சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, ஜூன் 12 சிங்கப்பெண் சிறப்பு படையை சட்டம்-ஒழுங்கு, விஅய்பி பந்தோபஸ்து பணிகளுக்கு பயன்படுத்த கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும் மாநிலம் முழுவதும் சிங்கப்பெண் சிறப்பு படை என்ற புதிய தனிச் சிறப்புப் பிரிவு உருவாக் கப்பட்டுள்ளது. இதற்காக 2,545 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட் டுள்ளன.
இதில் மாவட்ட / மாநகர தலைமையக பிரிவுகளுக்காக 49 காவல் ஆய்வாளர்கள், 98 உதவி ஆய்வாளர்கள், 196 இரண்டாம் நிலை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 270 கள பிரிவுகளுக்காக 540 பெண் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1,620 இதர பெண் காவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர். நிர்வாக பணிகளுக்காக நிர்வாக அதிகாரி, கண்காணிப்பாளர், உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் செயல்பாடுகளுக்காக மொத்தம் ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நேரடி ஒளிபரப்பு வசதி
இதில் தொடர் செலவினங்களுக்காக ரூ.310.98 கோடியும், உபகரணங்கள் வாங்குவதற்கான தொடர் செலவினங்களுக்காக ரூ.43.68 கோடியும் பிரிக்கப்பட்டுள்ளது. ரோந்து மற்றும் களப் பணிகளுக்காக 319 நான்கு சக்கர வாகனங்களும் (பொலேரோ), 101 இருசக்கர வாகனங்களும் வாங்கப்படவுள்ளன. களத்தில் நடப்பவற்றை தலைமையகம் நேரடியாக கண்காணிக்கும் வகையில், நேரடி ஒளிபரப்பு வசதி கொண்ட பாடி வோர்ன் கேமராக்கள் 270 எண்ணிக்கையிலும், வான்வெளி கண்காணிப்பிற்காக 49 அதிநவீன டிரோன் களும் வழங்கப்படவுள்ளன.
24 மணி நேரமும் இயங்கும் வகையில் தனிச் சிறப்புத் தலைமையகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, சமூக ஊடக கண்காணிப்பு மற்றும் அவசர அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில் அது வடிவமைக்கப்படும். பொதுமக்கள் எளிதில் ஆபத்து காலங்களில் தொடர்பு கொள்ளவும், பாதுகாப்பற்ற சூழல் குறித்து ஒளிப்படம் / காணொலிகளை பதிவேற்றவும் வசதியாக காவல் உதவி கைப்பேசி செயலி மற்றும் அதன் மென்பொருள்கள் மேம்படுத்தப்படும்.
விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள தனியாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு படையானது சிங்கப்பெண் சிறப்பு படை காவல்துறை தலைவரின் ஒட்டுமொத்த பார்வையின் கீழ் இயங்கும். மாவட்டங்களில் அந்தந்த காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாநகரங்களில் காவல் ஆணையர்களின் நிர்வாக கட்டுப்பாட்டில் இப்படை செயல்படும்.
இந்த சிறப்பு படையில் நியமிக்கப்படும் அதிகாரிகள் மற்றும் காவலர்களை எக்காரணம் கொண்டும் சாதாரண சட்டம்-ஒழுங்கு பணிகள், விஅய்பி பந்தோபஸ்து அல்லது இதர பொதுவான காவல் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும், அவர்கள் பெண்களின் பாதுகாப்பு பணிகளில் மட்டுமே முழுமையாக ஈடுபட வேண்டும் என்றும் அரசாணையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எஃப்அய்ஆர் பதிவுக்கு அதிகாரம் இல்லை
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு நேரடியாக முதல் தகவல் அறிக்கை (எப்அய்ஆர்) பதிவு செய்யும் அதிகாரம் இல்லை என்று பொறுப்பு காவல்துறைத் தலைவர் பவானீஸ்வரி தெளிவுபடுத்தியுள்ளார்.
இது ஒரு குற்றங்களை தடுக்கும் (Preventive) படை என்பதால், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றும் எப்அய்ஆர் பதிவு தொடர்பாக உள்ளூர் காவல்துறையினரும் குழந்தைகள் நலக்குழு உள்ளிட்ட அமைப்புகளும் ஒருங்கி ணைந்து செயல்படும் என்று அவர் விளக்கினார். இந்த திட்டத்தின் முதற்கட்டமாக, 10.6.2026 அன்று முதல் 70 குழுக்கள் செயல்படதொடங்கியுள்ளன. பேருந்து நிலை யங்கள், ரயில் நிலையங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறு வனங்கள் உள்ளிட்ட இடங்களில் படையினர் நேரடியாகச் சென்று பெண்களிடம் கலந்துரையாடுவார்கள். இரவு நேரக் கண்காணிப்பிற்காக 49 நவீன டிரோன்கள் பயன்படுத்தப் படவுள்ளன. படையினருக்கு லத்தி உட்பட எந்த ஆயுதமும் வழங்கப் படமாட்டாது என்றும், குற்றம் இழைப்பவர்களை காவல் நிலையங்களில் ஒப்படைப்பது மட்டுமே இவர்களின் பணி என்றும் காவல்துறைத் தலைவர் பவானீஸ்வரி தெரிவித்தார். இணையவழி (Cyber) தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
