கல்வி வளர்ச்சி நீடித்து நிலைக்கட்டும்

4 Min Read

2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பத்தாம் வகுப்பில் 94.31 சதவிகிதமும் (மாணவிகள் – 96.47%; மாணவர்கள் – 92.15%), பன்னிரண்டாம் வகுப்பில் 95.20 சதவிகிதமும் (மாணவிகள் – 97%; மாணவர்கள் – 93.19%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுகளும், வாழ்த்துகளும்! கடந்த சில ஆண்டுகளைப் போலவே மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம் என்பது ஒரு வகையில் மகிழ்ச்சி என்றாலும், ஒப்பீட்டு அளவில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவது கவலைக்குரியது தான். மாணவர்களுக்குள்ள கவனச் சிதறலும், ‘கைப்பேசி’ போன்ற ஊடகங்களின் தாக்கமும் இந்தச் சரிவுக்குக் காரணம் என்பதைப் பெற்றோரும், கல்வியாளர்களும், அரசுமே கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த அய்ந்து ஆண்டுகளாக பொதுத் தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தான், கல்வித் துறையின் வளர்ச்சிக்கு ஒரு தெளிவான குறியீடு ஆகும். மொத் தத்தில் 5,171 பள்ளிகள் 100% தேர்ச்சியை எட்டியுள்ளன; அதில் அரசுப் பள்ளிகள் 1,931 ஆகும். 8,233 பள்ளிகள் 95% தேர்ச்சியைப் பெற்றுள்ளன. ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் முந்தைய (2024-2025) ஆண்டில் 90.52% பெற்றன. நடப்பாண்டில் (2025-2026) தேர்ச்சி விகிதம் 91.42% ஆக அதிகரித்துள்ளது. பழங்குடியினர் நலப் பள்ளிகளில் கடந்த ஆண்டு 93.61%; நடப்பாண்டில் 96.66% என்ற வியத்தகு வளர்ச்சி. அதில் 321 மாணாக்கர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 44 பழங்குடியினர் நலப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இவையெல்லாம் எண்கள் அல்ல; நம் வெற்றியின் குறியீடுகள்.

ஆனால், இந்தப் பெரும் சாதனை எப்படி நிகழ்ந்தது என்பதை வரலாற்றில் பின்னோக்கிப் பார்க்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

100 ஆண்டுகளுக்கு முன்னால் பள்ளிகளில் நுழைய முடியாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பேரப் பிள்ளைகள் தான் இன்று இச்சாதனைகளை நிகழ்த்தியிருப்போர். நீதிக்கட்சி ஆட்சியில், ‘லேபர் பள்ளிகள்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட பள்ளிகளும், அரசுப் பள்ளிகளும் பெரும் மாற்றத்தை நிகழ்த்தின. ஆனால், அவற்றைத் தகர்க்கும் வகையில், ராஜாஜி முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் நிதி நிலைமையைக் காரணம் காட்டி, 6,000 பள்ளிகளை இழுத்து மூடினார்; எஞ்சிய பள்ளிகளிலும் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து பார்ப்பனரல்லாத மாணவர்களின் கல்வியைப் பறிக்கத் துணிந்தார். ஆனால், தந்தை பெரியார் தொடங்கிய போராட்டம் தான் பேரழிவிலிருந்து தமிழ்நாட்டின் கல்வியைக் காத்தது. ஆட்சியை மாற்றியமைத்து, காமராசரை முதலமைச்சராக்கி, நாடெல்லாம் கல்வி நீரோடையைப் பாய்ச்சச் செய்தார் தந்தை பெரியார். அடுத்தடுத்து வந்த திராவிட இயக்கங்கள் அதை இன்னும் மென்மேலும் விரிவாக்கின – போட்டிபோட்டு வளர்த்தெடுத்தன. மதிய உணவு தொடங்கி, மாணவர்களுக்கான வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்தது என அடுக்கடுக்கான முயற்சிகள் கல்வித் துறையை மேம்படுத்த, மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த, கல்வி தடையின்றி கிடைக்க வழி செய்தன.

அதிலும் கடந்த 2021 முதல் 2026 வரையிலான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் தி.மு.க. அரசு பள்ளிக் கல்வித் துறையில் நிறைவேற்றிய திட்டங்களும், மேற்கொண்ட முயற்சிகளும் உலக அரங்கிற்கே வழிகாட்டும் வகையில் அமைந்தன. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கையில், நிதி ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்றது பள்ளிக்கல்வித் துறையே என்பது, இதன் மீது செலுத்தப்பட்ட அக்கறைக்கான அடையாளம் ஆகும். அதுதான் ‘சமூக முதலீடு’ என்பதை உணர்ந்துதான் அதற்கேற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ‘நமது போட்டி, இந்தியாவின் பிற மாநிலங்களுடன் அல்ல; உலகின் கல்வித் துறையில் முதன்மையிடம் வகிக்கும் மேற்குலக நாடுகளுடன் தான்!’ என்ற நோக்கில் தான் திட்டங்களைத் தீட்டி முன்னேறியது தமிழ்நாடு அரசு. ஆனால், இந்த வளர்ச்சி ஒன்றிய அரசின் கண்களை உறுத்தியது. தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரால் நமது முன்னேற்றத்தைத் தடுக்கத் திட்டமிட்டனர். ‘‘பி.எம்.சிறீ திட்டத்தை ஏற்றால்தான் தர வேண்டிய நிதியைத் தருவோம்’’ என்று 2,152 கோடி ரூபாயைத் தர மறுத்தபோதும், ‘மும்மொழிக் கொள்கை’ என்ற பெயரால் ‘‘ஹிந்தி- சமஸ்கிருதத் திணிப்பை ஏற்கமாட்டோம்’’ என்று உறுதி காட்டியது தான் தமிழ்நாட்டின் ஏழை, எளிய மக்கள் பெற்றுள்ள இந்தக் கல்வி வளர்ச்சிக்கு மற்றோர் அடித்தளமாகும். ‘‘இருமொழிக் கொள்கை’’ என்பதால் தான் கல்வியில் மாணவர்களால் கவனம் செலுத்த முடிகிறது. மும்மொழிக் கொள்கை அவர்களின் கவனத்தை நசுக்கி, தன்னம்பிக்கை இழக்கச் செய்யும் ஆபத்தாகும்!

தமிழ்நாட்டின் ஆட்சிகள் மாறலாம்; ஆனால் கல்வித் துறையின் வளர்ச்சி எப்போதும் நீடித்து நிலைத்து வந்துள்ளது. அதனைத் தடுக்க, குழிபறிக்கக் காத்திருக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசின் முயற்சிகள் எவ்வகையில் வரினும், அதைத் தடுத்துக் காத்து, எந்தவிதத் தடுமாற்றமும் இன்றி, கல்வித் துறையின் வளர்ச்சிப் போக்கை அதிகப்படுத்த வேண்டியது தற்போதைய அரசின் கடமையாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *