தந்தை பெரியார் முன்னெடுத்த ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்பது ஒரு மொழிக்கு எதிரான போராட்டமல்ல; ‘மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டம்’ – ‘பண்பாட்டுத் திணிப்புக்கு எதிரான போராட்டம்!’ அது தமிழுக்கான பாதுகாப்பு மட்டுமல்ல; அந்தத் தத்துவம் இந்தியா முழுமையும் உள்ள எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்; ஏன் உலகம் முழுமைக்குமே பொருந்தும்!
வசதிக்காகவும், வாழ்க்கைப் பாட்டுக்காகவும், விருப்பத்தின்பாற்பட்டும் எந்த ஒரு மொழியையும் யாரும் கற்பதையும் எவரும் தடுப்பதில்லை; தடுக்க முடியாது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்த ஒரு மொழியைக் கட்டாயமாக்கி, மற்றோர் நாட்டின் மீதும், இனத்தின் மீதும், வேறொரு மொழி பேசும் மக்களின் மீதும் திணிக்க முயலும்போது, அதை யாராலும் ஏற்க முடியாது. அதற்கான எதிர்ப்புணர்வு கடுமையாக எழுந்தே தீரும். உலகம் முழுக்க அதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் பிரிய மொழித் திணிப்பே காரணம்! ஈழத் தமிழர்கள் மீது சிங்களத்தை மறைமுகமாகத் திணிக்க முயன்றதுதான் ஈழ விடுதலைப் போராட்டமாக உருவெடுத்தது! சோவியத்தின் பிரிவுக்கு மொழித் திணிப்பும் ஒரு காரணமே!
இன்றைக்கும் இந்தியாவில் தமிழ்நாடு மொழித் திணிப்பில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொண்டு எதிர்த்து நிற்கத் தொடங்கியது – அதுவே இன்று பல மாநிலங்களிலும் வலுத்த குரலாக எழுந்துவிட்டது.
‘மும்மொழிக் கொள்கை’ என்று சொல்லப்படும்போது வழக்கமாக அதனை ஹிந்தி பேசாத மாநிலங்கள் மீதான ஹிந்தி மொழித் திணிப்பு என்பதாக மட்டுமே நாம் புரிந்துகொள்வோம். ஹிந்தி என்பது ஆர்.எஸ்.எஸ். – பார்ப்பனச் சக்திகளுக்கு ஒரு திறவுகோல் மட்டுமே! அதன் வழியே சமஸ்கிருதத்தைத் திணிப்பதே அதன் நோக்கம். அது இப்போது வடபுலத்தில் வெளிப்பட்டுள்ளது. ‘மூன்றாவது மொழி’ என்ற பெயரில் ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியைத் திணிப்பதும், ஹிந்தி பேசும் மாநிலங்களில் சமஸ்கிருதத்தைத் திணிப்பதும் கண்டிக்கத்தக்கது; சி.பி.எஸ்.இ-யின் இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மகாராட்டிரா மேனாள் அமைச்சரும் கல்வியாளருமான பவுசியா கான் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இவர், அண்மையில் மகாராட்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் நடைபெற்ற இரண்டாவது ‘பாபாசாகேப் – பெரியார் நட்பு இயக்கத்தின்’ நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சி.பி.எஸ்.இ. 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஹிந்தியைக் கட்டாயப் பாடம் ஆக்கியதைக் கண்டித்து ஏற்கெனவே தொடுக்கப்பட்ட வழக்கில் சி.பி.எஸ்.இ. பதிலளிக்க உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது. ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 19, 21, 21ஏ ஆகிய கூறுகளுக்கு முரணானது இந்தத் திணிப்பு’ என்று வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றம் எவ்வாறு முடிவெடுக்கும் என்பது வேறு செய்தி. ஆனால், எதன் அடிப்படையில் இத்தகைய திணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன?
‘ஹிந்தி இந்தியாவின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழி, எனவே அதனைத் தொடர்பு மொழியாக வைத்துக் கொள்ளமுடியும், வேலை கிடைக்கும், அதனால் ஹிந்தியைக் கற்றுக் கொள்ளுங்கள்’ என்று தூக்கிக் கொண்டு வருவோர், சமஸ்கிருதத் திணிப்புக்கு என்ன காரணம் சொல்வார்கள்? அதனைப் பேசுவோர் எத்தனை பேர்? இந்திய மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம்? ஏன் சமஸ்கிருதத்தை எல்லோரும் படிக்கவேண்டும்? அங்குதான் இருக்கிறது பார்ப்பனியத்தின் நச்சு வேர்!
சமஸ்கிருதத்தைப் படிப்பதென்றால், அதிலென்ன இயற்பியலும், வேதியியலும், அணு அறிவியலும், கணிதமுமா இருக்கிறது? இருப்பதெல்லாம் வேத, புராண, இதிகாசக் குப்பைகள், பார்ப்பன ஆதிக்கத்திற்குப் பணிந்து நடக்க வேண்டும் என்று எல்லோருக்கும் கட்டளையிடும் சட்டங்கள், கதைகள், மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் முலாம் பூசும் கற்பனைகள். சமஸ்கிருத மொழியைப் படிக்க வைப்பதன் வாயிலாக இவற்றை மாணவர்கள் மண்டையில் ஏற்றிவிட வேண்டும்; அதுதான் பார்ப்பன ஆதிக்கம் இன்னும் பல்லாண்டுகள் நீடிக்க வழிவகுக்கும் என்பதுதான் காரணம்! அதைப் புரிந்துகொண்டு தான் இன்று வடபுலத்திலும் ஹிந்தி – சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிரான குரல்கள் கிளம்பியிருக்கின்றன. ஆதிக்கத்திற்கு எதிரான உரிமைக் குரல்கள் எதுவும் அமுங்கிப் போனதாக வரலாறில்லை. மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டமும் நிச்சயம் வெற்றி பெறும்!
ஆர்.எஸ்.எஸ்.சின் மொழிக் கொள்கை வடவருக்கும் ஆபத்தே!
