ஒரு சட்டமன்றத் தேர்தல் முடிந்து, தமிழ்நாட்டின் அரசியல் சூழல் இத்தனை மாற்றங்களையும், குழப்பங்களையும் சந்திக்கும் என்ற நிலை நெடுங்காலமாக இருந்ததில்லை. ஆனாலும் தற்போது உருவான சூழல், ஒரு சுழலைப் போன்று பலரையும் சுற்றவைத்துக் கொண்டுள்ளது.
இந்தச் சுழலும், சூழலும் சுருட்ட முடியாத வலிமையான கொள்கைக் கோட்டையாகத் திராவிடர் கழகம் தொடர்ந்து களத்தில் நின்று கொண்டிருக்கிறது. அவ்வப்போதைய அரசியல் சூழல்களை அது கவனிக்கிறது – தலைவர் வழிகாட்டுகிறார் எல்லோருக்கும்! ஆனால், அவற்றைக் கொண்டு எந்த திடீர் முடிவுகளையும் இயக்கம் எடுப்பதில்லை; எடுக்க வேண்டியதில்லை. ஏனெனில், இதன் கொள்கைப் பாதை தெளிவானது. எவரிடமும் எதையும் எதிர்பார்க்கும் பழக்கமற்றது. அதனால், ஏமாற்றங்களுக்கு உள்ளாவது என்ற பேச்சுக்கே இடமில்லை. தேர்தல்களின்போது யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட, யார் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் முதற்கவனம் செலுத்தக் கூடியது. ஜனநாயகத்தின் முடிவுகள் எத்தகையதாக இருந்தாலும், ஆட்சியில் இருப்பது யாராக இருந்தாலும், அதனை அளவிடும் கருவி, பெரியார் கொள்கைகளே! அதைக் கொண்டே ஒவ்வொரு பிரச்சினையும் அளந்து பார்க்கப்படும் – ஆதரவோ, எதிர்ப்போ அதன் அடிப்படையிலேயே இருக்கும். திராவிடர் கழகத்தின் பணி இவற்றோடு முடிந்துவிடக் கூடியதல்ல. அன்றாட அரசியல் பிரச்சினைகளுக்கும், நாட்டுநடப்புகளுக்கும் முகம்கொடுப்பதோடு, ஊடகங்களுக்குச் செய்தி கொடுப்பதோடு, நிலைப்பாடுகளை அறிவிப்பதோடு அதன் பணி நிறைவடையக் கூடியதல்ல!
நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் சூழல்களைக் கட்டமைப்பது அதன் பணி! சீர்கேடுகளை அடியோடு மாற்றி புரட்டிப் போடுவது அதன் பணி! ஆதிக்கம் சமூகத் தளத்தில் இருந்தாலும், அரசியல் – ஆட்சி வடிவில் இருந்தாலும், அவற்றைத் தகர்த்தெறிந்து, சமூகநீதியும், சம உரிமையும் தழைக்கச் செய்வது அதன் பணி! அதற்காக மக்களின் மனங்களைத் தயார்படுத்துவதும், பரப்புரைகளை மேற்கொள்வதும், விழிப்புணர்வூட்டுவதும், என்ன பிரச்சினை – யார் எதிரி என்பதே அறியாமல் ஊடகங்களின் மடைமாற்றலுக்கு இலக்காகித் திரியும் மக்களை நெறிப்படுத்துவதும், மக்களே இப் பரப்புரைகளுக்கு எதிராக நின்றாலும் – அவர்களைச் சந்தித்து, உரையாடல் நிகழ்த்தி, நம் கருத்தை அவர்கள் ஏற்கச் செய்வதும், எத்தகைய எதிர்ப்புகள் ஆதிக்கச் சக்திகளிடமிருந்து எழுந்தாலும் அவற்றைப் புறங்காணச் செய்து வெற்றிக் கொடி நாட்டுவதும், மக்கள் பின்னே நாம் செல்லாமல் – மக்களை நம் பின்னால் வர வைப்பதும் இப் பணியின் வழிமுறைகள்!
பகுத்தறிவும், சமூகநீதியும், பெண்ணுரிமையும், மனித உரிமைகளும் மண்ணில் நிலைப்பெறுவதற்கான பணிகளில் சுயநலம் துறந்து, சுக துக்கங்கள் மறந்து, சொந்தக் காசில் ஊருக்கு உழைப்பது கருஞ்சட்டைத் தொண்டர்களின் வாழ்முறை! ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைத்தனத்தில் உழன்று, அதன் நாற்றத்தையும் பழகி, அதிலேயே புழங்கிக் கொண்டிருந்த சமூகத்தை ஒரு நூறாண்டுக்குள் சிந்திக்கச் செய்து, மீட்டெடுத்து, முன்னேற்றிக் கொண்டுவருவது இமாலயப் பெரும்பணி! அதனைச் சாதிக்கக் ‘கட்டுப்பாடு’ என்பதையே கடப்பாடு ஆக்கி, வழிநடத்தியது தான் தந்தை பெரியார் இந்த இயக்கத்தை வளர்த்தெடுத்த விதம்! அதிலிருந்து இம்மியளவும் பிசகாமல் கருப்புடை தரித்த நெருப்புப் பிழம்புகளை வழிநடத்துபவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி!
அரசியலில் போட்டியிடாத ஓர் இயக்கம் இத்தகைய எழுச்சியுடனும், தொடர் செயல்பாட்டுடனும், வீரியத்துடனும், எல்லாத் தளங்களிலும் நின்று போராடுகிறது, பிரச்சாரம் செய்கிறது, சலிக்காமல் களத்தில் நிற்கிறது என்கிற வரலாறு திராவிடர் கழகத்திற்கே உண்டு! ‘போராட்டக் களம் சென்று, சிறைக்கோட்டம் புக வேண்டும்’ என்று தலைவர் அழைப்பு விடுத்தால், பட்டி – தொட்டிகளில் இருந்தெல்லாம் பட்டியல் வரும்! ’அடுத்த அய்ந்து ஆண்டுகளுக்குத் திருமணம் செய்து கொள்ளாமல், இயக்கப் பணி ஆற்ற வேண்டும் – எங்கே இளைஞர்கள்?’ என்று தலைவர் கேட்டால், துடித்தெழுந்து கிளம்பும் கருஞ்சட்டைப் படை! இந்தக் கொள்கைப் போராட்டத்திற்குத் தாங்கள் தயாரென்பதைக் காட்ட, சொட்டும் குருதியில் கையொப்பமிட்டுக் கொடுத்த நிகழ்வுகளும் கூட உண்டு! சொந்தங்களை, குடும்பத்தை, பெற்ற பிள்ளையை, உற்ற துணையை விட்டுவிட்டு சிறைக்குத் தயாராகி, செத்து மடிந்த வரலாறும் படைத்ததுதான் இந்த இயக்கம்! ஒரே காரணம் – இன இழிவு நீங்கி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல ‘மானமும் அறிவும்’ உள்ள சமுதாயமாக ஆக்கும் பணியை மேற்கொண்ட தந்தை பெரியாரின் படையணியில், அதை வழிநடத்தும் தலைமையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டுச் செயல்படும் இராணுவப் படையணி இது என்ற உணர்வு தான்! அந்த உணர்வு தான், இந்தித் திணிப்பை ஒழித்துக் கட்டியது, குலக்கல்வித் திட்டத்தை குழிக்குள் தள்ளியது, இராமன், இலட்சுமணன், சீதை உருவங்களைக் கொளுத்தி இராவண லீலாவைக் கொண்டாடி மகிழ்ந்தது, 9000 ரூபாய் வருமான வரம்பாணையை எரித்துச் சாம்பலாக்கியது, மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்தச் செய்தது, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பாதுகாத்துக் கொடுத்தது, காவிரி உரிமையை நிலைநாட்டியது, அடிமைச்சின்னமாம் தாலியை அகற்றி இந்தியாவையே அதிரச் செய்தது, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி கருவறைத் தீண்டாமையைக் கொன்று புதைத்தது… இன்னும் இன்னும் அங்குலம் அங்குலமாய் இந்தச் சமூகத்தைப் புரட்டிப் போட்டுப் புரட்சி செய்தது!
இதோ… இப்போதும் பட்டியல் கேட்டிருக்கிறார் தலைவர்! களம் என்ன? அதைத் தலைவர் முடிவு செய்திருப்பார் – அறிவிப்பார்! இராணுவ வீரர்களிடம் கேட்டுக்கொண்டா தளபதி கட்டளையிடுகிறார்? இது இராணுவக் கட்டுப்பாட்டுக்கும் விஞ்சிய வீரர்களைக் கொண்ட இயக்கம்! அறிவிப்பு வந்த நாளே, முறுக்கேறிய செய்தி திக்கெட்டும் ஒலிக்கிறது! பட்டியலில் இணைத்துக் கொள்ள பெயர்களுக்குப் பரிந்துரைகள் நீளுகின்றன! வயதைக் கணக்கில் கொள்ளாமல், எங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் என வேண்டுகோள்கள் வருகின்றன! எத்தனைப் பேர் என்பது இறுதியாகவில்லை. பட்டியலின் முதல் பெயர் மட்டும் எழுதப்பட்டு விட்டது!
அந்தப் பெயர் 1. கி.வீரமணி… மற்றும் பட்டியல் வருகிறது!
