
மதுரை, ஜூன் 9 தமிழ்நாட்டில் ஜாதி மறுப்பு மற்றும் மதமறுப்புத் திருமணங்கள் இயல்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் அகிலாராஜன், முஜிபா ஃபர்ஜானா ஆகியோரின் மத மறுப்புத் திருமணத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யேற்று நடத்தி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்.
மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்தவரும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச் செயலாளருமான சுப.முருகானந்தம்- தி.லதா ஆகியோரது மகன்
ல.மு.அகிலாராஜன் மற்றும் மதுரை கோ.புதூர், சங்கர் நகரைச் சேர்ந்த அ.ரகுமான் – ர.ஜெமிலா ஆகியோரின் மகள் ர.முஜிபா ஃபர்ஜானா ஆகியோருக்கு வாழ்விணையர் ஏற்பு விழா சுயமரியாதைத் திருமண முறையில் 7.6.2026, அன்று காலை 11 மணிக்கு, மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள பொய்கைக்கரைப்பட்டி,
ஏ.கே.என்.கே. மாளிகையில், கழகத் தலைவர் தலை மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மணமகனின் தாய் பட்டதாரி ஆசிரியர் லதா அனைவரையும் வரவேற்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் மதுரை வே. செல்வம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு ஆகியோர் முன்னிலை ஏற்று வாழ்த்தி உரையாற்றினர். தொடர்ந்து, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் திருப்பத்தூர் கவிதா, மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் பாக்கியலட்சுமி, மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வீரபாண்டியன், நெல்லை மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆதவன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச் செயலாளர் செல்வ.மீனாட்சி சுந்தரம் நிகழ்ச்சியை நெறி யாள்கை செய்து சிறப்பித்தார். நிறைவாக கழகத் தலைவர் தனது தலைமை உரையை வழங்கினார்.
கழகத் தலைவர் வாழ்த்துரை
அவர் தமது உரையில், சுயமரியாதைத் திரு மணத்தின் வரலாற்றை சுருக்கமாகச் சொன்னார். குறிப்பாக சுக்கிலநத்தத்தில் நடைபெற்ற முதல் சுயமரியாதைத் திருமணத்தை சுட்டிக்காட்டினார். சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லாது என்ற நிலையிலும், சட்டம் எங்களுக்கு முக்கியமன்று, பெரியாரின் சுயமரியாதைத் திட்டம்தான் முக்கியம் என்று ஆயிரக்கணக்கானோர் திருமணம் செய்துகொண்டனர் என்றும், அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகுதான் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று ஆக்கினார் என்பதையும் எடுத்துரைத்தார். மேலும் அவர், மதமறுப்பு திருமணத்தை நடத்திக்கொள்வதற்கு முன்வந்த இரண்டு குடும்பங்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார். குறிப்பாக பெண் வீட்டாரை ஆண் வீட்டாரைவிட அதிகமாகப் பாராட்டினார்.
சுயமரியாதைத் திருமணங்கள் எப்படிப்பட்ட புரட்சியை செய்திருக்கிறது என்பதை ஒரு முக்கியமான வரலாற்றுச் சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசினார். ஒருமுறை உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சந்திரஜித் யாதவ் அவர்கள், தஞ்சை பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முன்னிலையில், மதமறுப்பு சுயமரியாதைத் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது அவர், “இப்போதுதான் பெரியார் எப்படிப்பட்ட புரட்சியாளர் என்பதை என்னால் முழுமையாக உணரமுடிகிறது. காரணம், இதுபோன்ற மதமறுப்புத் திருமணத்தை உத்தரப்பிரதேசத்தில் நடத்தினால், பத்து கிராமங்களே பற்றி எரியும்” என்று அதிர்ச்சிகரமான வாக்குமூலம் கொடுத்ததைப் போலக் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி, “அப்படிப்பட்ட புரட்சிகரமான திருமணம்தான் இங்கே நடைபெறுகிறது” என்று மணமக்களுக்கு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் கூறிச்சென்றுள்ள சில அறிவுரைகளை எடுத்துரைத்து, இல்லறம், தொண்ட றம் என்று சிறப்பாக வாழுங்கள் என வாழ்த்தி, மண ஒப்பந்த உறுதிமொழி கூறச்செய்து இணையேற்பு விழாவை நடத்தி வைத்தார்.
நிறைவாக மணமக்கள் ஏற்புரை வழங்கினர். அதைத் தொடர்ந்து, மணமகள் ர.முஜிபா ஃபர்ஜானாவின் தந்தை அ.ரகுமான் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மகளிரணி, மகளிர் பாசறை உள்ளிட்ட பல்வேறு துணை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மற்றும் இரு இல்லத்து சுற்றத்தினர், நண்பர்கள் ஆகியோர் அரங்கம் நிறையும் அளவுக்கு வந்திருந்து கழகத் தலைவரின் உரையை செவிமடுத்தும், மணமக்களை வாழ்த்தியும் சென்றது குறிப்பிடத்தக்கது.
