சேலம், மே 5- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,595 கனஅடியில் இருந்து 1,144 கனஅடியாக சரிவு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 1500 கன அடி நீர் வெளியேற்றம்; நீர் இருப்பு 41.891 டிஎம்சியாக உள்ளது.
மின்சார ரயிலில் பெண் தவறவிட்ட நகையை மீட்டுக்கொடுத்த காவல் துறையினர்!
சென்னை, மே 5- சென்னை கொரட்டூரில் மின்சார ரயிலில் சென்ற தமிழ்ச்செல்வி என்ற பெண் தவறவிட்ட 14 பவுன் நகைகளை ரயில்வே காவல் துறையினர் மீட்டுக்கொடுத்தனர். உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு கொரட்டூரில் இறங்கியபோது நகைப்பையை தவற விட்டுள்ளார். திருவள்ளூரில் நின்று கொண்டிருந்த ரயிலில் சோதனை செய்தபோது அங்கிருந்த பையை மீட்டு ரயில்வே காவல் துறையினர் தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைத்தனர்.
6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே ஆதார் வழங்க வேண்டும்!
உச்சநீதிமன்றத்தில் மனு
புதுடில்லி, மே 5- நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவுபவர்கள் ஆதார் அட்டை பெறுவதை தடுக்க, 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே புதிதாக ஆதார் வழங்க உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி அமர்வு, ‘‘இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திடமும் அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லுங்கள்’’ என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
விஜய் கட்சி வேட்பாளர் மீது பண மோசடி வழக்கு!
சேலம், மே 5- சேலத்தை சேர்ந்த வியாபாரி ராஜா என்பவரிடம் ரூ.85 லட்சமும், சென்னை ரசூல் என்பவரிடம் ரூ.2 கோடியும் மோசடி செய்ததாக கடையநல்லூர் தொகுதி விஜய் கட்சி வேட்பாளர் ஆர்.கே.ஜலீல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கை சி.பி.சி.அய்.டி-க்கு மாற்றக் கோரி ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, ஜூன் 3ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
