விலை உயர்ந்தது – மானியமும் குறைந்தது! மக்களின் மீது இரட்டைத் தாக்குதல்!

4 Min Read

2026-ஆம் ஆண்டு தொடங்கி மூன்று மாதத்திற்குள் இரண்டாம் முறையாக வீட்டு உபயோக எரிவாயு (LPG) உருளையின் விலை ஏற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 7-ஆம் தேதி சமையல் எரிவாயு உருளை ஒன்றுக்கு ரூ.60 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று (7.6.2026) மேலும் ரூ.29 விலை ஏற்றப்பட்டுள்ளது; இதன் மூலம் கடந்த ஆண்டை விட மொத்த விலை உயர்வு ரூ89-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக (LPG) சமையல் எரிவாயு உருளை விலை ரூ.957.50-ஆக உயர்த்தப்பட்டுள்ளது; (பிற நகரங்களில் விலை மாறக் கூடும்.)

பன்னாட்டு அளவில் எரிபொருள் விலை உயர்வால் அரசுக்குச் சொந்தமான எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், சமையல் எரிவாயு உருளை விலை உயர்த்தப்பட்டிருப்பது குறித்து தாங்களும் மிகுந்த வருத்தமும் கவலையும் கொள்கிறோம்; ஆனால், அதைக் குறை கூறுவதற்கு முன், உலகளாவிய சூழலை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். உலகம் மிகக் கடுமையான நெருக்கடிகளில் சிக்கித் தவித்து வருகிறது என்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கான ஒன்றிய அமைச்சர் ஜோஷி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

“சரக்குப் போக்குவரத்தும் இடமாற்றமும் நடைபெறாத சூழலில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மூலங்களிலிருந்து மட்டுமே எல்பிஜி கிடைக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார். பன்னாட்டுப் போர்ச் சூழலும் அதனால் ஏற்படும் நெருக்கடியும் புரிந்துகொள்ளக் கூடியதுதான் எனினும், இதையே காரணமாகக் காட்டி, ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலைகள் கடந்த மாதத்திலேயே மூன்று முறை ஏற்றப்பட்டது. இதுவே பொதுவான விலை உயர்வையும் ஏற்படுத்தி மக்களை இக்கட்டில் சிக்க வைத்துள்ளது.

உணவகங்களின் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எரிவாயு உருளை விலை கடந்த மாதம் சுமார் ரூ.1000 விலை உயர்ந்ததன் மூலம், உணவுக் கூடங்களின் விலை ஏற்றத்தை இளைஞர்கள், மாணவர்கள், தனித்து வாழ்வோர், வணிகர்கள் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. தற்போது வீட்டு உபயோக  சமையல் எரிவாயு உருளை விலையும் உயர்த்தப்பட்டிருப்பது மேலும் நெருக்கடியை மக்களுக்குத் தந்துள்ளது. ஆபத்துக் காலங்களில், அவசரக் காலங்களில் விலையை ஏற்றி விற்கும் வியாபாரிகளைக் கட்டுப்படுத்த “அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்” என்று ஒன்று உண்டு. இவை சிறு வியாபாரிகளுக்கு மட்டும் தானே தவிர, பெரும் எண்ணெய் நிறுவனங்களுக்கும், அரசுக்கும் இல்லையே! யார் இவர்களைக் கட்டுப்படுத்துவது?

இதை எப்படி மக்கள் எதிர்கொள்வார்கள் என்று ஓர் அரசு சிந்திக்க வேண்டாமா? மன்னிப்பும், கவலையும் தெரிவித்துவிட்டால் வயிறு நிரம்புமா?

பொருளாதாரமும், எரிபொருள் நிலையும் கவலைக்கிடமாக உள்ள சூழலில் ஒன்றிய அரசு எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது?

இந்தியாவில் எரிபொருள் பயன்பாடு பெரிதும் பிற நாடுகளைச் சார்ந்துள்ள நிலையில், மாற்று எரிசக்தியை ஊக்குவிக்கப் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டாமா? மாற்று எரிசக்தியை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில் தனியார் பெரு நிறுவனங்களை வளர்த்தெடுக்கும் வேலையே தற்போதும் நடைபெறுகிறது. சூரிய மின்னாற்றலுக்கு மக்களைத் தயார்படுத்துவதும், அதற்கான மானியங்களை அதிகப்படுத்துவதும், மின் தேவை, எரிவாயு உருளைத் தேவை என இரண்டு முக்கியப் பிரச்சினைகளுக்கும், அதன் காரணமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும். மீண்டும் மீண்டும் அது குறித்துப் பிரதமர் பேசிய அளவுக்குச் செயல்பாட்டின் வேகம் இல்லையே!

இன்னொரு புறம், வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு உருளைக்கு அரசுகள் வழங்கி வந்த மானியத்தை, நேரடியாக அனைவருக்கும் வழங்காமல் (குறைந்த விலையில் எரிவாயு உருளை), ‘வங்கிக் கணக்கில் வரவு வைக்கிறோம்’ என்று தொடங்கியதன் மூலம், அரசு தந்தால் தான் மானியம் என்ற நிலை உருவானது. பின்னர், அதிலும் ஒரு பாகுபாட்டைக் கொண்டு வந்தது மோடி அரசு. முன்பு நடைமுறையில் இருந்த பொதுவான எல்பிஜி மானியத் திட்டம் (PAHAL), வருமான வரம்பு ஏதுமின்றி அனைத்து வீட்டு உபயோகிப்பாளர்களுக்கும் பலன் அளித்து வந்தது; ஆனால், இத்திட்டம் ஜூன் 2020-க்குள் பெருமளவில் நிறுத்தப்பட்டது. இதற்கு மாறாக, ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ (PMUY) என்பது, முன்னதாக எல்பிஜி இணைப்பு இல்லாத குறைந்த வருமானம் கொண்ட கிராமப்புறப் பெண்களுக்காகவே ‘பிரத்யேகமாக’ வடிவமைக்கப்பட்ட,  குறிப்பிட்ட பயனாளிகளை இலக்காகக் கொண்ட சமூக நலத் திட்டமாக பெரும் விளம்பரம் செய்து அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு வரை ஆண்டுக்கு 9 முறை தலா ரூ.300 மானியத்தில் எரிவாயு உருளைகளைப் பெற முடிந்தது. ஆனால், பயனாளிகளின் சராசரி பயன்பாட்டைக் கணக்கில் கொண்டு, அதனை ஆண்டுக்கு  நான்கு முறை எரிவாயு உருளையை நிரப்பும்போது மட்டுமே தலா ரூ.300 மானியம் பெற முடியும் என்றும்   ஒன்றிய அரசு மாற்றிடத் திட்டமிட்டுள்ளது என்று செய்திகள் வருகின்றன. இதன் மூலம் முதல் நான்கு உருளைகளை மட்டுமே, எரிவாயு உருளைக்கு  ரூ.642 என்ற விலையில் பெற முடியும். அதற்குப் பிறகு அவர்களும் ரூ.942 கொடுத்துதான் எரிவாயு உருளைகளைப் பெற முடியும் என்று ஏழை, எளிய மக்கள் மீதும் இடியை இறக்கியுள்ளது ஒன்றிய அரசு. சராசரியாக ஆண்டுக்கு நான்கு உருளைகள் பயன்படுத்தினால் போதும் என்று கட்டுப்படுத்துகிறது. சராசரி என்பதே, உயர் எண்ணுக்கும், குறை எண்ணுக்கும் இடைப்பட்டது தானே! வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்போரிலும் ஆண்டுக்கு அதிக உருளைகள் பயன்படுத்துவோர்  இருக்கிறார்கள் என்பதுதான் ‘சராசரி’ என்ற சொல்லின் பொருள். எனில், இப்போது அதிகம் பயன்படுத்தும் ஏழைக் குடும்பங்களை, தாய்மார்களை அரசு நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது என்பதுதானே உண்மை.

படிப்படியாக, எரிவாயு உருளைக்கான மானியத்திலிருந்து உயர்நடுத்தர வர்க்கம், நடுத்தர வர்க்கத்தை நீக்கி, கடைசியில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்போருக்கும் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துவிட்டது. இதைநோக்கித் தான் பா.ஜ.க. அரசு செல்கிறது என்பதைத் தொடக்கத்திலேயே கணித்துத் தான் எதிர்க்கட்சிகள் எதிர்த்து வந்தனர். மக்களுக்குப் புரிவதற்குத் தான் வெகு காலமாகிறது – அதற்குள் மீள முடியாத இடத்திற்கு பிரச்சினை நகர்த்தப்பட்டுவிடுகிறது. எரிவாயு உருளை விவகாரத்தில் நடந்திருப்பதும் அதுதான்! எரிவாயு எரிவதற்குத் தானே அரசால் கட்டுப்பாடு கொண்டு வர முடியும் – மக்களின் வயிறு எவ்வளவு வேண்டுமானாலும் எரியலாமே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *