சென்னை, ஜூன் 9– மெட்ரோ ரயில்களில் கடந்த ஜனவரி முதல் மே மாதம் என 5 மாதங்கள் வரை மொத்தம் 4.71 கோடி முறை மக்கள் பயணித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை நகரில் சாலைப் போக்குவரத்தைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வரவேற்பும் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
நிகழ் ஆண்டில் கடந்த ஜனவரியில் மெட்ரோ ரயில்களில் 93.28 லட்சம் பயணமும், பிப்ரவரியில் 96.40 லட்சம் பயணமும் இருந்த நிலையில், கடந்த மார்ச்சில் 1.01 கோடி முறை பயணித்துள்ளனர். அந்த மாதத்தில் 13-ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிக பயணத்தை மெட்ரோ ரயில்களில் மக்கள் பயணித்துள்ளனர்.
கடந்த ஏப்ரலில் 90.18 லட்சம் முறையும், மே மாதத்தில் 90.14 லட்சம் முறையும் பயணித்துள்ளனர். நிகழ் ஆண்டில் (2026) கடந்த 5 மாதங்களில் மட்டும் மொத்தம் 4.17 கோடி முறை மக்கள் மெட்ரோவில் பயணித்திருப்பது தெரிய வந்துள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் சிங்காரச் சென்னை அட்டையில் பயணித்தவர்களே அதிகம். அதன்படி, சிங்காரச் சென்னை அட்டையில் கடந்த ஜனவரியில் 46.52 லட்சம் பேர், பிப்ரவரியில் 49.11 லட்சம், மார்ச் 57.90 லட்சம், ஏப்ரல் 45.18 லட்சம், மே 47.51 லட்சம் என தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
