தேர்தல் வாக்குறுதிகளைக் கைவிரித்திட விஜய் அரசு திட்டம்! த.வெ.க. அரசுக்கு – முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

8 Min Read

சென்னை, ஜூன் 18-– “வெள்ளை அறிக்கை அல்ல, அது வெற்று அறிக்கை!” வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டோம் என கைவிரிக்கவே இந்த வெள்ளை அறிக்கை தங்களின் இயலாமையை மூடி மறைக்கும் உத்தி என்றும் நலத்திட்டங்களை நிறைவேற்றி தி.மு.க. ஆட்சியில் வாங்கிய கடனை விட குறைவான கடன் நீங்கள் வாங்கினால் நான் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன். இது சவால் என்றும் ஒன்றிய அரசால் கடந்த ஆண்டில் ரூ.41,411 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது பற்றி கூறவில்லையே ஏன்.. அவ்வளவு பயமா..? என்றும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (17.6.2026) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு. கழக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதன் விவரம் பின்வருமாறு:–

நேற்று (16.6.2026) இந்த அரசு வெளி யிட்ட வெள்ளை அறிக்கை என்பது ஒரு வெற்று அறிக்கை தான். இதன் உண்மையான நோக்கம் என்பது, இந்த அரசு தன்னுடைய இயலாமையை மூடி மறைக்க கூடிய உத்தியாக இதை வெளி யிட்டுள்ளது. மக்களிடம் அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு வழி தெரியாமல் கையை விரித்து, தங்கள் இயலாமையை மூடி மறைத்து தப்பித்துக்கொள்ளும் விதமாக ஒரு எஸ்கேப்பிசமாக இந்த வெற்று அறிக்கையைப் பயன்படுத்தியுள்ளனர்.

வெள்ளை அறிக்கை வெளியிடுவது என்பது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே 2001, 2021 ஆம் ஆண்டு களில் வெள்ளை அறிக்கை வெளி யிடப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப் பட்டுள்ள வெள்ளை அறிக்கை என்பது மூன்றாவது வெள்ளை அறிக்கை. இப்படி மூன்று முறை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தாலும் தற்போதைய வெள்ளை அறிக்கைக்கும் இதற்கு முன்பான வெள்ளை அறிக்கைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

மறைப்பதற்கான காரணம் என்ன?

2001 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த போது ஜெயலலிதா அவர்கள் வெளியிட்ட வெள்ளை அறிக்கை அதற்கு முன்பான 10 ஆண்டுகால நிதி நிலை அறிக்கையை கொண்டிருந்தது. அதற்குப் பிறகு கடந்த எங்களுடைய ஆட்சியில் 2021 ஆம் ஆண்டு வெளியிட்ட வெள்ளை அறிக்கையானது அதற்கு முந்தைய 15 ஆண்டுகால நிதிநிலை அறிக்கையை உள்ளடக்கி இருந்தது. ஆனால் தற்போது இவர்கள் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் கடந்த அய்ந்தாண்டின் நிதி நிலை அறிக்கை மட்டுமே உள்ளது. அதற்கு முன்பு இருந்த நிதி நிலை பற்றிய எந்த தகவல்களும் இடம்பெறவில்லை. தி.மு.க. ஆட்சியை மட்டும் குறிப்பிட்டு அதற்கு முன்பிருந்த அ.தி.மு.க. ஆட்சியின் நிதி நிலைமை பற்றி மறைப்பதற்கான காரணம் என்ன.? யாரைக் காப்பாற்றுவதற்காக இந்த வெள்ளை அறிக்கையில் அ.தி.மு.க. ஆட்சியின் நிதி நிலை அறிக்கை இடம்பெறவில்லை என்ற கேள்வி எழுகிறது. தீர்ந்து போன சக்தி என இவர்கள் குறிப்பிட்டார்களே அவர்களிடம் இருந்து இன்னும் யாரையாவது கவர்ந்து கொள்வதற்காக, இந்த வெள்ளை அறிக்கையில் அவர்கள் ஆட்சி நிதி நிலை பற்றி மறைக்கப்பட்டுள்ளதா? அதை மக்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.

இந்த வெள்ளை அறிக்கையின் நோக் கமே மக்களிடம் என்ன சொல்லி தப்பித்துக் கொள்வது என்பதாக உள்ளது. ஆழம் தெரியாமல் காலை விட்டு நிறைவேற்ற முடியாத தவறான வாக்குறுதிகளை வழங்கி மக்களை நம்ப வைத்தது. ஆட்சிக்கு வந்துவிட்டதால் இதை வைத்து தப்பித்துக் கொள்ள நினைக்கிறார்கள்.

பொய்யான வாக்குறுதிகள்!

நாங்கள் 2021 ஆம் ஆண்டில் வெள்ளை அறிக்கை வெளியிட்ட போதே இந்த வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி நாங்கள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்காக அல்ல அதற்காக இதை வெளியிடவில்லை என்பதை தெளிவாக மக்களிடம் கூறினோம். ஆனால் இப்போது இவர்கள் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையிலேயே நிதி நிலையை காரணம் காட்டி புதிய திட்டங்கள் தொடங்குவது சிரமம் என ஆரம்பத்திலேயே சொல்கிறார்கள். அப்படி என்றால் இவர்கள் நோக்கம் வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி தாங்கள் அளித்த பொய்யான வாக்குறுதிகளில் இருந்து தப்பித்துக் கொள்வது மட்டுமே. எடுத்த எடுப்பிலேயே தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என கைவிரித்துவிட்டது இந்த அரசு. நிதி நிலை மோசமான சூழல் இருந்த போதும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய எங்களின் முதலமைச்சர் எங்கே, நிதி நிலை கட்டுக்குள் இருந்தும் அதை காரணம் காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என சொல்லும் இவர் எங்கே!

வழக்கமாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். ஆனால் நாளை ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் பற்றி கூற வேண்டும் என்பதால் அதில் இருந்து தப்பித்துக் கொள்ள தற்போதே புதிய திட்டங்களை எதிர்பார்க்காதீர்கள் என மக்களிடம் சொல்லும் விதமாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் கடந்த ஆட்சியில் கடன் இரு மடங்காக அதிகரித்து விட்டது என்கிறார். பொதுவாக நிதி நிர்வாக தன்மையும் வரலாற்று ரீதியாக இந்த நிதிநிலைமை, கடன் எவ்வாறு உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும்.

தி.மு.க. ஆட்சியில்தான் கடன் அளவு உயர்ந்ததா?

2006–2007 ஆம் ஆண்டு 57,457 கோடி ரூபாய் கடன் இருந்தது. அதே 2011–2012 ஆம் ஆண்டுகளில் ரூ.1,01,350 கோடியாக இருமடங்காக உயர்ந்திருந்தது. 2016–2017 ஆம் ஆண்டு ரூ.2,11,066 கோடியாக உயர்ந்தது. 2020–2021 ஆம் ஆண்டில் ரூ.4,85,000 கோடி என 2.7 மடங்கு உயர்ந்திருந்தது. தற்போது ரூ.10 லட்சம் கோடி என உள்ளது. ஆகவே இது தொடர்ச்சியாக வர கூடிய ஒன்றுதான் ஆனால் ஏதோ தி.மு.க. ஆட்சியில் தான் கடன் அளவு இவ்வளவு அதிகரித்துள்ளது போல தவறாக குறிப்பிடுகிறார்கள்.

முக்கியத்துவம் தரவில்லை என்பது எந்த வகையில் பொருந்தும்?

தமிழ்நாட்டை குஜராத்தோடு ஒப்பிட்டு கூறி உள்ளார்கள் இது அபத்தமானது . குஜராத் ஒரு நலத்திட்டங்கள் வழங்கும் மாநிலம் அல்ல. ஆனால் நாம் விடியல் பயணம், காலை உணவு, மகளிர் உரிமை தொகை, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளோம். ஆகவே அவர்களோடு நம்மை ஒப்பிடுவது தவறு. அதே போல Capital Expenditure எதுவும் சரியாக செய்யவில்லை என கூறி இருந்தீர்கள். உங்களின் தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் 2500 ரூபாய், 6 சிலிண்டர்கள் இலவசம், 200 யுனிட் இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி, திருமண உதவித் திட்டம், பிறக்கும் குழ்நதைகளுக்கு தங்க மோதிரம் இப்படி நீங்கள் பல வாக்குறுதிகளை கொடுத்துள்ளீர்களே, அவை எல்லாம் Capital Expenditure இல் வருகிறதா.? Capital Expenditure பற்றி எதுவுமே உங்களின் வாக்குறுதியில் இல்லையே ஏன்? தற்போது விளம்பரப்படுத்தி தொடங்கி உள்ளீர்களே சிங்கப் பெண் திட்டம் Capital Expenditure இல் வருகிறதா.? எங்களின் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட Capital Expenditure திட்டங்களான ஈ.சி.ஆர். நெடுஞ்சாலை, பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்தி விட்டீர்கள். அனைத்து Capital Expenditure பணிகளையும் நிறுத்தி வைத்து விட்டு எங்களை மூலதன செலவுக்கு முக்கியத்துவம் தரவில்லை என சொல்வது எந்த வகையில் பொருத்தம்?

அதேபோல வருமானப் பற்றாக்குறை யானது அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அதிகமாக இருந்து தி.மு.க. ஆட்சியில் குறைக்கப்பட்டது. 2020 – 2021 ஆம் ஆண்டில் ரூ.62,325 கோடியாக இருந்தது 2024–25 கழக ஆட்சியில் ரூ.45000 கோடியாக குறைக்கப்பட்டது.

பா.ஜ.க. அரசு பற்றி வாய்திறக்காதது ஏன்? பயமா?

மொத்த ஜிஎஸ்டிபி (GSDP)யில் 3.48 ஆக இருந்த வருவாய் பற்றாக்குறை 1.47 ஆக குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.78,000 கோடி வரக் காரணம் என்ன என மட்டும் கூறாதது ஏன்? அதற்கு காரணமான ஒன்றிய பா.ஜ.க. அரசு பற்றி வாய் திறக்காதது ஏன்? ஜிஎஸ்டி மறுசீரமைப்பின் காரணமாக நமக்கு ரூ.11,809 கோடி இழப்பு, TANGEDCO இழப்பீட்டு நிதி ரூ.16,507 கோடி, எஸ்எஸ்ஏ கல்வி நிதி ரூ.3548 கோடி, ஜல் ஜீவன் குடிநீர் நிதி ரூ.3,112 கோடி, நிதி ஆணையத்தின் மானியம் ரூ.2,246 கோடி, GRF ரூ.3087 கோடி, ஒன்றிய அரசின் வரி பகிர்வு ரூ.1200 கோடி ஆக மொத்தம் ரூ.41,411 கோடி ரூபாய் கடந்த ஆண்டு நமக்கு ஒன்றிய அரசால் ஏற்பட்ட இழப்பு. இதை ஏன் இந்த அரசு மக்களிடம் கூறவில்லை அவ்வளவு பயமா?. இந்த வருவாய் பற்றாக்குறைக்கு காரணமான ஒன்றிய அரசின் செயலை மறைத்து விட்டு ஏதோ கடந்த ஆட்சியின் நிதி மேலாண்மையில் ஏற்பட்ட தவறு போல சித்தரிக்க முயல்கின்றனர்.

அதே போல State own tax revenue மாநில வரி வருவாய் ஆதாரம் பற்றி குறிப்பிடுகையில் குறைந்துள்ளது என கூறினார்கள். ஆனால் அது அ.தி.மு.க. ஆட்சியிலேயே குறைந்து இருந்தது. 2011 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் முடிவில் 7.9% ஆக இருந்தது. 2021 அ.தி.மு.க. ஆட்சியின் முடிவில் அது 5.46% ஆக குறைந்தது. தி.மு.க. ஆட்சியில் 6.33% ஆக அதிகரித்தது தற்போது 5.47% ஆக குறைந்ததற்கு காரணம் ஒன்றிய அரசு GST வரி விகிதத்தில் மாற்றம் கொண்டு வந்தது. இதன் பாதிப்பு கருநாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்ளிலும் எதிரொலித்துள்ளது. அதனால் அவர்கள் சொல்வது போல எங்களால் அது குறையவில்லை.

கடன் அளவில் சுருக்கிப் பார்க்க முடியாது!

அரசு போக்குவரத்து துறையின் கடன் , TANGEDCO கடன் என்பது இலவச பேருந்து அட்டை, இலவச மின்சாரம் உள்ளிட்ட மக்களுக்கான நலத்திட்டங்கள் செய்லபடுத்தப்படுவதாலும், இந்த துறைகள் மக்களுக்கான சேவைத் துறைகள் என்பதாலும் கடன் என்ற அளவில் மட்டும் இதைச் சுருக்கி பார்க்க முடியாது. அப்படி கடன் இல்லாமல் இத்துறையை மாற்றுகிறோம் என்றால் இலவச பேருந்து அட்டை, மகளிர் இலவசப் பயணம், விவசாயிகள் இலவச மின்சாரம் இவற்றை எல்லாம் நிறுத்திப்பாருங்கள். நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என மக்கள் பார்க்க தான் போகிறார்கள்.

ஒரு ஆட்சியில் கடன் என்பது முக்கியம் கிடையாது, அதை எப்படி மக்கள் நலனுக்காகசெலவு செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

ஜி.எஸ்.டி.பி. வரம்பிற்குள் கடன் அளவை எவ்வாறு வைத்துள்ளீர்கள் என்பது தான் முக்கியம். ஆனால் இவற்றை எல்லாம் காரணம் காட்டி தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டோம் என இப்போதே கைவிரித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல். அதற்காக தான் இந்த வெள்ளை அறிக்கை என்ற வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியில் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *