வடசென்னை – புளியந்தோப்பில் முத்தமிழறிஞர் கலைஞர் 103ஆம் பிறந்த நாள் திராவிடர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்!

3 Min Read

புளியந்தோப்பு, ஜூன் 11- வட சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 103ஆம் ஆண்டு பிறந்த நாள் – திராவிடர் எழுச்சி நாள் -கழகப் பரப்புரைக் கூட்டம் 9.6.2026 அன்று மாலை 6.45 மணிக்கு, புளியந்தோப்பு கன்னிகாபுரம் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது.

சிறப்பாக நடைபெற்ற இக் கூட்டத்திற்கு வட சென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் தலைமை வகித்தார். காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணித் தலைவர் ந.கார்த்திக் வரவேற்புரையாற்றினார்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை

நிகழ்ச்சியின் தொடக்கமாக, கன்னி காபுரத்தில் சமூகநீதிப் பேரவையால் நிறுவப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு வட சென்னை மாவட்டத் தலைவரும், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான வழக்குரைஞர் தளபதி பாண்டியன் அம்பேத்கர் குறித்த புகழ் முழக்கம் ஒலித்திட மாலை அணிவித்தார்.

வட சென்னை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ச.சஞ்சய் தொடக்கவுரையாற்றினார். மாநில கழக இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், திராவிட வரலாற்று ஆய்வு மய்ய முனைவர் வெ.மாரப்பன் ஆகியோர் கலைஞர் படைத்திட்ட வரலாற்றுச் சாதனைகள் குறித்து விளக்கமாகப் பேசினர்.

கலைஞர் எனும் வரலாறு

நிறைவாக மாநில கழக கிராமப்புற பிரச்சாரக் குழு அமைப்பாளர் அதிரடி அன்பழகன் சிறப்புரையாற்றினார். முத்தமிழறிஞர் கலைஞர் மறைவுற்று ஏழு ஆண்டுகள் ஆன பின்பும் பேசப் படுபவராக வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

கலைஞர்தான் வரலாற்றை மாற்றி யமைத்தவர். வரலாறே கலைஞர்தான் என்றும், தி.மு.க.வின் தோல்விக்குப் பின்பு திராவிடர் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரிடையாகச் சந்தித்ததும், ஆசிரியர் அவர்கள் இட்ட கட்டளைக்கேற்ப தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கருநாடகா, மகாராட்டிரா மாநிலங்களில் கலைஞரின் 103ஆம் ஆண்டு பிறந்த நாளை திராவிடர் எழுச்சி நாள் என திராவிடர் கழகம் சார்பில் 103 பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்படுவதும் திராவிட இயக்கத் தோழர்களை ஊக்கப்படுத்திடவே என்றும் குறிப்பிட்டார்.

14ஆம் வயதில் போராட்டக் களம் கண்ட கலைஞர் தமிழ் – தமிழன் – தமிழ்நாடு என்ற உணர்வுக் கோளமாக, எழுத்தாளராக, பேச்சாளராக, நாடு போற்றும் தலைவராக உயர்ந்தமைக்குத் தந்தை பெரியாரிடம் அவர் கொண்டிருந்த பற்றும், சுயமரியாதை இயக்கமுமே அடிப்படையாக அமைந்தது என்று குறிப்பிட்டும், முத்தமிழறிஞர் கலைஞர், ‘திராவிட மாடல்’ அரசின் மக்கள் நலத் திட்டங்கள் பற்றியும், அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோர் மாணவர்களிடையே வகுப்பு நடத்தியபோது நடந்த நிகழ்வுகளை விரிவாக எடுத்துக் கூறியும் சிறப்புரையாற்றினார்.

அறிவிப்பு

கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் கன்னிகாபுரம் பகுதியில் வெகு விரைவில் நடத்தப்படுமென்று திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் அறிவிப்புச் செய்யப் பட்டது.

கடும் மழை பெய்தபோதும் இடையில் விட்டு மீண்டும் மழை பெய்த நிலையிலும் இக் கூட்டம் சிறப்பாக நடந்து முடிவுற்றது.

இக் கூட்டத்தில், செம்பியம் பகுதி கழகத் தலைவர் ப.கோபாலகிருட்டிணன், அயன்புரம் பகுதி கழகத் தலைவர் சு.துரைராசு, வடசென்னை மாவட்ட கழக அமைப்பாளர் சி.பாசுகர், துணைச் செயலாளர் க.பாலமுருகன், வடசென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் த.இளவரசி, மகளிர் பாசறைத் தலைவர் த.மரகதமணி, பா.நிர்மலா, தென்சென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் மு.பவானி, அரும்பாக்கம் சா.தாமோதரன், க.செல்லப்பன், புதுமை இலக்கியத் தென்றல் செயலாளர் வை.கலையரசன், பெரியார் சமூகக் காப்பணி நிலவன், கன்னிகாபுரம் எம்.சீனிவாசன், எம்.இரமேஷ், லோகநாதன், பெரியமேடு பிரதீப் குமார் மற்றும் திரளாகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் இறுதியாக – வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் நா.பார்த்திபன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *