சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள்– புத்தெழுச்சி நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி புகழுரை

சென்னை, ஜூன் 10  தோல்வியைக் கண்டும் நாம்  துவள வேண்டிய அவசியமே கிடையாது – அவை வெற்றிகளுக்கான பாதைகள்! நம் கொள்கைகளுக்கு ஒருபோதும் சரிவு ஏற்பட்டுவிடாது! என்றைக்கும் உறுதியோடு நிற்கக்கூடிய இந்த இயக்கத்திற்குப் பெயர்தான்  தி.மு.க.! திராவிடம் வெல்லும், அதை வரலாறு என்றும் சொல்லும்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், கலைஞரின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!தமிழர் தலைவர் ஆசிரியர் புகழுரைதோல்வியால் நாங்கள் துவண்டு விடமாட்டோம்; வெற்றி பெற்றாலும், அதனால் நாங்கள் வெறிகொண்டு அலையமாட்டோம்!படை வீரர்களுக்கு எப்போதுமே படையை நடத்தித்தான் பழக்கம்!கலைஞரின் தேர்தல் பிரச்சார தொகுப்பு! ‘‘நீ இன்றி நான் இல்லை!’’பெரியாருக்கும், அண்ணாவுக்கும் நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்!இன்றைய காலகட்டத்திலும் நமக்கு அறிவுரை போன்றது!ஈரோட்டுப் பேரொளிக்கு என்றைக்கும் தோல்வி இல்லை; வெற்றி பெற்றே தீருவோம்!தோல்வியைக் கண்டும் நாம்  துவள வேண்டிய அவசியமே கிடையாது – அவை வெற்றிகளுக்கான பாதைகள்!‘கட்டுமரமாக அல்ல, கப்பல்மரமாக இருந்து உழைப்பவர் மு.க.ஸ்டாலின்!’நம் கொள்கைகளுக்கு ஒருபோதும் சரிவு ஏற்பட்டுவிடாது!மூல வெற்றி தந்தை பெரியார்!என்றைக்கும் உறுதியோடு நிற்கக்கூடிய இந்த இயக்கத்திற்குப் பெயர்தான்  தி.மு.க.!‘துக்ளக்’ இதழ் அட்டைப் பட கார்ட்டூன்!தோற்றாலும் நாமே; வெற்றி பெற்றாலும் நாமே!ஆரியத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை!எங்கள் காரியம் தடைபடாது; எங்கள் வீரியம் ஒருபோதும் பின்வாங்காது!மீண்டும் வருவோம், மீண்டும் வெல்வோம்!

திராவிடர் கழகம்

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், கலைஞரின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!

நேற்று (9.6.2026) மாலை , சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், சிட்கோ நகர், வில்லிவாக்கத்தில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள்–  புத்தெழுச்சி நாள் விழாவில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  புகழுரையாற்றினார்.

அவரது புகழுரை வருமாறு:

தமிழர் தலைவர் ஆசிரியர் புகழுரை

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க.வின் சார்பில், வழமைபோல், ஒவ்வொரு ஆண்டும், தொடர் நிகழ்ச்சிகளாக, நம்முடைய பாராட்டுதலுக்கும், பெருமிதத்திற்கும் உரிய ஆற்றல்மிகு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், மாண்புமிகு போனாலும், மானமிகு இருக்கிறது, அதுதான் மிக முக்கியமானதாகும். அத்தகைய செயல்வீரர் அன்பிற்குரிய பி.கே.சேகர்பாபு அவர்களே! முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய வில்லிவாக்கம் மேற்கு பகுதி தி.மு.க. செயலாளரும், 8 ஆவது மண்டலக் குழுத் தலைவருமான தோழர் எழில் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய அருமைத் தோழர் கார்த்திக் மோகன் அவர்களே,

இந்நிகழ்வில் எனக்கு முன் ஒரு சிறப்பான உரையை ஆற்றிய, தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், சீரிய கல்வியாளரும், மேனாள் துணைவேந்தருமான பேராசிரியர் சபாபதி மோகன் அவர்களே,

அருமைச் சகோதரர் வழக்குரைஞர்  எச். அலீம் அல்புகாரி அவர்களே,

மற்றும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்ற தி.மு.க.வின் செய்தித் தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா அவர்களே, சிட்கோ சேகர் அவர்களே, வெள்ளம் போல் திரண்டிருக்கக்கூடிய அருமைத் தாய்மார்களே, பெரியோர்களே, நண்பர்களே, கொள்கையாளர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோல்வியால் நாங்கள் துவண்டு விடமாட்டோம்; வெற்றி பெற்றாலும், அதனால் நாங்கள் வெறிகொண்டு அலையமாட்டோம்!

எது தவறினாலும், ஆண்டு தவறாமல் உங்களுடைய கிழக்குப் பகுதியில், நாங்கள் வரத் தவறியதே இல்லை. இன்றைக்கு, மற்றவர்கள் பார்வையில் ஒரு பெரிய ‘‘தோல்வியை தி.மு.க. சந்தித்திருக்கிறது என்ற சூழ்நிலையில்கூட, தோல்வியால் நாங்கள் துவண்டு விடமாட்டோம்; வெற்றி பெற்றாலும், அதனால் நாங்கள் வெறிகொண்டு அலையமாட்டோம்’’ என்பதை காலங்காலமாக நிரூபித்துக் கொண்டு, ஈரோட்டுப் பயிற்சிக் களத்திலே பயிற்சி பெற்ற, தந்தை பெரியாரின் தொண்டர்களாக, அண்ணாவின் அருமைத் தம்பிகளாக, கலைஞருக்காக, என்றென்றைக்கும் மாறாத கொள்கையாளர்களாக இருக்கின்ற நிலையில் இவற்றில், மூன்று பேரையும் உள்ளடக்கிய ஒருவர் என்று சொன்னால், அவர்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.

அப்படிப்பட்ட நிலையில், தொடர்ந்து இங்கே வரக்கூடிய வாய்ப்பை இன்றைக்கு அருமைச் சகோதரர் சேகர்பாபு அவர்கள் அளித்திருக்கிறார்.

நாங்கள் எப்பொழுதுமே, பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், பதவிப் பார்வை படக் கூடியவர்கள் அல்ல; கொள்கையால் அளக்கப்படக் கூடியவர்கள்.

நான், சேகர்பாபு அவர்களிடம் பேசிக் கொண்டி ருக்கும்போது சொன்னேன், பொதுக்கூட்டங்களை நடத்தும்போது, அரங்கத்தில் நடத்தாதீர்கள். மக்களைச் சந்திக்கக்கூடிய ஒரு பொது இடத்தில் நடத்துங்கள் என்று சொன்னேன். அதுபோன்றே செய்திருக்கிறார் அவர்.

படை வீரர்களுக்கு எப்போதுமே
படையை நடத்தித்தான் பழக்கம்!

இங்கே எந்தவிதமான சோர்வையும் நான் மக்கள் மத்தியில் பார்க்கவில்லை. சோகம் இருக்கலாம்; இப்படி நடந்துவிட்டதே என்று ஓர் ஆற்றாமை இருக்கலாம். ஆனால், படை வீரர்களுக்கு எப்போதுமே படையை நடத்தித்தான் பழக்கம்; அவர்கள் தடையை உடைத்துக் கொண்டு படையை நடத்துவார்கள். அடுத்த களம் என்ன? அதுதான் மிக முக்கியம்.

அந்த வகையில்தான், கலைஞர் அவர்கள் தன்னுடைய கொள்கையாளர்களை எப்படிப் பக்குவப்படுத்தி இருக்கிறார் என்பதற்கு அடையாளம்தான் இந்தக் கூட்டம்!

திராவிடம் வெல்லும்,
அதை வரலாறு என்றும் சொல்லும்!

திராவிடர் கழகத்தின் சார்பாக கலைஞரின் 103 ஆவது பிறந்த நாளைக் குறிக்கின்ற வகையில், 103 இடங்களில்,  தமிழ்நாடெங்கும், இன்னும் கேட்டால் பிற மாநிலங்களான கருநாடகா, மகாராட்டிரா மற்றும் புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களிலும் கூட அறிக்கைவிட்டு, தொடர்ந்து கலைஞருடைய 103 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா பரப்புரைக் கூட்டங்கள் திராவிடர் எழுச்சி நாள் என்று நடப்பதற்குக் காரணம், சில பைத்தியக்காரர்கள் சொல்வதைப்போன்று, சில ஊடகங்கள் தவறாக எழுதி அற்ப சந்தோஷத்தைப் பெறு வதைப் போன்று, ‘திராவிடக் கொள்கை ஒருபோதும் தோற்காது; திராவிடம் என்றைக்கும் வெல்லும், அதை வரலாறு என்றும் சொல்லும்.’ அதைத்தான் நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். அது மட்டுமல்ல, அப்படிப்பட்ட ஒருவரின் பிறந்த நாள் விழாவை ஏன் கொண்டாடு கிறோம்?

கலைஞரின் தேர்தல் பிரச்சார தொகுப்பு!

எத்தனையோ தோல்விகளை எல்லாம் சந்தித்தி ருப்பவரை பற்றி, இங்கே சிறப்பாகச் சொன்னார்கள். ஆதாரத்தோடு சொல்லிப் பழக்கப்பட்டவன். இது கலைஞருடைய தேர்தல் பிரச்சாரங்களைப்பற்றி எல்லாம் தொகுத்து ஓர் அற்புதமான புத்தகமாகத் தி.மு.கழகத்தினுடைய தலைமைக் கழகம் வெளி யிட்டிருக்கிறது. பல இளைஞர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

 ‘‘நீ இன்றி நான் இல்லை!’’

அதற்குத் தலைப்பு என்ன தெரியுமா? தம்பிக்குக் கடிதம் எழுதும்போது, எந்த உறவு முறையையும் எடுத்துக் கொள்வார் கலைஞர். ஏன் என்றால், இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும்; இளைய தலைமுறைக்கு முதிய தலைமுறையும் அறிவுறுத்த வேண்டும். அதுதான் மிக முக்கியம். அப்படிப்பட்ட அந்த அறிவுரையைச் சொல்லும் இடத்தில், ‘நீ இன்றி நான் இல்லை’ – இதுதான் தலைப்பு. ‘‘நீ இன்றி நான் இல்லை’’ என்று சொல்லக்கூடிய அந்த வாய்ப்பை இளைய தலைமுறையினர் பெற்றார்கள்.

(மழை பெய்கிறது, அப்போது, ‘‘மழை பெய்தாலும் நான் என்னுரையை நிறுத்தமாட்டேன்; தொடர்ந்து உரையாற்றுவேன். வெப்பக் காற்றுக்குப் பதில் குளிர்த்தென்றல் காற்று வீசுகிறது. ஆகவே, நீங்கள் கலைய வேண்டிய அவசியமில்லை. குளிர்ச்சியை நாம் வரவேற்கவேண்டியது. மழை அதிகமாக இருக்காது; ஆங்காங்கே பன்னீர்த் துளிகளைப் போன்று விழுந்து கொண்டிருக்கிறது. கண்ணீர்த் துளிகளாக ஆரம்பித்த இயக்கம்தான் இந்த இயக்கம்’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி).

பெரியாருக்கும், அண்ணாவுக்கும் நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்!

2011 இல் ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலைஞர் பேசுகிறார்,  ‘‘‘திராவிட இயக்கம்’ என்ற சொற்றொடரைத் தமிழ்நாட்டுடன் இணைத்து, அதன் பெரும்பயனை நாமெல்லாம் பெறுகின்ற அளவுக்குப் பாடுபட்ட பெரியாருக்கும், அண்ணாவுக்கும் நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்’’ என்றார்.

இன்றைய காலகட்டத்திலும்
நமக்கு அறிவுரை போன்றது!

தேர்தல் நேரத்திலேயே எவ்வளவு முன்னோக்கு கலைஞருக்கு இருக்கிறது என்பதற்கு ஆதாரத்திற்கு இன்னொரு செய்தி: ‘காலமெல்லாம் பெரியார் எதற்குப் பாடுபட்டார்? பேரறிஞர் அண்ணா எதற்காக எழுதி எழுதிக் குவித்தார்? அவர்களுக்கெல்லாம் நன்றியுடையவர்களாக இருப்போம் என்றால், இந்த இனம் இன்றைக்கு ஒன்றாக இருக்கிறது. இந்த இனத்தை இனப்பகைவர்கள் யாரும் தொட்டுக் கூடப் பார்க்க முடியாது! இந்த இனத்தை அழிக்க எவனும் நினைக்கவே முடியாது’’ என்கிறார். எவ்வளவு அழுத்தி அழுத்திச் சொல்கிறார்! இந்தக் கால கட்டத்தில் இன்றைக்கு நமக்கு அறிவுரை சொல்வது மாதிரி.

ஈரோட்டுப் பேரொளிக்கு என்றைக்கும் தோல்வி இல்லை; வெற்றி பெற்றே தீருவோம்!

எனவேதான், இந்த இனத்தை அழிக்க எவனும் நினைக்கவே முடியாது. ‘‘எவ்வளவு கோபத்தோடு சொல்கிறார். எவனும் அழிக்கவே முடியாது. அவர் எப்போதுமே ‘அவன்’ என்று சொல்ல மாட்டார். அந்தக் கோபத்தின் காரணமாக, “நினைத்தால்… அவன் நிலைக்காமல் போய்விடுவான்; நிலைக்காமல் போய்விடுவான்” என்று எடுக்கும் சபதம், தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணிலே… பேரொளியாக இன்றைக்கு கிளம்புகிறதென்றால், இந்தப் பேரொளிக்கு என்றைக்கும் தோல்வி இல்லை; வெற்றி பெற்றே தீருவோம்!

தோல்வியைக் கண்டும் நாம்  துவள வேண்டிய அவசியமே கிடையாது – அவை வெற்றிகளுக்கான பாதைகள்!

அடுத்து சொல்கிறார், எவ்வளவு முன்னோக்கு பாருங்கள். ‘‘தோல்வி என்பது பெரியார் அவர்களின் வாழ்க்கையில் அடிக்கடி சந்தித்ததுதான். அண்ணா தன்னுடைய தேர்தல்களிலே, முதன்முதலாக இல்லா விட்டாலும், இரண்டாவது முறை சந்தித்ததுதான். ஆனால், வெற்றி, தோல்விகள் என்பது ஓர் இயக்கத்திற்கு மிக முக்கியமாக, மூலமாக, ஓர் இயக்கத்தின் கொள்கைகளுக்கு, ஒரு தலைவனுடைய லட்சியங்களுக்கு முத்திரை அல்ல. அவை மேலும் மேலும் வெற்றி பெறச் செய்கின்ற அத்தகைய பாதைகளாகத்தான் அமைந்திருக்கின்றன. தோல்வியைக் கண்டும் நாம்  துவள வேண்டிய அவசியமே கிடையாது. ஏன் என்றால், அவை வெற்றிகளுக்கான பாதைகள்.

கட்டுமரமாக அல்ல, கப்பல்மரமாக இருந்து உழைப்பவர் மு.க.ஸ்டாலின்!’

உங்களுக்குத் தெரியும். ‘கலைஞர்’ தொலைக்காட்சியைப் பார்த்தால், முதலில் தொடங்கும்போது, காட்சியில் ஒரு வார்த்தை  ஒலிக்கும். கலைஞருடைய குரல் அதில் கேட்கும்,  “தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலில் தூக்கி எறிந்தாலும், நான் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம், நான் கவிழ்ந்து விடமாட்டேன்!’’ அவர் ‘கட்டுமரமாக மிதப்பேன்’ என்று உங்களுக்காக சொன்னாரே, இப்போது இருக்கிற தலைவர், அவரால் உருவாக்கப்பட்ட உழைப்பின் உருவமாக இருக்கும் எங்கள் ஒப்பற்றத் தலைவர் ஸ்டாலின் அவர்கள், ‘கட்டுமரமாக அல்ல, கப்பல்மரமாக இருந்து உழைப்பார்.’

103 வயதானாலும் கலைஞருடைய உழைப்பு என்பது, வழிகாட்டக்கூடிய உழைப்பு. அதை நன்றாக நீங்கள் எல்லோரும் நினைத்துப் பார்க்கவேண்டும். அதை இங்கே சொன்னார்கள் அழகாக. இந்தக் கொள்கை எப்படி வளர்ந்திருக்கிறது என்பதற்கு அடையாளம் ஒன்றே ஒன்று!

ஒரு தலைவர் தேர்தலில் தோற்றுப் போகும்போது, எதிரிகள் கூட, ‘அய்யோ! நாம் தோற்கடித்துவிட்டோமே, அவர் தோற்றுவிட்டாரே’ என்று சிந்துகின்ற அந்தக் கண்ணீர்த் துளிகள், இன்னமும் பன்னீர்த் துளிகள் போன்று அவர் மேலிருந்து விழுந்து கொண்டிருக்கிறது என்றால், அதுதான் அவர் உழைப்பின் அடையாளம்! அதுதான் மிக முக்கியம்.

நம் கொள்கைகளுக்கு ஒருபோதும்
சரிவு ஏற்பட்டுவிடாது!

இந்த இயக்கம் நொடிந்துவிடாது, சரிந்துவிடாது. இந்தக் கொள்கைகளுக்கு ஒருபோதும் சரிவு ஏற்பட்டு விடாது. அதைத்தான் நீங்கள் நன்றாக நினைத்து, மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மகளிர் உரிமைத் தொகையான 5 ஆயிரம் ரூபாயை வங்கியில் செலுத்திய, அவர் தந்த பணத்தை வாங்கிக் கொண்டு, அவர் கொடுத்த விடியல் பயணத்திலே பேருந்தில் சென்று, அவர் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அவருக்கு எதிராகவே ஓட்டுப் போட்டும், அந்த மனிதர் கலங்கவில்லை. தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல், ஓட்டுப் போடாதவர்களுக்கும் உடனடியாக வந்து, அவருடைய தொகுதியில், வெற்றி பெற்றவர் கூட நன்றி சொல்லவில்லை. ஆனால், தோற்றதாகச் சொல்லப்படுபவர்தான் நன்றி சொன்னார்.

மூல வெற்றி தந்தை பெரியார்!

இது யாருக்கு வெற்றி? எப்பேர்ப்பட்ட ஒரு கூட்டத்தைத் தயாரித்திருக்கிறார் கலைஞர். காரணம், மூல வெற்றி தந்தை பெரியார்!

எனவே தான், பெரியாருடைய இயக்கம் என்பது வெற்றித் தோல்விகள், தேர்தல்களால் நிர்ணயிக்கப்படு வது அல்ல; கொள்கையால் அளக்கப்படுவது.

‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்பதில், தந்தை பெரியார் சொன்னார், “கடமை, கண்ணியம் பிறகு இருக்கட்டும். கட்டுப்பாடு முதலில் இருக்க வேண்டும். அந்தக் கட்டுப்பாட்டை தோழர்களே, நீங்கள் அத்தனை பேரும் அதன்மீது கொள்ளும் இந்தப் பற்றின் காரணமாகத்தான்,  நிச்சயமாக, வாய்ப்புகள் வரும்.

ஆகவேதான், மிகத் தெளிவாக அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும், மிக ஆழமாக வெற்றி பெற்றி ருக்கின்றார்.

சென்னையில் வெறும் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற தேர்தல் முடிவுகள் உண்டு. ஒன்று, கலைஞர்; இன்னொன்று, நம்முடைய பழைய துணை மேயர் செல்வராஜ்.

அப்படிப்பட்ட நிலையையெல்லாம் தி.மு.க. என்ற இயக்கம் பார்த்திருக்கிறது.

என்றைக்கும் உறுதியோடு நிற்கக்கூடிய
இந்த இயக்கத்திற்குப் பெயர்தான்  தி.மு.க.!

எனவேதான், ஆயிரம் இடிகளே விழுந்தாலும், பத்தாயிரம் மின்னல்கள் வந்தாலும், என்றைக்கும் உறுதியோடு நிற்கக்கூடிய இந்த இயக்கத்திற்குப் பெயர்தான்  தி.மு.க. சில பைத்தியக்காரர்கள் நினைப்பதுபோன்று கிடையாது இந்த இயக்கம்.

‘துக்ளக்’ இதழ் அட்டைப் பட கார்ட்டூன்!

‘துக்ளக்’ இதழில் அட்டைப் படத்தில் ஒரு கார்ட்டூன். எங்களுக்குதான் விளம்பரம். நாங்கள் பிரிக்க முடியாதவர்கள் என்பதற்கு அடையாளம் என்ன என்றால்,  நான் உட்கார்ந்திருக்கிறேன். ஸ்டாலின் என்னைப் பார்த்துக் கேட்கிறார், “என்ன?” என்று. நான் சொல்கிறேன், ‘‘இப்போது ஒரு பார்ப்பனர் இந்து சமய அறநிலையத்துறைக்கு அமைச்சராக வந்திருக்கிறார்.  அவர் திருச்செந்தூரிலே மாறு வேடம் போட்டுச் சென்று, அர்ச்சகர்கள் உள்பட லஞ்சம் வாங்கிய நான்கு பேரை பணியிடைக்கம் செய்தார்.

அந்தச் செய்தியை வைத்துக்கொண்டு,

‘‘இதுக்குத்தான் பார்ப்பனரை அறநிலையத் துறைக்கு அமைச்சராக்கக் கூடாதுன்னு அன்னைக்கே சொன்னேன். நம்ம சேகர்பாபு அஞ்சு வருஷம் அமைச்சரா இருந்தார். இப்படி ஒரு நாளாவது நடந்ததுண்டா? இந்த பார்ப்பன அமைச்சர் வந்தவுடனே புத்தியைக் காட்டிட்டார். எல்லா மோசடிகளையும் கண்டுபிடிச்சுட்டா அறநிலையத் துறை என்ன ஆகும்ன்ற அறிவு வேண்டாம்? அந்த அர்ச்சகர் பழைய வசூல் பத்தியெல்லாம் சொல்லித் தொலைச்சுட்டா என்ன பண்றது?’’ என்று நான், மு.க.ஸ்டாலினைப் பார்த்து கேட்பது போல, ‘துக்ளக்’ இதழ் அட்டைப் படத்தில் கார்ட்டூன்  போட்டிருக்கிறார்கள். அருகில் சேகர்பாபு நிற்கிறார்.

மேலே தலைப்பு என்ன என்றால், ‘‘திருச்செந்தூர் கோயிலில் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் பணி நீக்கம் செய்த அறநிலையத் துறை அமைச்சர்’’ – செய்தி.

கோயிலில் அர்ச்சகர் பார்ப்பனர்  லஞ்சம் வாங்கினார் என்பதற்காகத்தானே பணி நீக்கம் செய்தார்.

தோற்றாலும் நாமே;
வெற்றி பெற்றாலும் நாமே!

எனவே, இவர்காலத்தில் (சேகர்பாபு) லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் இல்லை. அதுதான் மிக முக்கியம். ஒரு தவறு நடந்தது; சிலருக்கு ஞாபகம் இல்லாமல் இருக்கலாம்.அது என்ன தெரியுமா? சேகர்பாபு அமைச்சராக இருந்த காலகட்டத்தில், தவறு செய்த அர்ச்சர்களை பணி இடைநீக்கம் செய்தார்.  உடனே இதே பத்திரிகைக்காரர்கள் என்ன சொன்னார்கள் என்றால், ‘‘அவர்கள் எல்லாம் மு.க.ஸ்டாலினால், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாகும் சட்டப்படி நியமிக்கப்பட்டவர்கள்’’ என்று. ஆனால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களில், அப்படிப்பட்ட ஓர் ஆள்கூட கிடையாது. அவர்கள் எல்லாம் பழைய ஆட்கள் என்று அன்றைக்கே தெளிவாகப் பதில் சொன்னார் அமைச்சர் சேகர்பாபு.

ஆகவேதான், தோற்றாலும் நாமே; வெற்றி பெற்றாலும் நாமே என்பதுதான்!

ஆரியத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை!

அன்றைக்கு மகளிர் உரிமைத் தொகையாக எவ்வளவு பணம் வந்ததோ, அதே பணம்தான் இன்றைக்கும் அவர்களுக்கு. அதே விடியல் பயணத்தில்தான் பேருந்தில்தான் ஏற வேண்டும். ‘ஸ்டாலின் ஆள்கிறார்’ என்று அர்த்தம்; ‘திராவிடம் ஆள்கிறது’ என்று அர்த்தம்;  இதனால்தான் சிலருக்கு வயிற்றெரிச்சல்; ஆரியத்திற்கு வயிற்றெரிச்சல், இதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

காங்கிரசுக்குள்ளேயே ‘‘ஆரியம்’’ புகுந்துவிட்டது.

எங்கள் காரியம் தடைபடாது;
எங்கள் வீரியம் ஒருபோதும் பின்வாங்காது!

ஆகவேதான், ஆரியம் எந்த ரூபத்தில் இருந்தாலும், எங்கள் காரியம் தடைபடாது. எங்கள் வீரியம் ஒருபோதும் பின்வாங்காது! இதை நன்றாகப் புரிந்து, உணர்ந்துகொள்ளுங்கள்.

மீண்டும் ஒரு நாள் விரிவாக, விளக்கமாகப் பேசுவேன்.

நான் மழையில் நனைந்தாலும் பரவாயில்லை, நீங்கள் நனையக்கூடாது; ஆனால், நனைய வேண்டிய நேரத்தில் நனைவதும், உருக வேண்டிய நேரத்தில், உருகுவதும், உழைக்கவேண்டிய நேரத்தில் உழைப்பதும் நன்று.

மீண்டும் வருவோம், மீண்டும் வெல்வோம்!

நன்றி, மீண்டும் சந்திப்போம், மீண்டும் வருவோம், மீண்டும் சந்திப்போம், மீண்டும் வெல்வோம்!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புகழுரையாற்றினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *