கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுகிறது
திருவனந்தபுரம், ஜூன் 12 கேரளத்தில் வயநாடு, கோழிக்கோடு உள்பட சில பகுதிகளில் ஷிகெல்லா நோய் பரவி வருகிறது. இந்நிலையில் நிபா வைரஸ் காய்ச்சல் மீண்டும் பரவி வருவது தெரியவந்துள்ளது. கோழிக்கோடு அருகே உள்ள ராமநாட்டுகரை பகுதியை சேர்ந்த 41 வயதான ஒருவர் கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த வாலிபருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நிபா பாதித்தவருடன் நெருக்கமாக இருந்த 77 பேரின் பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே வயநாடு மாவட்டத்தில் நென்மேனி உள்பட சில பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு ஷிகெல்லா நோய் உறுதி செய்யப்பட்டதால் அந்த பகுதி பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் 14ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் 2 பேர் சுட்டு கொலை
வன்முறை நீடிக்கிறது
இம்பால், ஜூன் 12 மணிப்பூரில் மெய்டீஸ் இனத்தை சேர்ந்த ஒய். யும்னம் கெம்சந்த் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வருகிறது. இங்கு கடந்த ஆட்சியை போலவே தற்போதும் இனவன்முறை சம்பவங்கள் தொடர்கதையாக நீடிக்கின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போன 6 நாகா இன மக்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் காங்போக்பி மாவட்டத்தில் குல்துஹ் குகி என்ற சிறிய கிராமத்தின்மீது நேற்று (11.6.2026) அதிகாலை 4.55 மணிக்கு சிலநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் பொதுமக்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 30 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனிடையே, உக்ருல் மாவட்டத்தில் ஆயுதங்களுடன் திரிந்த 8 கிராமவாசிகளை பாதுகாப்பு படையினர் சிறைப்பிடித்துள்ளனர். அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர் பின்னர் கடும் எச்சரிக்கைக்கு பிறகு அவர்களை விடுவித்தனர்.
