‘திராவிடர் தளபதி’ சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுடைய மறைவு என்பது
தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் இழப்பல்ல; ஒரு சமுதாயத்துக்கே ஏற்பட்டிருக்கிற ஈடு செய்ய முடியாத இழப்பு!
சென்னை, ஜூன் 6 ‘‘‘திராவிடர் தளபதி’ சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களுடைய மறைவு என்பது இருக்கிறதே, அது தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் இழப்பல்ல; ஒரு சமுதாயத்துக்கே ஏற்பட்டிருக்கிற ஈடு செய்ய முடியாத இழப்பு. தனிப்பட்டவர்களுக்கு இழப்பு என்றால், அது சில காலத்தில் சரியாகிவிடும். ஆனால், அவருடைய இழப்பு அப்படிப்பட்டதல்ல. அவருடைய உழைப்பும், அவருடைய வழிகாட்டலும் அப்படிப்பட்டது’’ என்று தந்தை பெரியார் கூறியதை எடுத்துக்காட்டி உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘விடுதலை’ 92 ஆம் ஆண்டு
பெருவிழா –
கடந்த 1.6.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற ‘விடுதலை’ 92 ஆம் ஆண்டு பெருவிழா – குணசீலன் – தங்கமணி படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
அடுத்து நண்பர்களே, சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களுடைய சிறப்புப் பற்றி ப.திருமாவேலன் எடுத்துச் சொன்னார் .
சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் ஆஜராகி வெற்றி பெற்றார்!
‘விடுதலை’க்காகவே, சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வாதாடினார். காங்கிரஸ்காரர்கள் தான் வழக்குப் போட்டார்கள். காங்கிரசார் இன்றைக்குத் தான் கோளாறு செய்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். அதனுடைய சுபாவத்தை மாற்ற முடியாது. அதனுடைய நீண்ட வரலாறு அத்தகையது. ஏதோ பயன்படுத்த வேண்டிய நேரத்தில் பயன்படுத்திவிட்டோம். காங்கிரஸ் மாநாடு நீடாமங்கலத்தில் 1937 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பங்கேற்ற எல்லோ ருக்கும் மதிய விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விருந்தில், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஆதிதிராவிடத் தோழர்கள் சாப்பிட அமர்ந்தார்கள். அதைச் சாப்பாடு பரிமாறுகின்ற அய்யர் பார்த்து, ‘‘நீங்கள் எப்படி இங்கே அமரலாம்’’ என்று சொல்லி, அவர்களை வெளியேற்றியது மட்டுமல்ல, அவர்களை அடித்து, சட்டையைக் கிழித்து, பிறகு அவர்களுக்குக் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மேலே ஏற்றி ஊர்வலம் நடத்தினார்கள்.இந்த நிகழ்வைக் கண்டித்த ஒரே நாளேடு ‘விடுதலை’, கண்டித்த பத்திரிகை ‘குடிஅரசு’. அதற்காக உடனே ‘குடிஅரசு’ பத்திரிகைமேல் வழக்குப் போட்டார்கள். அந்த வழக்கில், சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் ஆஜராகி, வெற்றி பெற்றார்.
தஞ்சை நகர சபை தலைவராக இருந்தார் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம். அது மட்டுமல்ல, மிராசுதாரர், மன்னர் நிதியில் என்று அந்தக் காலத்து கல்லூரி நடந்தது, திருவையாறில். அந்த கல்லூரிகளில் எல்லாம் சமஸ்கி ருதம் தான் சொல்லிக் கொடுத்தார்களே தவிர, தமிழுக்கு இடமில்லை. நம்முடைய பிள்ளைகளுக்கும் அங்கே இடமில்லை. அதற்காகப் போராடி வெற்றி பெற்றதில் பெருந்துணையாக இருந்தவர் பன்னீர் செல்வம் அவர்கள்தான்.
‘திராவிடர் தளபதி’
சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்
அதனால், அவருக்குத் ‘திராவிடர் தளபதி’ என்று பெயர் சூட்டினார் தந்தை பெரியார் அவர்கள். ஹிந்தி எதிர்ப்பில் அவர் பேசியதைப்பற்றி இங்கே சொன்னார்கள். அவர்தான் ராஜகோபாலாச்சாரியார் ஆட்சியில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப்படிப்பட்ட ஒரு பெரிய வீரர், அவருக்குப் பெரிய விருந்து கொடுத்தார்கள். அவர் லண்டனுக்கு மெம்பராகச் செல்கிறார் என்பதற்காக. பெரியார், மகிழ்ச்சியோடு இருக்கிறார். லண்டனுக்குச் செல்லும்போது, ஓமான் கடலில் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டு, அவர் மரணமடைகிறார். இதுதான் பழைய வரலாறு.
என்னுடைய துயரத்தைப் போக்கிக் கொள்ள முடியாத துயரம்…
அப்பொழுது அய்யா ஒரு தலையங்கம் எழுதுகிறார். அந்தத் தலையங்கத்தில், என்ன எழுதுகிறார் என்றால், ‘‘எனக்கு இது மாதிரி துயரங்கள் வந்தது உண்டு. என்னுடைய அண்ணார் மகன் ஒருவரை லண்டனில் படிக்க வைத்தோம். அவருக்கு நோய் வந்து இளம் வயதிலேயே அவர் இறந்து போனார். அந்த நிகழ்வு எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்குத் துயரமானதாக இருந்தது. ஆனால், நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. அன்றைக்கு சயரோக நோய்க்கு மருந்து கிடையாது. ஆகவே, அவன் இறந்து போனான், முடிந்துபோய்விட்டது. அதே மாதிரி, என்னுடைய தாயாரை நான் இழந்திருக்கிறேன். வயதானவர் போக வேண்டியதுதான், முடிந்து போய்விட்டது என்று அதை அலட்சியப்படுத்தி, நான் ஏற்றுக்கொண்டேன். அதைவிட என்னுடைய துணைவியார் நாகம்மையார், கொள்கைக்குத் துணை நின்றவர். அவரை நான் இழந்திருக்கிறேன். அதற்காக நான் வருத்தப்பட்டு எழுதியிருக்கிறேன் என்பது எல்லாம் உண்மை. ஆனால், இவை எல்லாவற்றையும்விட, நான் அதிகம் வருத்தப்படுவது, என்னுடைய துயரத்தைப் போக்கிக் கொள்ள முடியாத துயரம் ஏற்படுவது எதற்காக என்று சொன்னால்’’ நண்பர்களே, அவர் சொல்கிறார், அய்யா எழுதுகிற வாசகம் அப்படி; அதைப் படித்தால், கண்களில் கண்ணீர் வரும்.
ஒரு குடும்பத்தின் இழப்பல்ல; ஒரு சமுதாயத்துக்கே ஏற்பட்டிருக்கிற ஈடு செய்ய முடியாத இழப்பு!
அதில் அய்யா எழுதுகிறார், ‘‘அவையெல்லாம் என்னுடைய குடும்பத்திற்கு, என்னுடைய தனிப்பட்ட பாதிப்பு. ஆனால், ‘திராவிடர் தளபதி’ பன்னீர்செல்வம் அவர்களுடைய மறைவு என்பது இருக்கிறதே, அது தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் இழப்பல்ல; ஒரு சமுதாயத்துக்கே ஏற்பட்டிருக்கிற ஈடு செய்ய முடியாத இழப்பு. தனிப்பட்டவர்களுக்கு இழப்பு என்றால், அது சில காலத்தில் சரியாகிவிடும். ஆனால், அவருடைய இழப்பு அப்படிப்பட்டதல்ல. அவருடைய உழைப்பும், அவருடைய வழிகாட்டலும் அப்ப டிப்பட்டது’’ என்று மிகத் தெளிவாகச் சொன்னார்.
ஆகவே, அப்படிப்பட்ட பன்னீர் செல்வத்தின் இழப்பை, ‘‘திராவிட நினைவு நாள்’’ என்று கடைப்பிடித்து சிறப்பாக நினைவுகூர வேண்டும் என்றார். 1940 இல் இந்தச் சம்பவம் நடந்தது.
அதனால்தான், கலைஞர் அவர்கள் ஆனாலும், மற்ற தோழர்களானாலும் எல்லோரும் ‘‘பன்னீர் செல்வம்’’ என்றுதான் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பார்கள். ‘பராசக்தி’ திரைப்படத்தில்கூட கலைஞர் அவர்கள் எழுதிய வசனத்தில், ‘‘ஆண் குழந்தை பிறந்தால் பன்னீர் செல்வம்’’ என்று பெயர் வைக்கவேண்டும் என குறிப்பிட்டிருப்பார்.
ஆகவே, ஒவ்வொரு வீட்டிலும் ஏராளமான பன்னீர் செல்வங்கள் உண்டு. இந்த இயக்கம் அவ்வளவு பெரிய வரலாற்றுக்குரியது. நேற்று, இன்றைக்கு வந்தவர்கள் எல்லாம் இந்த இயக்கத்தை அசைத்துவிடுவோம், மாற்றிவிடுவோம் என்று சொல்வது, ஓர் அர்த்தமற்ற பேச்சே தவிர, அது ஒன்றும் சரக்குள்ள விஷயமோ அல்லது ஆழமானதோ இல்லை. காற்று வேகமாக அடிக்கிறது, அதனால் சருகுகள் விழுவது மாதிரிதான். ஆகவே, அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த இயக்கத்தினுடைய ஆழம், அகலம், வரலாறு, சாதனையாளர்கள், இதற்கு உழைத்தவர்கள் என்ற மிகப்பெரிய ஓர் அடித்தளம், அடிக்கட்டுமானம் அவ்வளவு சிறப்பானது
ஆகவே, தோழர்களே, ‘விடுதலை’, ‘குடிஅரசு’ ஏடுகள்தான் பெரிய சமூகப் புரட்சியை உருவாக்கின. இன்றைக்கும் பார்த்தீர்களானால், ‘விடுதலை’க்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.
பொன்னாடை வேண்டாம் – சந்தாவாகவோ, நிதியாகவோ கொடுங்கள்!
இன்றைக்கு நான் அறிக்கை ஒன்றை ‘விடுதலை’யில் எழுதியிருக்கிறேன். தோழர்களில் சில பேர் வந்து எனக்குப் பொன்னாடை எல்லாம் போர்த்துகிறார்கள். நான் எழுதியிருப்பதை அவர்கள் படிக்கவில்லை; படித்திருந்தால் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள். அதுதான் மிக முக்கியம். நான் எழுதியிருக்கும் மிக முக்கியமான வேண்டுகோள் என்னவென்றால், இந்தப் பொன்னாடை போன்றவற்றை வாங்கி வராதீர்கள்; புத்தகம் கூட கொடுக்க வேண்டாம். ஏனெனில், அதுகூட என்னிடம் போதுமானதாக இருக்கிறது. எனவே, அதை நிதியாகக் கொடுத்துவிடுங்கள்.
‘விடுதலை’ நாளிதழுக்குச் சந்தா கொடுங்கள், அதை மக்களிடம் பரப்புங்கள். இப்பொழுதெல்லாம் நான் திருமணங்களுக்குச் சென்றால், ‘என்னுடைய தலைமையில் தான் திருமணம் நடத்த வேண்டும், இந்தத் தேதியில் வர வேண்டும்’ என்று வற்புறுத்திக் கேட்பவர்களுக்கு ஒரே ஒரு நிபந்தனை தான் விதிக்கி றேன். அது என்னவென்றால், அவர்கள் அய்ந்து சந்தாக்கள் கொடுக்க வேண்டும். அப்படித் தந்தால் தான் நான் அந்தத் திருமணத்திற்கு வருவேன்.
‘மணமகள் வீட்டில் மூன்று முகவரிகள், மணமகன் வீட்டில் இரண்டு முகவரிகள் என மொத்தம் அய்ந்து உறவினர்களின் முகவரிகளைக் கொடுங்கள்; அவர்க ளுக்கு ‘விடுதலை’ நாளிதழ் புதிதாகச் செல்லட்டும், அதை அவர்கள் படித்துப் பழகட்டும்’ என்று கூறுவேன். அதையே தான் இன்றும் நான் எழுதியிருக்கிறேன்.
தோழர்களுக்கு
அன்பான வேண்டுகோள்!
ஆகவே, தோழர்களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள்; தயவுசெய்து என்னை வந்து பார்க்கும்போது பழங்கள், பொருள்கள் போன்ற வற்றை வாங்கி வராதீர்கள். அல்லது வேறு புத்தகங்க ளையோ, ஓடிப்போய் கைத்தறித் துண்டு உள்ளிட்ட பொருட்களையோ வாங்க வேண்டாம். நான் கைத்தறிக்கு எதிரானவன் அல்ல. ஆனால், ஏன் சொல்கிறேன் என்றால், அவையெல்லாம் ஏற்கெனவே என்னிடம் போதுமான அளவுக்கு இருக்கின்றன.
மாறாக, இதைக்கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்து, ‘விடுதலை வளர்ச்சி நிதி’ என்று சொல்லி உங்களால் இயன்றதைக் கொடுங்கள். ‘நம்மால் ரூ.2000 கொடுக்க முடியவில்லையே’ என்று நினைத்துக் கவலைப்படாதீர்கள். நிதி கொடுக்கும்போது அதன் ரூபாய் மதிப்பு முக்கியமல்ல; அதற்குப் பின்னால் உள்ள உங்களுடைய உணர்ச்சிதான் மிக முக்கியம். நீங்கள் காட்டுகிற ஆதரவும், ஊக்கமும்தான் மிக முக்கியம், அதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். எங்கும் விடுதலையைப் பரவச் செய்யுங்கள். ‘விடுதலை’யின் வரலாற்றில் இப்படி எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. ‘விடுதலை’யினுடைய வரலாறு சாதாரணமானது அல்ல.
‘‘இது உண்மையா?’’ பெட்டிச் செய்தி!
பெரிய பெரிய ஆட்கள் எல்லாம், ‘‘விடுதலை’யில் ஒரு செய்தி வந்தால் போதும்; உடனே மாறிவிடும்’’ என்று சொல்வார்கள். ‘விடுதலை’யில், ‘‘இது உண்மையா?’’ என்று ஒரு தலைப்பில் பெட்டிச் செய்தி வெளியிடுவோம். அதற்குப் பெரிய மிக முக்கியத்துவம் இருக்கும். அதனுடைய பலாபலன் ஒரு பெரிய மாற்றமாக இருக்கும். தந்தை பெரியார் அவர்கள் காலத்தில் இருந்து, அண்ணா காலத்தில் இருந்து எல்லா காலகட்டத்திலும், ‘குடிஅரசு’ ஏடாக இருந்தாலும், ‘விடுதலை’யாக இருந்தாலும் திராவிட இயக்க ஏடுகளுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. எத்தனையோ லட்சக்கணக்காக போகிற பத்திரிகைகள், நாளேடுகள் இருக்கின்றன. ஆனால், அவற்றிற்கெல்லாம் இல்லாத ஒரு சிறப்பு இந்த ‘விடுதலை’க்கு உண்டு.
(தொடரும்)
