திருப்பரங்குன்றம் மலை மீது மூன்று மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. சமணம், சைவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இம் மலையில் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் வழிபட உரிமையும், அதற்கான வரலாறும் உண்டு. கோயிலுக்குப் போய்விட்டு, அங்கிருந்து தர்காவுக்கும் செல்லும் அளவுக்கு மதுரையில் மதநல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் இடங்களில் இதுவும் ஒன்று.
ஆனால், கடந்த ஆண்டு இதனைக் கலவரக் காடாக்க முனைந்தது ஆர்.எஸ்.எஸ்! – மலையின் ஒரு பகுதியில் உள்ள தர்கா அருகில் உள்ள ‘சர்வே கல்லை’த் ‘தீபத் தூண்’ என்று கூறி, அதில் விளக்கேற்றும் உரிமை வேண்டும் என்று சங் பரிவார் கூட்டத்தின் கையாள் ஒருவர் வழக்குத் தொடுத்தார். இதற்கு முன்பே இது தொடர்பான வழக்குகள் லண்டன் பிரிவி கவுன்சில் வரை சென்று முடிவு செய்யப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்னரும் ஒரு வழக்கில் நீதிமன்றத்தால் முடிவெடுக்கப்பட்டு, யார் யாருக்கு எந்தெந்த இடம் உரிமையானது என்பதெல்லாம் இறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும், திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தைத் தூண்ட சங் பரிவார் தொடர்ந்து முயற்சித்து வந்ததன் ஒரு பகுதிதான் கடந்த ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்காகும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இருக்கும் நீதிபதி ஒருவர், நாட்டின் அமைதியையும், அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மையையும், இது தொடர்பான முந்தைய வழக்குகளின் தீர்ப்புகளையும், வரலாற்று ஆதாரங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, தர்ஹா அருகில் உள்ள சர்வே கல்லில் தீபம் ஏற்ற ராமரவிக்குமார் என்பவரையும், அவருடன் சில சங்கிகளையும் அனுமதித்து ஆணையிட்டார். தர்ஹாவுக்கு வெகு அருகில் உள்ள அந்த சர்வே கல்லில் தீபம் ஏற்றவும், வழிபடவும் இப்போது அனுமதித்தால், அது அயோத்தியில் பாபர் மசூதியில் 1948-ஆம் ஆண்டு செய்யப்பட்ட கலவரத்துக்கான அடித்தளம் போலவே அமையும் என்பதை ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் சதி வரலாற்றை உணர்ந்தவர்கள் அறிவார்கள். எனவே, ஒருபோதும் இத்தகைய ஆபத்துக்கு அடிகோலக்கூடாது என்று உறுதியாக மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் எதிர்த்தனர்.
தமிழ்நாட்டை அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்த தி.மு.க.வின் ‘திராவிடமாடல்’ அரசு இதில் கடுமையான உறுதியைக் காட்டியது. அந்த உறுதிதான் தமிழ்நாட்டைக் காத்தது! நீதிமன்றம் அவசர அவசரமாக ஆணையிட்டு, விதிமுறைகளுக்கு மாறாக தனக்கு வழங்கப்பட்டிருந்த சி.எஸ்.அய்.எஃப் காவல் படையையும் உடன் அனுப்பி, எப்படியாவது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்திற்கு மாறாக, தர்ஹாவுக்கு அருகில் தீபம் ஏற்றச் செய்து கணக்கைத் தொடங்கிவிட வேண்டும் என்று முயன்றபோதும், அதைத் தடுத்து உடனடியாக ‘நாங்கள் மேல்முறையீட்டுக்குச் செல்கிறோம்’ என்று தெளிவாகச் சொன்னது தி.மு.க. அரசு! ஏனெனில், ஒரு முறை சர்வே கல்லில் தீபம் ஏற்ற அனுமதித்தால், பிறகு அதைக் காட்டி, அடுத்தடுத்த ஆண்டுகளில் வழக்கு தொடுத்தோ, அல்லது நிரந்தரமாகவோ தீபம் ஏற்றச் செய்துவிடலாம்; பிறகு அதைக் கொண்டே அங்கு பிரச்சினையைப் பெரிதாக்கி, காலப் போக்கில் ஒட்டுமொத்த மலையையும் பிரச்சினைக்குரியதாக்கிவிடலாம் என்ற கெடுநோக்கோடு தொடுக்கப்பட்ட வழக்கில், சுணக்கமோ, அசிரத்தையோ இருந்தால், அது அமைதிப் பூங்காவாம் தமிழ்நாட்டை அயோத்தியாக்கும் சூழ்ச்சிக்குப் பலியானதாகிவிடும் என்பதால், நீதிமன்றத்தில் காட்டிய உறுதியைப் போலவே, களத்திலும் நின்றது அரசு. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் என்று பூச்சாண்டி காட்டினர் எதிர்தரப்பு வழக்குரைஞர்கள். “என்ன பின்விளைவுகள் ஏற்பட்டாலும் நாங்கள் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்” (We will face the consequences) என்று கலவரத்தைத் தூண்ட விளைந்தவர்களைத் தடுத்து நிறுத்தியது காவல்துறை. காரணம், அந்த அதிகாரிகளுக்குப் பின்னால் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கை! (இப்போது அந்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார்.)
மீண்டும் மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இதைத் தனிப்பட்ட நோக்கில் எடுத்துக் கொண்டு உத்தரவுகளைப் பிறப்பித்து வந்ததாலும், முந்தைய இரண்டு நீதிபதிகளின் உத்தரவை, ஒரு தனி நீதிபதியின் புதிய உத்தரவு மாற்ற முடியாது என்பதாலும், வேறு இரு நீதிபதிகளுக்கு இது தொடர்புடைய வழக்கு மாற்றப்பட்டது. அதை முழுமையாக ஏற்காமல் தனி நீதிபதி ‘வியாக்கியானம்’ செய்து வந்த நிலையில், மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வு தங்கள் உத்தரவைத் தெளிவுபடுத்தியபின் தான், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஓய்ந்தார். இப்பிரச்சினை சற்று தணிந்தது.
இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. தனி நீதிபதியின் ஆணையைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு மறுத்ததற்காகத் தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இது என்பதால், அதே நிலைப்பாட்டில் புதிய அரசு இருக்கிறதா என்று நீதிபதிகள் என்.ஜோதிராம், சதீஷ்குமார் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆட்சி மாறியிருக்கும் சூழலில், அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் நீதிமன்றத்திற்கு! ஜூன் 22 வரை அவகாசமும் கொடுத்துள்ளது.
முன்பு இப்பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தபோது, ‘யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது’ என்னும் நோக்கில் த.வெ.க. வாயைத் திறக்கவேயில்லை. அதுபோல் இப்போது நடந்துகொள்ள முடியாது – இப்போது அரசும், அதிகாரமும் அவர்கள் கையில் தான் இருக்கிறது. “திருப்பரங்குன்றம் கோயிலில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கப்படி, தீபத்தூணில் தான் விளக்கேற்ற வேண்டும்; கலவரம் விதைக்கும் நோக்கோடு இந்துத்துவவாதிகள் கோரும் வண்ணம் தர்ஹா அருகில் உள்ள சர்வே கல்லில் விளக்கேற்ற அனுமதிக்க முடியாது” என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டில் கொஞ்சமும் பிசகாமல் உறுதியாக இருக்க வேண்டியது தற்போதைய அரசின் கடமையாகும். அதில் கொஞ்சம் தவறினாலும், தமிழ்நாடு முழுவதும் அதன் தாக்கம் இருக்கும். தமிழ்நாட்டைக் கலவரக் காடாக்க முயலும் ‘கொள்கை எதிரி’களின் சூழ்ச்சியை எப்படி எதிர்கொள்ளப் போகிறது முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு என்பதை நாடும், மக்களும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார்கள். உரிய கவனமும், அக்கறையும் தேவை!
