ எடுக்கும்போது முன்வரிசையில் நிற்க ஸ்டாலினுக்கு இடம் கொடுத்தார்கள்”. இதெல்லாம் யார் சொன்னது? அவர் சொன்னது.
இப்போது நீங்கள் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறீர்கள், நான் கேட்கவா? இப்போது நான் கேட்கிறேன், பதில் சொல்லுங்கள்மிஸ்டர் சீப் மினிஸ்டர், கரூர் சி.பி.அய். வழக்கில் இருந்து தப்பிக்கத் தான் நீங்கள் டில்லிக்குச் சென்றீர்களா? பாஜவை உறுதியாக விமர்சித்துப் பேசினால் உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறீர்களா? இந்தக் கேள்வியையெல்லாம் கேட்டு, ஒரு முதலமைச்சராக நீங்கள் அரசுக் கூட்டத்தில் கலந்து கொண்டதை உங்களைப் மாதிரி நான் தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை.
மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மறுத்த காரணத்திற்காகத் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை ஒன்றிய பாஜ அரசு விடுவிக்காமல் பிளாக்மெயில் செய்தார்கள். திமுக அரசு அதை எதிர்த்துப் போராடினோம். அதில் கூட இப்போது இருக்கும் முதலமைச்சர் என்ன சொன்னார்? பாஜ அரசைத் கண்டிக்காமல், “கொடுப்பது அவர்கள் கடமை, வாங்குவது இவர்களது உரிமை.
ஆனால் பாசிசமும் பாயாசமும் எல்.கே.ஜி. யூ.கே.ஜி. பசங்க மாதிரி சண்டை போடுகிறார்கள்” என்று நக்கல் நையாண்டி செய்தீர்களே… இப்போது நீங்கள் மட்டும் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறீர்கள்? நிபந்தனைகள் இல்லாமல் நிதியைக் கொடுக்க வேண்டும் என்றுதானே நீங்களும் கேட்டிருக்கிறீர்கள்? இப்படித்தான் செய்ய முடியும்; ஏனெனில், இது சினிமா இல்லை, ஆட்சி நிர்வாகம். முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள்.
மாநில உரிமைகள் சார்ந்த எதுவாக இருந்தாலும் திராவிட மாடல் அரசு போட்டுத் தந்த ப்ளூப்ரிண்ட் படிதான் யாராக இருந்தாலும் செயல்பட முடியும். சொல்லப்போனால், இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் தமிழ்நாடு, பெண்கள் அதிகம் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மாநிலம் தமிழ்நாடு, நமது மாணவர்களுக்கு நீட் விலக்கு என, திமுக அரசின் பாலிசி நோட் மாதிரிதானே முதலமைச்சரின் ஒட்டுமொத்த பேச்சும் இருந்தது?
திமுகவின் பயணம் தொடர உங்களுடைய உழைப்பைக் கொடுங்கள், கொடுங்கள், கொடுங்கள் என்று கூறி, நான் எப்போதும் உங்களுக்கு அண்ணனாக, தம்பியாக, சகோதரனாக, ஒட்டுமொத்தமாக உங்களின் உடன்பிறப்பாக இருப்பேன் என்ற உறுதியைச் சொல்லி, உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
