சென்னை, ஜூன் 05 தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில், இந்தியாவின் முன்னணி பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான லார்சன் அண்டு டூப்ரோ (L&T) நிறுவனத்துடன் ரூ.18,600 கோடி மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த புதிய முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் 8,200 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, தொழில் துறையில் மேற்கொள்ளப்படும் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சந்திப்பின் போது எல் அண்டு டி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ்.என்.சுப்ரமணியன் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார். தமிழ்நாட்டில் எல் அண்டு டி நிறுவனம் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொண்டு, தொழில் துறையை வலுப்படுத்தி வருவதற்கும், தற்போது 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முன்வந்துள்ளதற்கும் முதலமைச்சர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
‘திராவிட மாடல்’ அரசு முன்னேற்பாட்டால் வந்த முதலீடு
இதற்கு முன்னதாக, கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் நடைபெற்ற ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ மாநாட்டில், அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காஞ்சிபுரத்தில் தரவு மய்யம் அமைப்பதற்கான முதற்கட்ட ஒப்பந்தம் எல் அண்டு டி நிறுவனத்துடன் செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த திட்டங்களின் அடுத்தகட்ட விரிவாக்கம் மற்றும் புதிய திட்டங்கள் புதிய அரசின் கீழ் இறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி, ஜூன் 5 புதுச்சேரி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 21-55 வயதிற்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.2500 உயர்த்தி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் 64,450 குடும்பத் தலைவிகள் பயன்பெறுவர். மேலும், முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 1,96,616 பயனாளிகளுக்கு ரூ.2500, ரூ.3,000 மற்றும் ரூ.4,000 வழங்க ஏப்ரல் மாதத்திற்கான தொகையாக ரூ.56 கோடி 32 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிப்டிக் நிறுவன பங்குதாரர்களுக்கு (புதுச்சேரி அரசு மற்றும் அய்டிபிஅய் வங்கி) பங்குத் தொகை ரூ.37 லட்சத்து 76 ஆயிரத்து 664 மற்றும் சிறப்பு பங்குத்தொகை வழங்குவதற்காக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளில் முதல் நாளிலேயே பாடப் புத்தகங்கள் விநியோகம்
சென்னை, ஜூன் 5 சென்னை மாநகராட்சியில் 417 பள்ளிகளில் கோடை விடுமுறை நிறைவடைந்து மாணவா்கள் வகுப்புகளுக்கு வந்த முதல் நாளிலேயே பாடப் புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி கல்விப் பிரிவு அலுவலா்கள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயா்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் உள்ளன. கோடை விடுமுறை நிறைவடைந்து, வியாழக்கிழமை (ஜூன் 4) மாணவ, மாணவியா் வகுப்புகளுக்கு வந்தனா்.
பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியருக்கு இனிப்புகள், பூக்கள் கொடுத்து ஆசிரியா்கள் வரவேற்றனா். அத்துடன், முதல் நாளிலேயே புத்தகப் பைகள், பாடப் புத்தகங்கள், காலணிகள், சீருடைகள் ஆகியவை விநியோகிக்கப்பட்டன.
