மதுரை, ஜூன் 5– மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்,மதுரை சிந்தனை மேடை இணைந்து நடத்திய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாக் கருத்தரங்கம் 24/5/2026 அன்று மாலை 6 மணி அளவில் மதுரை பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ச. பால்ராஜ் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் புத்தகத்தூதன் பா.சடகோபன் அனைவரையும் வரவேற்றார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் பழக்கடை அ. முருகானந்தம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச் செயலாளர் பாவலர் சுப.முருகனாந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் தொடக்கத்தில் புரட்சிக் கவிஞர் கவிதைகளை, பாடல்களாக, மறைந்த பிஆர்சி சந்திரன், மஞ்சுளா ஆகியோரின் பெயர்த்திகள் இலக்கியா, கபிலயா, மற்றும் மகாமதி, அர்ச்சுனன் ஆகிய மாணவ மாணவிகள் பாடினார்கள்.
2026இல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு அரசுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளைப் பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது.. தொடர்ந்து பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டச் செய லாளர் வீர.பழனிவேல்ராசன் தொடக்க உரையாற்றி கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார்.
புரட்சி கவிஞர் பாடல் களில் படித்ததும் ரசித்ததும் என்ற தலைப்பில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் இராம.வைரமுத்து திராவிடத்தின் வெற்றியை, இன்றைய நடப்புக்கு ஏற்றவாறு இருக்கும் புரட்சிக் கவிஞர் கவிதைகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். மதுரை சிந்தனை மேடை-யின் தலைவர் ஜெ வெண்ணிலா கல்யாணம் செய்யப்போகும் பெண்ணின் கதி பற்றியும் பெண் உரிமைகள் பற்றி யும் பாடியிருக்கும் பாடல் களை நினைவு கூர்ந்து உரையாற்றினார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, பொதுவுடமைக் கருத்துகளை, கடவுள் மறுப்போடு இணைத்து புரட்சிக்கவிஞர் எப்படிக் கவிதைகளாகக் கொடுத்திருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டி உரையாற்றினார். தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகப் பேச்சாளர் திருப்பரங்குன்றம் கவிஞர் இரா.ஜீவா புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழாப் பேருரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் புரட்சிக் கவிஞரின் கவிதைகள் எப்படி மற்ற கவிஞர்களை விடச் சிறப்பானது, தனித் தன்மையானது என்பதனை பாரதியார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ,கவிஞர் கண்ணதாசன் போன்ற வர்களுடைய கவிதைகளோடு ஒப்பிட்டு உரையாற்றினார். மற்ற கவிஞர்களிடமிருந்து வேறுபட்டு கடவுள் மறுப்பு, திராவிட உணர்வு, பொதுவுடமை, பெண்ணுரிமை போன்ற கருத்துகளை புரட்சி கவிஞர் எப்படி புரட்சிகரமான கவிதைகளாக எழுதியிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகளோடு எடுத்துவைத்து அழகுற உரையாற்றினார். நிகழ்வின் நிறைவாக விராட்டிபத்து சிவா அவர்கள் நன்றி உரையாற்றினார்.
திராவிடர் கழகத்தினு டைய தலைமை செயற்குழு உறுப்பினர் வே. செல்வமும், மாவட்டச் செயலாளர் இராலீ.சுரேசும் நிகழ்வினை ஒருங்கிணைத்தனர். நிகழ்வின் இறுதியில் கலந்துகொண்ட அனைவருக்கும் புலால் உணவு வழங்கப்பட்டது.
