கொள்கையைச் சொல்லாத ஆட்சி தமிழ்நாட்டில் நிலைக்க முடியாது!
உறவுக்குக் கைகொடுக்கும் அதே நேரத்தில்,
உரிமைக்குக் குரல் கொடுக்கத் தவறக் கூடாது!
உறவுக்குக் கைகொடுக்கும் அதே நேரத்தில்,
உரிமைக்குக் குரல் கொடுக்கத் தவறக் கூடாது!
சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
சேலம், ஜூன் 12 கொள்கையைச் சொல்லாத ஆட்சி தமிழ்நாட்டில் நிலைக்க முடியாது! உறவுக்குக் கைகொடுக்கும் அதே நேரத்தில், உரிமைக்குக் குரல் கொடுக்கத் தவறக் கூடாது! தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகியபின் விமர்சிப்பவர்களின் மனசாட்சிதான் பதில் சொல்ல வேண்டும் என்று செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (13.6.2026) சேலத்தில் நடைபெற்ற மணவிழாவிற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
செய்தியாளர்: தமிழ்நாட்டில், மு.க.ஸ்டாலின் தலைமையில் இருந்த ஆட்சியை குறை சொன்ன விஜய், டில்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழ்நாட்டினுடைய சாதனைகளைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்; அக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், தமிழ்நாட்டு உரிமைகளைப் பெற்றுத் தருவார் என்கிற நம்பிக்கை இருக்கிறதா, உங்களுக்கு?
தமிழர் தலைவர்: நம்ப வைக்கவேண்டும் – அது அவர்களின் கடமை! இது ஒன்றும் வேண்டுகோள் அல்ல. இது தமிழ்நாட்டின் உரிமை. தமிழ்நாட்டு உரிமையை மதிக்காத ஆட்சி என்றால், மக்கள் மதிக்கமாட்டார்கள்.
இன்றைய சூழலில், முதலில் தமிழ்நாட்டு உரிமைகள் காப்பாற்றப்படவேண்டும்.
இரண்டாவது, நீங்கள் கவனமாக இருந்து, தமிழ்நாட்டை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பது, அவர் என்னை சந்தித்தபோதுகூட நான் சொன்ன ஒரு செய்தியாகும்.
ஆகவே கொள்கைக்குத்தான் முதலிடம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், கொள்கையைச் சொல்லாத ஆட்சியே வர முடியாது. அப்படியே வந்தாலும், நிலைக்க முடியாது என்பதுதான் வரலாறு. ஆச்சாரியாருடைய ஆட்சி, அதற்கு ஒரு நல்ல உதாரணம்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், முடிந்தவரை அவர் சொல்லியிருக்கிறார். ஆனால், எந்த அளவிற்கு நடந்து காட்டுகிறார், எந்த அளவிற்கு ஒத்துழைப்பை இவர் பெற முடியும் என்பதைவிட, ‘‘உறவுக்குக் கைகொடுக்கும் அதே நேரத்தில், உரிமைக்குக் குரல் கொடுப்பதில் என்றைக்கும் தவறக்கூடாது’’ என்பதுதான் எங்களுடைய நிலை!
பொறுத்திருந்து பார்ப்போம்!
செய்தியாளர்: அரசியல் ரீதியாக, தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகிய கட்சிகள், தி.மு.க.வைக் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. குறிப்பாக ம.தி.மு.க. கூட விமர்சனம் செய்திருக்கிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: இதுவரையில் தி.மு.க. கூட்டணியில் இருந்தவர்கள், ‘‘கொள்கைக் கூட்டணி’’ என்று சொன்னவர்கள், இன்று தி.மு.க.வை விமர்சிக்கிறார்கள் என்றால், அவர்களுடைய மனசாட்சிதான் இதற்குப் பதில் சொல்லவேண்டும்.
செய்தியாளர்: தமிழ்நாட்டில், ‘‘தி.மு.க. கூட்டணி என்ற ஒன்றே இல்லை’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொல்லியிருக்கிறதே?
தமிழர் தலைவர்: என்ன செய்வது? அது தற்போது அவர்கள் பார்வை.
– இவ்வாறு செய்தியாளர்களிடையே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறினார்.
