வீட்டில் இருந்தே, இணைய வழியில் பத்திரப் பதிவு செய்யும் வசதி! விரைவில் அமலுக்கு வருகிறது!

2 Min Read

சென்னை, ஜூன் 8- பதிவு அலுவலகத்துக்குச் செல்லாமல் மக்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய வழியில் ஆவணங்களை பதிவு செய்யும் ‘வருகை இல்லா ஆவணப் பதிவு’ நடைமுறை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இணைய வழியில் பத்திரப் பதிவு

இதுதொடர்பாக தமிழ்நாடு பதிவுத் துறைத் தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆவணப் பதிவு நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் மக்கள் தாங்களே நேரடியாக இணைய வழியில் ஆவணங்களை பதிவு செய்யும் முறையை பதிவுத் துறை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் மக்கள் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு செல்லாமல், எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் (24X7X365) இணையதளம் மூலம் இணைய வழியில் தங்கள் ஆவணங்களைப் பதிவு செய்துகொள்ள முடியும்.

ஆவணப் பதிவுக்கு சார் பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், அவரது மின்னணு கையொப்பத்துடன் கூடிய ஆவணம், சம்பந்தப்பட்ட நபரின் உள்நுழைவுக்கும், வாட்ஸ்அப் எண்ணுக்கும் அனுப்பப்படும். அவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

என்னென்ன ஆவணங்கள் பதிவு? – ‘வருகை இல்லா ஆவணப் பதிவு’ (Anywhere Registration) நடைமுறையை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், முதல் விற்பனை மனை (First sale of Plot), முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு (First sale of Flat), தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள், வங்கிகளில் பெறும் கடனுக்கான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள் ஆகியவற்றை சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வராமலேயே பதிவு செய்யலாம்.

வங்கிகள், கட்டுமான நிறுவனங்கள், பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோர் பதிவுத் துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவை உருவாக்கி, ஆவணங்களை (ரசீது) இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.

ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள், சாட்சிகள் ஆகிய அனைவரது ஆதார் அட்டையை பதிவேற்றம் செய்யவேண்டும். ஆதார் ஆணையம் மூலம் கைரேகை அல்லது கருவிழி படலம் வாயிலாக ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.

இதற்கு இணைய இணைப்பு, யுஅய்டிஏஅய் (UIDAI) ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல்-1 விரல் ரேகை இயந்திரம், கருவிழிப் படலம் கவரும் கருவி, ஒளிப்படக் கருவி (Webcam) ஆகியவை வேண்டும்.

இணைய வழியில் ஆவணப் பதிவு முறையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், ஹார்டுவேர் பிரச்சினைக்கு முகமது யூனுஸ் (7397574067), அருண்குமார் (9940446694) ஆகியோரையும், சாப்ட்வேர் பிரச்சினைக்கு சீனிவாஸ் கணேஷ் (6369798973), டில்லி பாபு (8525805957) ஆகியோரையும் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *