மோடி 12 ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் அடி எடுத்து வைக்கிறார்.
இந்தப் 12 ஆண்டுகளில் அவர் செய்த சாதனைகள்! தொடர்பான பட்டியலில் ராமன் கோவில் முதலிடம் பெற்றுள்ளது. இது பாஜக வெளியிட்ட வாழ்த்து அறிக்கையில் உள்ளது. அதாவது 500 ஆண்டுகள் ஏங்கித்தவித்த ராம்லல்லாவை (சிறுவன் ராமன்) இல்லம் சேர்த்து உலக ஹிந்துக்களின் கனவை நினைவாக்கியவர் பிரதமர் மோடி. ராமன் கோவில் கட்டியதால் இந்தியாவில் பொருளதார தொழில் வளர்ச்சி எந்த அளவு உயர்ந்துள்ளது? இதில் ராமன் கோவிலின் பங்கு ஏதாகிலும் உண்டா? என்ற கேள்வி எழுப்பினால் நீங்கள் தேசத்துரோகிகள்!
காணிக்கை பெருகும்!
ராமன் கோவில் இரண்டு முறை கட்டப்பட்டு இரண்டு முறை திறக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் கோவில் காணிக்கை தொடர்பாக தணிக்கைக் குழுவில் விவாதம் ஒன்று உருவானது. அதாவது தொடக்க காலத்தில் காணிக்கையையும், 2026 ஆண்டுக்குப் பிறகான காணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சுமார் ரூ. 7 முதல் ரூ. 10 கோடி வரை குறைந்துள்ளது, குறிப்பாக வசந்தகாலம் தொடங்கும் ஆகஸ்ட் முதல் கோடை ஆரம்பமாகும் ஏப்ரல் வரை வட இந்தியக் கோவில்களில் கூட்டம் அதிகம் வரும். இந்த காலகட்டத்தில் பல்வேறு திருவிழாக்களும் உண்டு. பிள்ளையார் சதுர்த்தி தொடங்கி சங்கராந்தி ஹோலி வரை இந்த காலகட்டத்தில் கோவில்களில் காணிக்கை பெருகும். இந்த காலகட்டத்தில் தான் ஏதாவது ஒரு பெயரில் மெகா, மகா, அர்த் (பாதிகும்பமேளா) (ஸவ) கால்வாசி கும்பமேளா போன்றவை நடக்கும்.
ஒவ்வொரு முறையும் மார்ச் மாதம் நடக்கும் உண்டியல் எண்ணிக்கையில் இந்த ஆண்டு நடந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது காணிக்கையில் பெரும் வேறுபாடு காணப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தணிக்கையாளர் களிடையேயும் கோவில் நிர்வாகத்திற்கும் காரசாரவிவாதம் நடந்தது. இது ஊடகம் வரைக்கும் சென்றது.
பைசாபாத் நகரில் இருந்து வெளிவரும் ஹிந்தி நாளிதழ் ஒன்று இந்த காணிக்கை திருட்டு தொடபாக சிறிய செய்தி ஒன்றை வெளியிட்டது.
நடவடிக்கை இல்லை
மோடியின் ஆட்சிக்கு வர முக்கிய காரணமாக இருந்த ராமன் கோவில் காணிக்கை திருட்டு என்பது சாதாரண செய்தி அல்ல. இந்த செய்தி வந்தது 04.06.2026. ஆனால், 07.06.2026 வரை இந்தச் செய்தி தொடர்பாக சில நாளிதழ்கள் மிகவும் தயங்கித்தயங்கி வெளியிட்டன. இதனால் மக்களிடையே அய்யம் எழத் துவங்கியது. ஆனால் கோவில் நிர்வாகம் இந்த திருட்டு தொடர்பாக வதந்தி என்று கூறவில்லை அல்லது செய்தி வெளியிட்ட நாளிதழ் மீதோ நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த விவகாரம் வெறும் வதந்திதான் என்றால், கோவிலின் காணிக்கையிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் திருடப்படவில்லை என்பதை கோவில் நிர்வாகமும், சாமியார் ஆதித்யநாத் அரசும் உறுதியான முறையில் முன்வந்து தெளிவுபடுத்த வேண்டும்.
ஜூன் 7 அன்று, அகிலேஷ் யாதவ் முதன்முறையாக இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்தார். பிறகு நாடெங்கும் இந்த விவகாரம் பற்றி எரியத் தொடங்கியது.
அகிலேஷ் ட்வீட் செய்த பிறகுதான், அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு செய்திகள் வரத் தொடங்கின.
தேசிய பத்திரிகையாளர்களுக்குத் தகவல் தெரிந்திருந்தும், அதை எழுதுவதற்கோ வெளியிடுவதற்கோ தைரியம் இல்லை.
அவர் சொன்னார் இவர் சொன்னார் என்றுதான் எழுதினார்களே தவிர கோவில் நிர்வாகத்திடமும், சாமியார் முதலமைச்சரிடமும் கேள்வி கேட்க மனமில்லை (வட இந்தியாவைப் பொறுத்தவரை சாமியார் முதலமைச்சர் உள்ளிட்ட சில மாநில முதலமைச்சர்களிடம் தொலைபேசியில் யார் வேண்டுமானாலும் பேசலாம், அவர்களும் பதில் கூறுவார்கள்.)
அப்படி இருக்க இந்த காணிக்கைத் திருட்டு தொடர்பாக சாமியார் முதலமைச்சரிடம் கேட்கும் துணிச்சல் யாருக்குமே இல்லையா?
ராமன் கோவிலின் அடிக்கல் நாட்டு விழா முதல் திறப்பு விழா வரை ஊடகங்கள் இரவும் பகலும் உழைத்தன. ஊடகங்ககள் அதனை பெரிய நிகழ்வாக மாற்றின!
அப்படிப்பட்ட சூழலில், எதிர்க்கட்சியின் ஒரு பெரிய தலைவர் காணிக்கை திருட்டு எனக் குற்றம் சாட்டிய பிறகு முதல் முதலாக வட இந்தியாவின் முக்கிய ஹிந்தி நாளிதழ் வாரணாசி, கான்பூர், அலகாபாத், கோரக்பூர் பதிப்பில் ஆதாரங்களை மேற்கோள் காட்டி திருட்டு நடந்ததாகவும், திருடர்கள் பிடிபட்டதாகவும் செய்தி வெளியிடுகிறது. ஆனால், உ.பி.யின் தலைநகரான லக்னோ பதிப்பில் இந்தச் செய்தி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்த திருட்டு நிகழ்வு – இது மிகவும் அதிர்ச்சியான செய்தியாகும்; ராமன் கோயிலின் காணிக்கைத் தொகையிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் தொடர்ந்து களவு போயிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கோயில் அறக்கட்டளைக்குத் தெரிந்தே நடந்துள்ளது.”
அறக்கட்டளையும் மறுக்கவில்லை
அகிலேஷ் ட்வீட்டிற்குப் பிறகு, ஜூன் 7ஆம் தேதி மாலையே சிறீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் அறிக்கை ஓன்றை வெளியிட்டார்.
அதில் அவர், காணிக்கை குறித்த தணிக்கை நடந்து வருவதாகவும், இதில் திருட்டு தொடர்பாக குற்றச்சாட்டு எங்கள் பார்வைக்கு இதுவரை வரவில்லை என்றும் தெளிவாகக் கூறினார்.
அந்த அறிக்கையின் தமிழாக்கம்: “சிறீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரம் தனது பல்வேறு பணிகளோடு தணிக்கையையும் அவ்வப்போது செய்து வருகிறது. உண்டியல் எண்ணும் அறையும் தணிக்கையும் செய்யப்படுகிறது. அந்த அறையின் தணிக்கையை அறக்கட்டளையின் அறங்காவலர்கள், தொண்டர்கள் மற்றும் ஸ்டேட் பேங்க் அதிகாரிகள் இணைந்து செய்கிறார்கள். இந்தப் பணி பல நாட்களுக்குத் தொடரும்” என்று மட்டும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். அதாவது அவர் கோடிக்கணக்கான ரூபாய் காணாமல் போனதை நேரடியாகவும், திட்டவட்டமாகவும் மறுக்கவில்லை.
அகிலேஷ் யாதவின் அடுத்தடுத்த கேள்விகள்
சம்பத் ராயின் இந்த பதிலுக்கு அகிலேஷ் யாதவ் மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினார். “கொடுக்கப்பட்ட விளக்கம் தெளிவாக இல்லை. இது இவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் நடக்கும் ஒரு சாதாரண விஷயம் போலத் தோன்றுகிறது. மேலும் இது எவ்வளவு சாதாரணமானது என்றால், இப்போது அவர்கள் இதை ஒரு திருட்டு குற்றமாகவே கருதவில்லை. அறிக்கை வெளியிட்ட சம்பத்ராயின் முகபாவனையும், உடல் மொழியும் விரக்தியுடனும் ஏமாற்றத்துடனும் காணப்படுகின்றன.

அறக்கட்டளையின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக அமர்ந்து விளக்கம் அளிக்க வேண்டும். தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்க சிசிடிவி ஆதாரங்களின் உதவியை நாட வேண்டும்.
அனைத்து அறங்காவலர்களும் ஒன்றாக அமர்ந்த உடனேயே உண்மை உடனடியாக வெளிவந்துவிடும், கோவில் அறக்கட்டளையும் மாநில அரசும் காட்டும் மவுனத்தைப் போலவே அறக்கட்டளையின் விளக்கமும் சந்தேகத்திற்குரியதாக உள்ளது” என்றார் அகிலேஷ்.
காங்கிரஸ் வழிமொழிந்தது
சம்பத் ராயின் அறிக்கைக்குப் பிறகு அகிலேஷ் எழுப்பிய கேள்விகள்தான் இவை. அகிலேஷ் குற்றச்சாட்டை ‘இந்தியா’ கூட்டணி’யின் தோழமைக் கட்சியான காங்கிரஸும் வழிமொழிந்துள்ளது.
உத்தரப்பிரதேச காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய் ராய் உயர்மட்ட விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சாக்குப்போக்குகளைக் கூறுவதற்குப் பதிலாக, விசாரணை அறிக்கையை நாட்டு மக்கள் முன் வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சஞ்சய் சிங் எம்.பி. அம்பலப்படுத்துகிறார்
அகிலேஷ்க்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கும் குரல் கொடுத்துள்ளார். அவர் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளதோடு, காட்சிப் பதிவு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “ஜெய் ஹிந்த் நண்பர்களே. பாரதிய ஜனதா கட்சியினரும், அவர்களோடு தொடர்புடையவர்களும் ‘நன்கொடை திருடர்கள்’ என்றும், ராமனின் பெயரால் அவர்கள் நன்கொடை திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்றும் நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.
அவர்கள் நில ஊழல் செய்துள்ளனர். இதற்கு முன்பும் இவர்களைப் பற்றி பலமுறை நாம் அம்பலப்படுத்தி யிருக்கிறோம். இப்போது வெளிவந்துள்ள புதிய விவகாரம், ராமனின் உண்டியல் பணத்தைத் திருடிய விவகாரமாகும். பொதுமக்கள் மிகுந்த பக்தியுடன் ராமனுக்கு வழங்கும் காணிக்கையில் திருட்டு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இதில் சுமார் ரூ.7 முதல் ரூ.10 கோடி வரை திருடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. நாங்கள் இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்திப் பேசிக் கொண்டிருந்தபோது, பா.ஜ.க-வினர் ‘இது பொய், இது தவறு, அப்படி எதுவும் நடக்கவே இல்லை’ என்று மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தனர்.
‘ஜாகரன்’ செய்தித்தாள் காணிக்கையைத் திருடியதற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதைத் தெளிவாகக் கூறியது. தணிக்கை விவகாரம் பெரிதான பிறகு சிசிடிவியை கோவில் நிர்வாகம் ஆய்வு செய்தது.
சிசிடிவி காட்சிகளில் இந்தக் காணிக்கைத் திருட்டு சிக்கியுள்ளது. அவினாஷ் சுக்லா என்பவரிடமிருந்து திருடப்பட்ட ரூ.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று சஞ்சய் சிங் கூறுகிறார்.
காவல் துறைப் பதிவும் இல்லை
திருட்டுக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ராமன் கோவில் அறக்கட்டளை அனைவர் முன்னிலையிலும் தெளிவாக விளக்க வேண்டும். அப்போதுதான் திருட்டு நடந்ததா இல்லையா என்ற உண்மை தெளிவாகும்.
அகிலேஷ் அந்தத் திருட்டு தொடர்பாக செய்தி வெளியிட்ட ஜூன் 7 முதல், இந்தக் கட்டுரை அச்சேறும் வரையில் கோடிக்கணக்கான ரூபாய் திருட்டு தொடர்பாக எந்த விளக்கமும் இல்லை.
அயோத்தி காவல்துறையின் பதிவுப் பக்கத்திலும் இது பற்றி எந்தத் தகவலும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
‘தைனிக் பாஸ்கர்’ நாளிதழில் இரண்டு அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ஒன்று, அம்மாநில துணை முதலமைச்சர் பிரிஜேஷ் பாதக்கினுடையது; இரண்டாவது, அகிலேஷினுடையது. இவர்களைத் தவிர, சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் அமைச்சராக இருந்த பவன் பாண்டேயின் அறிக்கையும் அதில் உள்ளது. அவரும் இந்த நிதியைக் கையாடல் செய்தது தொடர்பாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.
நாங்கள் ஏன் பதிலளிக்க வேண்டும்?
சமூக ஊடகங்களில் பா.ஜ.க தலைவர் பங்கஜ் சவுத்ரியின் அறிக்கை ஒன்று உலா வருகிறது, அது அவருடைய பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து எடுக்கப்பட்டது. ஜூன் 8 அன்று ஜாஸூனில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, செய்தியாளர்கள் பா.ஜ.க மாநிலத் தலைவர் பங்கஜ் சவுத்ரியிடம் கேள்வி எழுப்பினர். “கோயில் பணம் ரூ.7 கோடி காணாமல் போய்விட்டதாக அகிலேஷ் கூறியுள்ளாரே” என்று செய்தியாளர் கேட்டார்.
அதற்கு பங்கஜ் சவுத்ரி, “இது அரசாங்கத்தின் விஷயம் அல்ல. கோயில் நிர்வாகம் இதற்குப் பதிலளிக்கும்” என்றார். செய்தியாளர்கள் மீண்டும், “பணம் காணாமல் போயிருக்கிறது. இது ஸநாதனத்தின் மீதான தாக்குதல்” என்றனர்.
அதற்கு பங்கஜ் சவுத்ரி, “எங்கே, யார் சொல்கிறார்கள் காணாமல் போயிருக்கிறது என்று?” எனக் கேட்டார். செய்தியாளர்கள் மீண்டும், “அகிலேஷ் யாதவ் சொல்லியிருக்கிறார்” என்றனர். அப்போது பங்கஜ் சவுத்ரி, “அகிலேஷ் யாதவ் சொல்லிக்கொண்டேதான் இருப்பார், அதற்கெல்லாம் நாங்கள் பதிலளித்துக் கொண்டிருக்க முடியுமா?” என்றார். குற்றச்சாட்டு நிதி கையாடல் பற்றியது, மதம் தொடர்பாக எந்தவொரு விஷயமும் மட்டும் பா.ஜ.க தலைவர்களுக்குத் தேசிய விவகாரமாகி விடுகிறது.

‘அமர் உஜாலா’ நாளிதழின் செய்தி பகுப்பாய்வு
ஜூன் 9-ஆம் தேதி வெளிவந்த ‘அமர் உஜாலா’ நாளிதழில், இந்த விவகாரம் குறித்த தகவல்கள் வெளிப்படுத்துவது என்ன? “காணிக்கை குறித்த அரசியலுக்கு மத்தியில் வெளியான புள்ளிவிவரங்கள். அறக்கட்டளையின் வங்கி கணக்கில் ரூ.140 கோடி, ஒவ்வொரு மாதமும் சுமார் 5 கோடி காணிக்கை கிடைக்கிறது. இதில், ஒவ்வொரு நாளும் காணிக்கை எண்ணப்படுவதாகவும், அப்போது 40 பேர் உடனிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், மார்ச் மாதத்தில் நடைபெற்ற அறக்கட்டளைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி அறிக்கையின் புள்ளிவிவரங்களும் உள்ளன.
அதாவது, ‘அமர் உஜாலா’வின் அறிக்கையின் மூலம் எவ்வளவு காணிக்கை வருகிறது, அது எவ்வாறு எண்ணப்படுகிறது என்பது விரிவாக உள்ளது
ஆனால், ரூ.7 முதல் ரூ.10 கோடி திருட்டுக் குற்றச்சாட்டு என்ன ஆனது என்பது மட்டும் தெரியவரவில்லை.
இவ்வளவு முக்கியமான ராமன் கோவில் காணிக்கை திருட்டு தொடர்பாக. முதலமைச்சர் முதல் பிரதமர் வரை அனைவரும் அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும்.
‘பாஸ்கர்’ நாளிதழ் தகவல்
ராமன் கோவில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா திடீரென ஒரு நாள் அயோத்திக்கு வந்து அறக்கட்டளை நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
அதன் பிறகு இந்த முறைகேட்டில் ஒன்பது பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், வங்கி அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் ஆதாரங்களை மேற்கோள் காட்டி ‘பாஸ்கர்’ நாளிதழ் கூறியுள்ளது.
மோசடிப் பணம் அறக்கட்டளைக் கணக்கில் வரவு
‘ஜாக்ரண்’ நாளிதழ் செய்தி அறிக்கையின் முக்கிய விவரங்கள்:
ஊழியர் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து அறக்கட்டளை லட்சக்கணக்கான ரூபாய்களை மீட்டெடுத்துள்ளதாக ‘ஜாக்ரண்’ அறிக்கை தெரிவிக்கிறது.
பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த அவினாஷ் சுக்லா என்ற ஊழியரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, தனது கணக்கில் அந்தப் பணம் இருப்பதை அவன் ஒப்புக்கொண்டான். இதன் பிறகு, காவல் துறைக் குழு அவனை வங்கிக்கு அழைத்துச் சென்று, அவனது கணக்கில் இருந்த மோசடி செய்த ரூ.5 லட்சத்தை மீண்டும் அறக்கட்டளையின் கணக்கிற்கு மாற்றச் செய்தது.
தங்கள் ஊழியர் அப்படிப்பட்ட காரியத்தைச் செய்யவில்லை என்று அந்த வங்கி மறுப்புத் தெரிவிக்க வேண்டும், அல்லது வங்கிப்பணியாளர்கள் மீது எஃப்.அய்.ஆர். பதிவு செய்திருக்க வேண்டும்.
தங்கள் தொழில் தர்மத்தை விடுத்து, கடந்த 12 ஆண்டுகளாக இந்தியாவின் பத்திரிகைத்துறை மத அரசியலில் மூழ்கிக் கிடக்கிறது. அதுவும் ஆன்மீக பூமியின் மிகச்சிறந்த நாயகனோடு தொடர்புடைய ஒரு விஷயத்தில், ஏன் இவ்வளவு தப்பித்துப் பிழைக்கும் தற்காப்பு அறிக்கையிடல் நடக்கிறது? துணிச்சல் ஏன் இவ்வளவு குறைவாகக் காணப்படுகிறது? இந்த நாட்களையும் வியப்போடுதான் பார்க்க வேண்டியுள்ளது.
