ஒன்றிய அமைச்சரை பதவி விலகக் கோரி மாணவர்கள் முழக்கம்!

4 Min Read

தேர்வு முறைகேடு விவகாரம்
டில்லி ஜந்தர் மந்தரில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ நடத்திய பிரம்மாண்ட போராட்டம்!

புதுடில்லி, ஜூன் 7  தேசிய அளவிலான தேர்வு முறைகேடு விவகாரங்களில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி, ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) சார்பில் டில்லி ஜந்தர் மந்தரில் நேற்று (6.6.2026) முதல் முறையாக மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க டில்லி முழுவதும் பலத்த காவலர் பாதுகாப்பும், துணை ராணுவப் படைகளும் குவிக்கப்பட்டிருந்தன.

சமூக ஊடக நையாண்டி குழு எப்படி அரசியல் சக்தியானது?

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் ‘கரப்பான் பூச்சி மற்றும் ஒட்டுண்ணி’ என விமர்சித்ததாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த மாதம் சமூக ஊடகங்களில் ஒரு நையாண்டி குழுவாக இது தொடங்கப்பட்டது.

தற்போது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இந்த குழுவிற்கு ஆதரவு பெருகி வருகிறது. அரசியல் கட்சியாக மாறாத இந்த அமைப்பு, நீட் (NEET), சிபிஎஸ்இ (CBSE), கியூட் (CUET), எஸ்எஸ்சி (SSC) போன்ற முக்கிய தேர்வுகளில் நடந்த குளறுபடிகளை மய்யமாக வைத்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராகத் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது.

“சிறைக்கு நான் பயப்படவில்லை” – நிறுவனர் அபிஜித் தீப்கே ஆவேச உரை

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உயர்கல்வி பயின்று வரும் மாணவரும், இந்த அமைப்பின் நிறுவனருமான அபிஜித் தீப்கே, இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று (6.6.2026) காலை டில்லி வந்தார். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

“இது ஒரு நீண்ட போராட்டம். அமைச்சர் பதவி விலகக் கோரி நாங்கள் குரல் எழுப்பத் தொடங்கி ஒரு மாதம் ஆகிறது. ஆனால், நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக எங்களது சமூக ஊடகக் கணக்குகளை முடக்குவதிலும், பதிவுகளை நீக்குவதிலும் தான் அரசு கவனம் செலுத்துகிறது. எங்களது பதிவுகளை நீங்கள் நீக்கலாம், ஆனால் இந்த களத்தில் இருந்து எங்களை அழிக்க முடியாது.

சிறைக்குச் செல்வேன்

நான் சிறைக்குச் செல்வேன் என்று என் தாய் பயப்படுகிறார். இந்த அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒவ்வொரு பிள்ளையின் தாயும் இதே பயத்துடன்தான் வாழ்கிறார்கள். நாங்கள் பயப்படவில்லை என்பதை அவர்களிடம் உரக்கச் சொல்லுங்கள். சுதந்திரத்திற்காக எனது தியாகத்தைச் செய்ய நான் முழுமையாகத் தயாராகிவிட்டேன். நாட்டின் இளைஞர்களும் மாணவர்களும் ஒருபோதும் விலை போக மாட்டார்கள்.”

மாலை 3.30 மணியளவில் அபிஜித் தீப்கேவுக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாகப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

கைகளில் புத்தகங்கள்

போராட்டத்திற்கு வரும்போது ஒரு புத்தகம், தேசியக்கொடி மற்றும் அமைதியின் அடையாளமாகப் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்களுக்கு வழங்குவதற்காகப் பூக்களை எடுத்து வருமாறு அபிஜித் தீப்கே எக்ஸ் (X) தளத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படியே, பெரும்பாலான இளைஞர்கள் கைகளில் புத்தகங்கள் மற்றும் பூக்களுடன் வந்திருந்தனர். மேலும், பலர் தங்களது போராட்டக் குறியீடாகக் கரப்பான் பூச்சி முகமூடிகளை  அணிந்து வந்து கவனத்தை ஈர்த்தனர்.

போராட்டம் நடந்துகொண்டிருந்த போது, ஜந்தர் மந்தர் அருகே திரண்ட மாற்றுத் தரப்பினர் சிலர், இப் போராட்டத்திற்கு எதிராகப் போட்டி முழக்கங்களை எழுப்பினர். ‘ஜெய் சிறீராம்’ எனக் முழக்கமிட்டபடி, போராட்டக்காரர்களைப் ‘பாகிஸ்தானி யர்கள்’, ‘தேச துரோகிகள்’ என வசைபாடினர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் சூழல் உருவானதை அடுத்து, காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு எதிர்ப்பாளர்கள் 6 பேரை சிறைபிடித்து அப்புறப்படுத்தினர்.

அரசியல் தலைவர்களின் ஆதரவு

சிவசேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தங்களது கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் செய்தியை முகநூலில் பகிர்ந்துள்ளார்:

இளைஞர்களே நாட்டின் எதிர்காலம்: “சுட்டெரிக்கும் வெயிலில் போராடும் இளைஞர்களுக்கு நீதி மறுப்பதும், அவர்களைக் கரப்பான் பூச்சி என்று அழைப்பதும் முறையற்றது.”

நீட் வினாத்தாள் கசிவு: “வினாத்தாள் கசிவு லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளது. அவர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். கரப்பான் பூச்சியை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது.”

கல்வி அமைப்பின் மீது நம்பிக்கை இழந்த மாணவர்கள் & பெற்றோர்கள்

போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான மாணவர்கள், தொடர் தேர்வு குளறுபடிகள் மற்றும் தேர்வு முடிவுகள் குறித்த நிச்சயமற்ற தன்மையால் கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டதாகக் குமுறினர்.

நுஸ்ரத் பர்வீன் (பெற்றோர்): “போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் என் மகள்கள் எதிர்கொள்ளும் அழுத்தத்தை நேரில் பார்த்து ஒரு பெற்றோராக நானும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.”

ரஸ்தா (பட்டதாரி மாணவி): “இன்றைய கல்வி என்பது வெறும் பணம் சம்பாதிக்கும் வழியாக மாறிவிட்டது. படித்து முடித்த பிறகும் சரியான வேலை கிடைப்பதில்லை. இதற்கு ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றம் தேவை.”

ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் என இரு தரப்புமே இளைஞர்களின் முக்கியப் பிரச்சினைகளுக்குப் போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றும் போராட்ட களத்தில் இருந்த இளைஞர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *