சிலருக்குப் பெயரோடு ஊர் ஒட்டிக் கொள்ளும். வேறு சிலருக்கோ அவர்கள் செய்யும் வேலையின் பெயர் ஒட்டிக் கொள்ளும். அப்படி ஒரு பெயர்தான் “அக்ரி” ஆறுமுகம். பெரம்பலூரில் வசிக்கும் இவர் பெரியார் பெருந்தொண்டர் ஆவார்.
வேளாண்மைத் துறையில் (Agriculture) பணி செய்ததால் இந்த “அக்ரி” என்பது ஒட்டிக் கொண்டது. பின்னாளில் நெடுங் காலம் வங்கி ஊழியராகப் பணி செய்தார். எனினும் அடைமொழி மாறவில்லை.
திராவிடர் கழகத்தில் இயங்கும் பெரியார் பெருந்தொண்டர்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. எந்தவொரு நிகழ்வு என்றாலும், இளைஞர்களுக்கு ஈடுகொடுத்து “ஓடியாடி” வேலை செய்வார்கள். கொடி கட்டுவது, நாற்காலிகள் எடுத்துப் போடுவது, தேநீர் வழங்குவது என எந்த வேலையையும் “கவுரவம்” பார்க்காமல் செய்வார்கள்.
எங்கே ஒரு சிறு நிகழ்ச்சி என்றாலும் தூரம் மற்றும் பயணச் சிரமத்தைப் பார்க்காமல் வந்துவிடுவார்கள். அதனாலும் தான் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது. அப்படியான சுறுசுறுப்பான இளைஞர், எந்த நேரமும் சிரித்த முகத்தோடு காணப்படும் “அக்ரி” ஆறுமுகம் அவர்களை, அவரின் வீட்டில் சந்தித்தோம்.
அய்யா வணக்கம்! எப்போது நீங்கள் கொள்கைக்கு வந்தீர்கள்?
எனக்கு உடன்பிறந்தோர் 4 சகோதரர்கள், 1 சகோதரி. அதில் இரண்டு சகோதரர்கள் திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்தவர்கள். விடுமுறைக்கு வரும்போது பெரியார் குறித்தும், அவரின் கொள்கைகள் குறித்தும் பேசுவார்கள்.
அதைக் கேட்டு, அந்தச் சிந்தனை எனக்கும் வந்தது. அதேபோல பள்ளி விடுமுறையின் போது அத்தை ஊரான திட்டக்குடிக்குச் செல்வோம். அங்கே நடந்த ஒரு பெரியார் கூட்டத்திற்கு எங்கள் அப்பா எங்களை அழைத்துச் சென்றார். அப்பாவின் தோள் மீது ஏறி அமர்ந்து, பெரியாரை அப்போது பார்த்தேன்.
உங்களின் சொந்த ஊர் எது? நீங்கள் என்ன படித்துள்ளீர்கள்?
பெரம்பலூர் மாவட்டம் வடக்கலூரில் நான் பிறந்தேன். அஞ்சலை அம்மாள், நடேசன் என்பது பெற்றோரின் பெயர். 1949 இல் பிறந்த எனக்கு இப்போது 77 வயதாகிறது. 1965 இல் எஸ்.எஸ்.எல்.சி. முடித்தேன். பிறகு பியுசி படிக்க முயற்சி செய்தேன். மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.
அப்போது திருச்சியில் நேசனல் கல்லூரி, ஜோசப் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி ஆகிய மூன்று மட்டுமே இருந்தன. இந்நிலையில் தான் தந்தை பெரியார் முயற்சியில், திருச்சியில் பெரியார்
ஈ.வெ.ரா. கலைக் கல்லூரி 1965ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அங்கு முதல் ஆண்டிலேயே நான் பியுசி சேர்ந்தேன்.
பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேளாண்மைப் (Agriculture) பிரிவில் சேர்ந்தேன். அங்குதான் தோழர் பூ.சி. இளங்கோ படித்துக் கொண்டிருந்தார். நானும் பெரியார் கொள்கையில் இருந்ததால் அறிமுகம் ஆனோம்.
பின்னாளில் திராவிடர் மாணவர் கழகத் தலைவராக அவரும், செயலாளராக நானும் இருந்தேன். அப்போது சிதம்பரம் மாவட்டத் தலைவராக கிருஷ்ணசாமி இருந்தார். அடிக்கடி அவரைச் சந்திப்போம்.
மாணவர் கழகத்தின் சார்பில் கூட்டம் ஏற்பாடு செய்வோம். தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி மற்றும் இயக்கப் பேச்சாளர்கள் பேசியுள்ளனர். கல்வி வளாகத்தில் மட்டுமின்றி, வெளியில் பொதுக் கூட்டங்களும் நடத்தியுள்ளோம்.
நீங்கள் எங்கு பணி செய்தீர்கள்?
1972ஆம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்தேன். ஒரே வாரத்தில் வேளாண்மைத் துறையில் எனக்கு வேலை கிடைத்தது. வேப்பூர் அருகே நல்லூர் கிராமத்தில் தான் முதன்முதலில் பணியில் சேர்ந்தேன்.
பிறகு பெண்ணாடம் பகுதிக்குப் போனேன். அங்கு பேருந்து நிலையம் அருகில் “பகுத்தறிவாளர்கள் கட்டடம்” என ஒன்று உள்ளது. அதில் நூலகமும் இருக்கும். தந்தை பெரியார் தொடங்கி வைத்த கட்டடம் அது. பெண்ணாடத்தில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தேன். வேளாண்மைத் துறையில் (Agriculture Department) பணி செய்ததால் “அக்ரி” ஆறுமுகம் என்கிற பெயர் ஏற்பட்டது.
அதேநேரம் அரசு வேலையில் இருந்தவாறே வங்கித் தேர்வு எழுதினேன். அதில் வெற்றியும் பெற்று எஸ்பிஅய் வங்கியில், முதன்முதலில் துறையூரில் பணிக்குச் சென்றேன். அங்குள்ள இயக்கத் தோழர்களுடன் அறிமுகம் ஏற்பட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டேன். மேலாளர் வரை பதவி உயர்வு பெற்று 30 ஆண்டுகள் வங்கிப் பணியை நிறைவு செய்தேன்.
தங்களின் திருமணம் எப்போது நடைபெற்றது? அதுகுறித்துக் கொஞ்சம் நினைவு கூறுங்கள்?
திராவிடர் கழகத் தலைவர் என்பது மட்டுமல்ல; நமது குடும்பங்களின் தலைவர் என்றும் நாம் அழைத்து வருகிறோம். அதற்கு மிக, மிகப் பொருத்தமானவர் நமது ஆசிரியர் அவர்கள். ஆமாம்! 1984 ஆம் ஆண்டு ஆசிரியர் தான் எங்களுக்கு இணையேற்பு நிகழ்வைப் பெரம்பலூரில் நடத்திக் கொடுத்தார். இணையர் பெயர் குண.கோமதி. சேலத்தில் நமது இயக்கத்தைச் சேர்ந்த குழந்தைவேலு அவர்களின் மகள். இணையர் மருத்துவராக இருக்கிறார். பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு மருத்துவத் துறை இணை இயக்குநராகவும் இருக்கிறார்.
எங்களுக்கு இரண்டு மகன்கள். இருவருக்குமே சுயமரியாதைத் திருமணம் தான் நடைபெற்றது. இரண்டாவது மகனுக்கு ஆசிரியர் தலைமையில் பெரியார் திடலில் நடைபெற்றது.
தொடர்ந்து அரசுப் பணியில் இருந்த தாங்கள், ஓய்விற்குப் பிறகு எப்படியான இயக்கப் பணிகளில் இருந்து வருகிறீர்கள்?
நான் மட்டுமல்ல; நமது தோழர்கள் பலரும் அரசு வேலைகளில் இருந்தாலும் பகுத்தறிவாளர் கழகத்தின் மூலம் பணி செய்தே வருகிறார்கள். போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க முடியாது. மற்றபடி நிகழ்ச்சிகள், மாநாடுகள் எனத் தொடர்ந்து பங்களிப்பைச் செய்து வந்துள்ளேன்.
பெரியாரை நேரில் சந்தித்துப் ஒளிப்படம் எடுத்துள்ளேன். அவரின் இறுதி நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளேன். அதுமட்டுமின்றி, மணியம்மையார் தலைமையில் நடைபெற்ற இராவண லீலா நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளேன்.
பணி ஓய்விற்குப் பிறகு நகரத் தலைவராக இருந்து, தற்சமயம் காப்பாளராக இருந்து வருகிறேன். தோழர்களுக்குச் சுயமரியாதைத் திருமணமும் செய்து வைத்துள்ளேன். அதேபோல இளைஞர்கள் சிலரை நமது இயக்கத்திலும் இணைத்துள்ளேன்.
தற்போது பயணம் செய்வது கொஞ்சம் குறைந்துவிட்டாலும், இயக்க வேலைகளும், தோழர்கள் சந்திப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
எங்கள் வீடு தான் இயக்க அலுவலகமாகச் செயல்பட்டு வருகிறது. அண்மையில் எங்கள் கிராமத்தில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வந்தோம். ஓய்விற்குப் பிறகு இயக்கப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டேன். பெரம்பலூரில் பொது இடத்தில் கோயில் கட்ட முயற்சி செய்ததை, தோழர்கள் இணைந்து முறியடித்தோம். அப்படி கோயில் கட்ட முயன்றவரை, நமது கொள்கையின் பக்கமும் அழைத்து வந்தோம்.
பெரம்பலூர் பேருந்து நிலையம் உள்ளே பெரியார் அம்பேத்கர் புத்தக நிலையம் உள்ளது. அங்கு நிறைய நூல்கள் உள்ளன. தோழர்கள் சந்திக்கும் இடமாகவும் அது உள்ளது.
உடற்கொடைக்குப் பதிவு செய்துள்ளேன். இறப்பிற்குப் பிறகு எந்தச் சடங்குகளும் கூடாது எனவும் சான்றிதழ் தயாரித்து வைத்துள்ளேன்.
சில மாதங்களுக்கு முன், நான் உடல்நலம் சரியில்லாமல் இருந்தேன். அப்போது ஆசிரியர் அவர்கள் வீட்டிற்கு வந்து நலம் விசாரித்துச் சென்றார்கள். எனக்குத் திருமணம் செய்து வைத்து, எங்கள் பிள்ளைகளுக்கும் செய்து வைத்து, அவ்வப்போது தொலைப்பேசியில் நலம் விசாரித்து, நேரிலும் வருகை தரும் தலைவர் தான், எங்கள் இயக்கத்திற்குக் கிடைத்த ‘ஒரு பொக்கிசம்’, என ‘அக்ரி’ ஆறுமுகம் தெரிவித்தார்.
