திருச்செந்தூர், ஜூன் 05 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிகழ்ந்த ரூ.25 லட்சம் தரிசன அனுமதிச் சீட்டு மோசடி மற்றும் அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அங்கு பணிபுரிந்த இணை மற்றும் உதவி ஆணையர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
ரூ.25 லட்சம் மோசடி
திருச்செந்தூர் கோயிலில் தரிசனம் செய்ய வந்த அமைச்சரிடமே பேரம் பேசி, அர்ச்சகர் ஒருவர் பணம் பெற்ற சம்பவம் அண்மையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த மே 14ஆம் தேதி, ரூ.100 கட்டண தரிசன முறையில் போலி அனுமதிச் சீட்டுகளை வழங்கி சுமார் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்ததாக மேனகா என்ற பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த அடுத்தடுத்த முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணைக்கு பின், அறநிலையத்துறை ஆணையர் வினய் இந்த அதிரடி இடமாற்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.
புதிய துணை ஆணையர் நியமனம்
திருச்செந்தூர் கோயிலில் நீண்ட நாட்களாக காலியாக இருந்த துணை ஆணையர் பதவிக்கு, திருச்சி துணை ஆணையர் மற்றும் சரிபார்ப்பு அலுவலராக பணியாற்றி வந்த யக்ஞ நாராயணன் தற்போது புதிய துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
