திருவனந்தபுரம், ஜூன் 6 கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கான தண்டனைகளை மோட்டார் வாகனத் துறை அதிரடியாகக் கடுமையாக்கியுள்ளது. இந்த புதிய விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலக (RTO) அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம்
விதிமீறல்களுக்கான புதிய தண்டனை விவரங்கள் பின்வருமாறு: நோயாளிகளுடன் செல்லும் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் இடையூறு ஏற்படுத்தினால் 6 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்படும். இத்துடன், மோட்டார் போக்குவரத்து துறையின் நாள் கட்டாயப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களின் உரிமம் 3 மாதங்களுக்கு முடக்கப்படும்.இவர்களும் 1 நாள் கட்டாயப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிவேகத்தில் வாகனம் ஓட்டினால் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம் செய்யப்படும். இவர்களுக்கு 3 நாள் கட்டாயப் பயிற்சி வழங்கப்படும்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஆபத்தான முறையில் ஓட்டுதல் மற்றும் பைக் ரேசிங்கில் ஈடுபடுபவர்களின் உரிமம் 6 மாதங்கள் வரை முடக்கப்படும். இதன் மூலம் உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டால் ஓட்டுநர் உரிமம் 1 ஆண்டிற்கு இடைநீக்கம் செய்யப்படுவதோடு, அவர்கள் 3 நாள் கட்டாய பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும்.
சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்தில்லா கேரளாவை உருவாக்கவும் இந்த புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன.
உலக வெப்ப அபாய நகரங்களின் பட்டியலில் சென்னை, மதுரை
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
புதுடில்லி, ஜூன் 06 உலகிலேயே அதிக வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய 50 நகரங்களின் பட்டியலில், மற்ற எந்த ஒரு நாட்டை விடவும் இந்தியாவிலிருந்து அதிகளவிலான நகரங்கள் இடம்பெற்றுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் புதிய ஆய்வு ஒன்றின் மூலம் வெளியாகியுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உலகெங்கிலும் உள்ள 205 முக்கிய நகரங்களை மய்யமாகக் கொண்டு விரிவான ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில், அதிக வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் உலகின் டாப் 50 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த உலகளாவிய பட்டியலில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் உலக அளவில் 2-ஆவது இடத்தையும், மகாராட்டிராவின் நாக்பூர் 4-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. தமிழ்நாட்டின் பாரம்பரிய நகரமான மதுரை உலக அளவில் 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம், உலகின் மிக மோசமான வெப்ப அபாயத்தைச் சந்திக்கும் முதல் 10 நகரங்களில் 3 இந்திய நகரங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள 14 இந்திய நகரங்களின் விவரம்: நாக்பூர், மதுரை, போபால், கான்பூர், புனே, பாட்னா, அய்தராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், லக்னோ, மும்பை, அகமதாபாத் ஆகியவையாகும். தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையும், தென் தமிழ்நாட்டின் மய்யமான மதுரையும் இப்பட்டியலில் உள்ளன.
