திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட மத்தியப் புலனாய்வு அமைப்பு (CBI) தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு (SIT) தனது விரிவான விசாரணையை முடித்து, நீதிமன்றத்தில் இறுதி குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
சுமார் 15 மாதங்கள், 12 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த விசாரணையில், ரூ.250 கோடி மதிப்பிலான மிகப்பெரிய நெய் மோசடி மற்றும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
- மோசடியின் பின்னணியும் குற்றவாளிகளும்
* போலி நெய் விநியோகம்: ‘உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ‘போலே பாபா ஆர்கானிக் டெய்ரி’ (Bhole Baba Organic Dairy) நிறுவனத்தின் இயக்குநர்களான பொமில் ஜெயின், விபின் ஜெயின் ஆகியோர் இந்த மிகப்பெரிய மோசடியின் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.
* பால் இல்லாத டைரி: இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்தே மாட்டுப் பாலைக் கொள்முதல் செய்யவில்லை என்றும், முழுக்க முழுக்க போலி நெய் தயாரிப்பதற்காகவே இது இயங்கியுள்ளது என்றும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
*குற்றப்பத்திரிகை – கைது: இந்த வழக்கில் மொத்தம் 36 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் மோசடி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த திருப்பதி தேவஸ்தான (TTD) கொள்முதல் மற்றும் விற்பனைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும், ஊழியர்களும் அடங்குவர்.
- நெய்யில் கலப்படம் செய்யப்பட்டது என்ன?
ஆரம்பத்தில் விலங்கு கொழுப்பு (மாட்டு மற்றும் பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய்) கலக்கப்பட்டதாக அரசியல் ரீதியான புகார்கள் எழுந்தன. ஆனால், தேசியப் பால்வள மேம்பாட்டு வாரிய ஆய்வக சோதனைகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையில் பின்வரும் உண்மைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன:
*செயற்கை வேதிப்பொருட்கள்: தூய்மையான பசு நெய்க்குப் பதிலாகப் பாமாயில், பாம் கெர்னல் ஆயில் (Palm Kernel Oil), பாமோலின் ஆயில் போன்ற தாவர எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
* போலி மணம் மற்றும் நிறம்: இந்தத் தாவர எண்ணெய்களை நெய் போல மாற்றுவதற்காக, மஞ்சள் நிறத்தைத் தரும் பீட்டா-கரோட்டின் நெய் வாசனைக்கான செயற்கை ஃபிளேவர்கள் மற்றும் அசிட்டிக் ஆசிட் ஈஸ்டர் போன்ற வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன.
*ஆய்வக சோதனைகளில் ‘விலங்கு கொழுப்பு’ இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்றும், இது பிரதானமாக வேதிப்பொருட்கள் மற்றும் தாவர எண்ணெய்கள் கலந்த செயற்கை நெய் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
- அய்ந்து ஆண்டுகள் நீடித்த முறைகேடு
விசாரணைக் குழுவின் தகவல்படி, இந்த முறைகேடு 2019 பிப்ரவரி முதலே (ஆட்சி மாற்றத்திற்கு முன்பிருந்தே) தொடங்கப்பட்டு, 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் மிகவும் திட்டமிட்டு ஒரு கூட்டணியாக அரங்கேற்றப்பட்டுள்ளது.
அதிகாரிகள் துணையும் மறைப்பும்: கடந்த 2022-ஆம் ஆண்டிலேயே சில நிறுவனங்களின் நெய் மாதிரிகள் சோதனையில் தோல்வியடைந்த போதிலும், தேவஸ்தானத்தின் சில உயர் அதிகாரிகள் அந்த அறிக்கைகளை வேண்டுமென்றே மறைத்து, அதே நிறுவனங்கள் தொடர்ந்து நெய் விநியோகம் செய்ய அனுமதித்துள்ளனர்.
* லஞ்சப் பணம் மற்றும் ஹவாலா: இந்த மோசடியை அய்ந்து ஆண்டுகள் தடையின்றி நடத்த, போலி நிறுவனங்கள் தரப்பில் இருந்து தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் சில நிபுணர்களுக்கு ரூ.19.86 கோடி வரை ஹவாலா மூலமாகவும், நேரடியாகவும் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பணமாக மட்டுமின்றி, தங்க, வெள்ளி நாணயங்கள் மற்றும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களும் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளன.
- விவகாரம் வெளியில் வந்தது எப்படி?
2024 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி உட்பட சில நிறுவனங்கள் அனுப்பிய நெய் டாங்கர்கள் தரக்கட்டுப்பாட்டில் தோல்வியடைந்தன. அதில் தாவர எண்ணெய்க் கலப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அந்த டாங்கர்கள் திருப்பதி தேவஸ்தானத்தால் திருப்பி அனுப்பப்பட்டன. இதுவே பின்னர் பெரிய அரசியல் மற்றும் சமூக விவாதமாக மாறி உச்ச நீதிமன்ற விசாரணை வரை சென்றது.
*தற்போதைய நிலை: திருப்பதி தேவஸ்தானம் தற்போது நெய் கொள்முதல் விதிகளை மிகவும் கடினமாக்கியுள்ளது. மேலும், லட்டு பிரசாதத்தின் ‘புனித’த்தன்மையையும், பக்தர்களின் நம்பிக்கையையும் மீட்டெடுக்கும் வகையில் கோயிலில் ‘சாந்தி ஹோமம்’ போன்ற தூய்மைச் சடங்குகள் நடத்தப்பட்டன! மேலும், நெய்யின் தரம், சுவை மற்றும் மணத்தைச் சோதிக்க பிரத்யேக நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில்(மே 2026), தரம் குறைபாடுடைய நெய் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கக் கூடுதல் விசாரணை ஆணையம் ஒன்றையும் ஆந்திர அரசு நியமித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் பற்றி அள்ளி விடும் ‘அற்புதங்கள்’ கொஞ்ச நஞ்சமல்ல! அடேயப்பா, ஒரு கல்லைக் கடவுளாக்கி, அதன்மீது அற்புதக் கட்டுக் கதைகளைக் கிளப்பி, அச்சம் – பேராசையால் மக்களைப் பக்திப் போதைக்கு ஆளாக்கி சுரண்டல் தொழிற்சாலையை ‘ஜாம் ஜாம்’ என்று நடத்தும் கொடுமையை என்னவென்று சொல்லுவது!
ஏழுமலையான் சன்னதியில் மூலவருக்கு முன்னால் ஏற்றப்பட்டிருக்கும் விளக்குகள் எப்போது ஏற்றப்பட்டன என்று யாருக்கும் தெரியாதாம்!
இந்த விளக்குகளுக்கு எப்போது எண்ணெய் ஊற்றப்படுகிறது – அல்லது நெய் ஊற்றப்படுகிறது என்பது எவருக்கும் தெரியாத ஓர் அற்புத இரகசியமாம். (!)
(இப்போது நியான் விளக்குகள் கண்களில் ஜொலிக்கின்றன – கோயில் கர்ப்பக் கிரகம் ஏர் கண்டிஷன் செய்யப்பட்டுள்ளது என்பதை ஞாபகத்தில் வையுங்கள்).
தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தம்! திருப்பதி ஏழுமலையானுக்குக் காணிக்கையாக, எவ்வளவுப் பணம் செலுத்துகிறார்களோ, அதை விடப் பல மடங்கு நன்மைகளும், வருமானமும் பக்தர்களுக்குக் கிடைக்குமாம்! (லேவா தேவி, லாட்டரிச் சீட் நடத்துகிறாரா ஏழுமலையான்?)
இவ்வளவு அற்புதச் சக்திகளும், அளப்பரிய ஆற்றல்களும் படைத்தவன் ஏழுமலையான், தான் குடியிருக்கும் திருப்பதி கோயில் வட்டாரத்தில், திருப்பதி லட்டு விவகாரத்தில் நெய்க் கலப்படத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடக்கிறது என்றால் இதைக் கண்டு விலா நோக சிரிக்கத்தானே வேண்டும்!
‘ப்பூ – ஏழுமலையான் சக்தி இவ்வளவு தானோ?’ என்று பக்தர்கள் சிந்திக்க ஆரம்பித்து விடக் கூடாது என்ற திட்டத்தில்; இந்த மோசடியால் ஏழுமலையான் கோயிலில் சாந்திேஹாமம் ஏற்பாடாம்.
ஆக, பார்ப்பனர்கள் விடயத்தில் எது நடந்தாலும், அது நட்டக் கணக்காகாது! சாந்தி ேஹாமம் என்றாலும் பார்ப்பனர்களின் வயிற்றில் அறுத்துக் கட்டும் லாபத்திற்கு மட்டும் பஞ்சம் இல்லை!
‘பக்தி வந்தால் புத்தி போகும்’ என்றாரே – பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் – அதை மக்கள் உணரும் போதுதான் இந்தக் கடவுள் – பக்தி மோசடி வியாபாரத்திற்கு முடிவு ஏற்படும்!
