கொல்கத்தா, ஜூன் 6- தமிழ்நாட்டில் முந்தைய திராவிட மாடல் அரசு (திமுக அரசு) பல வியத்தகு திட்டங்களை அமல்படுத்தி பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது. அதில் ஒரு திட்டம் தான் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டமாகும். இந்த திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த திட்டத்தை அண்மையில் மேற்கு வங்கத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அம்மாநில பா.ஜ.க. அரசு பின்பற்றத் தொடங்கியுள்ளது.
மேற்குவங்கத்தில் மகளிருக் கான ‘அன்னபூர்ணா யோஜனா’ திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி 3.6.2026 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இத் திட்டத்தின் முதல்கட்டமாக, மாநிலத்தில் உள்ள 28,25,769 பயனாளிகளுக்குத் தலா ரூ.3,000 உதவித்தொகை அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிய விண்ணப்பங்கள் தொடர்ந்து வரவேற்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படும். அடுத்த 3 மாதங்களில் இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் முறையாகச் சரிபார்க்கப்படும். தகுதியான புதிய பயனாளிகளின் கணக்குகளிலும் ரூ.3,000 உதவித் தொகை வரவு வைக்கப்படும்.
எழும் கேள்விகளும் சர்ச்சைகளும்:
மகாராட்டிரா, ம.பி பாணி யைப் பின்பற்றுமா மேற்குவங்கம்?
மேற்குவங்க அரசின் இந்த அதிரடித் தொடக்கம் பெண் களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், இதன் பின்னணியில் ஒரு பெரிய அச்சமும் சர்ச்சையும் எழுந்துள்ளது.
இதற்கு முன் மகாராட்டிரா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங் களில் பா.ஜ.க அரசுகள் இது போன்ற மகளிர் உதவித்தொகை திட்டங்களைச் செயல்படுத்தின. ஆனால், நிதிச் சுமையைக் காரணம் காட்டியோ அல்லது தேர்தல் முடிந்த பிறகோ, பல லட்சம் தகுதியான பயனாளிகளை அந்தப் பட்டியலிலிருந்து பா.ஜ.க அரசுகள் திடீரென நீக்கின. இது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
தற்போது மேற்குவங்கத்தில் ஆரம்பம் மிக அமர்க்களமாக உள்ள நிலையில், ‘அன்னபூர்ணா யோஜனா’ திட்டத்திலும் எதிர்காலத்தில் பயனாளிகள் பட்டியல் சுருக்கப்படுமா? அல்லது தேர்தல் கால வாக்குறுதியாக மட்டும் சுருங்கிவிடாமல் அனைத்துப் பெண்களுக்கும் இந்த ரூ.3,000 தொடர்ந்து கிடைக்குமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவலாக எழுந்துள்ளது.
