தந்தை பெரியாருடைய சிந்தனை – விருப்பு வெறுப்பற்ற ஒரு பகுத்தறிவுச் சிந்தனை!

0 Min Read

எதையும் வருமுன்னர் சொல்வதுதான் திராவிடர் கழகத்தினுடைய பணி!
திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்

திருவாரூர், ஜூன் 4 ‘‘எதையும் வருமுன்னர் சொல்வதுதான் திராவிடர் கழகத்தினுடைய பணி. தந்தை பெரியாருடைய சிந்தனை – விருப்பு வெறுப்பற்ற ஒரு பகுத்தறிவுச் சிந்தனை. அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில்தான், திருவாரூரைத் தேர்ந்தெடுத்தோம்’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திராவிடர் கழகத்தின் சார்பில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை கட்டும் முன்னெடுப்பு, தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் ஆபத்து! தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில், கருநாடகாவின் பிடிவாதத்தையும், ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றத்தின் மெத்தனப் போக்கையும் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில், 31.5.2026 அன்று காலை திருவாரூரில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவ் வார்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது கண்டன உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இரண்டு நாடுகளுக்கிடையே பிரச்சினை சுமூகமாக  முடிகிறது; ஆனால், இரண்டு மாநிலப் பிரச்சினை தொடர்கிறது!

எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அப்போதே நாம் திராவிடர் கழகத்தின் சார்பாக ஒரு கோரிக்கை வைத்தோம்.  பிறகுதான் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் யோசித்தார். இடைக்கால நிவாரணத் தண்ணீரை எப்போதும் அவர்கள் ஒழுங்காகக் கொடுத்தது இல்லை. அதன் அடிப்படையில்  நாம் சொன்னோம், வருங்காலத்தில் இந்த மாநிலங்கள் இணைந்த அமைப்பு வேண்டாம்; பொதுவான ஓர் அமைப்பு வேண்டும். நமக்கு எப்போதும் இந்தப் பிரச்சினை வரும். ஆகவே, இந்தப் பிரச்சினைகளை, காவிரி நீர் ஆதாரப் பிரச்சினைகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்றால், அமெரிக்கா நாடும், கனடா நாடும், பக்கத்து பக்கத்து நாடுகள்; அந்த இரண்டு நாடுகளும் என்ன செய்திருக்கிறார்கள் என்றால், அங்கே டென்னாசி பள்ளத்தாக்கு என்று ஒரு பள்ளத்தாக்கு இருக்கிறது. அந்தப் பள்ளத்தாக்கில் இரண்டு நாட்டினுடைய நதி நீர் வளம் கலக்கக் கூடிய அளவில் இருந்தது.   இரண்டு நாட்டையும் சேர்ந்தவர் அல்லாதவர்களை, முக்கியமானவர்களை அழைத்து,  அங்கே  Tennessee Valley Authority (TVA) என்ற ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள்.  எந்த ஆசாபாசமும் அங்கே கிடையாது. எது நியாயமோ, எது சட்டப்படியோ அது நடக்கின்றது. பன்னாட்டு தாவாக்கள் படி சட்டம் இருக்கிறது.  வெளி நாடுகளில் கூட எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கின்ற வரைமுறை வகுக்கப்பட்டு உள்ளது. அத னால்தான்  பங்களாதேஷுக்கும் – வங்காளத்துக்கும் தண்ணீர் பிரச்சினை  சுலபமாக முடிகிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், திராவிடர் கழகத்தின் சார்பில் எழுத்து வடிவில் அறிக்கை!

அந்த முறையில் ‘காவிரி வேலி அத்தாரிட்டி’ என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எழுத்திலேயே கொடுத்தோம். எம்.ஜி.ஆர். அவர்கள் தனிப்பட்ட முறை யில், ‘‘இது ரொம்ப சிறந்தது’’ என்று அதை டில்லிக்கு அனுப்பினார்.  வழக்கம் போல, டில்லி பட்டைநாமம் போட்டது.

எனவேதான் நண்பர்களே, அன்றையிலிருந்து இந்தப் பிரச்சினை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ‘விடுதலை’யில் அறிக்கையாக எழுதி இருக்கிறோம். உச்சநீதிமன்றமும் முதலில் சொல்லி இருக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட  இரண்டு அமைப்புகள் ஒப்புதல் கொடுத்தாலொழிய இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட முடியாது. ஏற்கெனவே கொடுக்கவேண்டிய தண்ணீரே கொடுக்கவில்லை என்பது குறைபாடு. ஆனால், புதிதாக என்ன செய்வதற்குத் திட்டமிடுகிறார்கள் என்றால், நமக்குக் கொஞ்சம் நஞ்சம் தண்ணீர் வருகிறது பாருங்கள் –  அதையும் மேகதாது என்று சொல்லக்கூடிய இடத்தில் அணை கட்டி அதனைத் தடுத்து நிறுத்திவிட்டால், தமிழ்நாடு பாலைவனம்தான், நமக்கு வாழ்வாதாரம் கிடையாது.

அந்த அணையைக் கட்டிவிட்டால்,  தண்ணீரே தமிழ்நாட்டிற்கு வராது. நாம் எல்லோரும்  நீர் வளத்துக்கு அவதிப்படுவோம்.

இப்போது இன்னொரு ஆபத்து – அது என்ன வென்றால்,  மேற்காசிய போர் என்பதுதான் அது. அந்தப் போர் எப்பொழுது முடியும்? என்று தெரியாது. விவசாயிகளுக்குத் தேவைப்படுகின்ற உரவிலை ஏறி போயிற்று. அதே மாதிரி பெட்ரோல், டீசல் விலை  ஏறியதால், கத்திரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய் முதல் எல்லா காய்கறி விலைகளும் ஏறிப் போயிற்று. அவர்கள் மேல் தவறில்லை. ஆனால், நம்முடைய பிரதமர் இருக்கிறார் பாருங்கள், நல்ல உபதேசியார்; பிரதமர் மோடி சொல்கிறார், ‘‘எல்லோரும் வீட்டிலேயே இருங்கள்; வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாதீர்கள்; தங்கம் வாங்காதீர்கள். ஒரு வருக்காக காரைப் பயன்படுத்தாதீர்கள், நான்கு, அய்ந்து பேர் சேர்ந்து பயணமாகுங்கள்’’ என்கிறார்.

இப்படி ஒரு உபதேசம் செய்வதற்காக ஒரு பிரதமர்? ஆனால், அவரையும் ஆதரிப்பதற்கு நம் நாட்டில் ஆட்கள் இருக்கிறார்கள்.

பாம்புக்கு பயந்து தள்ளிப் போனால், அதைவிட பெரிய ஆபத்து அந்த இடத்தில் இருக்கிறது. இவ்வ ளவு சங்கடங்கள் நமக்கு இருக்கக்கூடிய ஆபத்து போதாதென்று, இவை எல்லாவற்றையும் விட நண்பர்களே, தாய்மார்களே, சகோதரிகளே, இப்பொழுது இன்னொரு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. அது இன்னும் வெளியே வரவில்லை. அது அறிவியல் மட்டத்தில் மட்டுமே மேலே இருக்கிறது.

‘எல்நினோ’ ஆபத்து!

கடல் உள்வாங்கு கிறதே சில கடற்கரைப் பகுதிகளில், குறிப்பாக நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில். புயல் வந்தாலும், சுனாமி வந்தாலும் முதலில் பாதிக்கப்படுகிற மாவட்டங்கள் எது? இந்தத் திருவாரூர், நாகப்பட்டினம், பேராவூரணி, பட்டுக்கோட்டை போன்ற  கடலோரம் இருக்கின்ற மாவட்டங்கள்தான். இன்னொரு கொடு மையான ஒரு செய்தி இப்போது வருகிறது. அது என்னவென்றால், கடலுக்குள் ஓர் ஆபத்து. ஏன் இப்பொழுது வெயில் சுட்டெரிக்கிறது? ஏன் மக்கள் இவ்வளவு அவதிப்படுகிறார்கள்; வெயில் ஏன் தினசரி குறையாமல் இருக்கிறது என்று சொன்னால், ‘எல்நினோ’ என்று அதற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய புதிய செய்தி இது. ஒவ்வொருத்தருக்கும் வீடு வீடாகச் சென்று, தாய்மார்கள் உட்பட சொல்ல வேண்டும். கடலுக்குள்ளேயே வெப்ப சூழ்நிலை உள்ளுக்குள்ளே ஏற்பட்டிருக்கிறது. அதைத்தான் ‘பிரளயம்’ வரப் போகிறது என்று சொல்கிறார்கள். அந்த எல்நினோவினால், நிலத்தடி நீர் கீழே போய்விடும். ஆனால், நம்ம ஆளுங்க மரத்தை வெட்டிப் போட்டு, யாகம் செய்கிறார்கள் மழைக்காக!  அதனால், அப்படிப்பட்ட ஒரு கொடுமை. இது ஒரு பக்கத்தில் அச்சுறுத்துகிறது.

சுற்றுச்சூழல் தாக்கத்திலிருந்து விடுதலை கிடைக்குமா என்று நினைத்தால், ‘சூப்பர் எல்நினோ’ என்று இன்னொன்று உருவாகுகிறது என்கிறார்கள்.

மேகதாது அணை என்பது இருக்கின்ற உரிமையையும் பறிக்கின்ற ஒரு சூழ்ச்சியாக இருக்கிறது

எதிர்காலம் என்னாகுமோ? என்று கவலைப்படக் கூடிய அளவிற்கு இன்றைய சூழல் இருக்கிறது. இந்த நாடு காடாக இருந்தால் கூட பரவாயில்லை; காய், கனிகளைச் சாப்பிடலாம். ஆனால், காடுகள் கூட இப்போது கிடையாது. அந்த அளவிற்கு வெறும் வறட்சி பூமியாக்கி, நம்முடைய எதிர்காலம், நம்முடைய காலத்திலேயே இப்படி ஆகியிருக்கிறது.  திடீரென்று யாருமே  எதிர்பார்க்கவில்லை, பெருந்தொற்று கோவிட்–19 தொற்று. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தார்கள் மக்கள், வெளியில் யாருமே நடமாட முடியவில்லை. அதுபோன்ற ஒரு பெரிய ஆபத்து வரக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான், விவசாயப் பெருங்குடி மக்களே, மேகதாது அணை என்பது இருக்கின்ற உரிமையையும் பறிக்கின்ற ஒரு சூழ்ச்சியாக இருக்கிறது.

எனவேதான், இதை விளக்கிச் சொல்கிறோம். இது ஏதோ திராவிடர் கழகம் அல்லது நம்முடைய கூட்டணிக் கட்சிகளான தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்ற தோழமைக் கட்சிகளுடைய பிரச்சினை என்பதற்காக நடத்தப்படுகின்ற போராட்டம் அல்ல.  உள்ளபடியே நம்முடைய தலைமுறையினுடைய வாழ்வு. நாளைக்குக் காலையில், நாளை மறுநாள், நமக்கு எப்படி சோறு? உத்தரவாதம் இல்லை. அவ்வளவு பெரிய ஆபத்தான ஒரு சூழ்நிலை, எதையும் வருமுன்னர் சொல்வதுதான் திராவிடர் கழகத்தினுடைய பணி. தந்தை பெரியாருடைய சிந்தனை. விருப்பு வெறுப்பற்ற ஒரு பகுத்தறிவுச் சிந்தனை. அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில்தான், திருவாரூரைத் தேர்ந்தெடுத்தோம். நீங்கள் எல்லாம் இந்த வெயிலையும் பொருட்படுத்தாமல், மிகப்பெரிய அளவுக்குத் தாய்மார்கள் வந்திருக்கிறீர்கள்.

இது ஒரு தொடக்கமே தவிர முடிவல்ல!

தோழமை கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள், நம்மு டைய பூண்டி கலைவாணன் உள்பட எல்லா தோழர்க ளும் வந்தார்கள். ஆகவே, இது ஒரு தொடக்கம். இது ஒரு முடிவல்ல, முதல் கட்டம். இந்த ஆபத்தை உணர வேண்டும். இதை தமிழ்நாடு அரசு எதிர்த்துப் போராட வேண்டும். ஆனால், புதிதாக அமைந்துள்ள தமிழ்நாடு  அரசு என்ன செய்யப் போகிறது என்பது முதலமைச்சருக்கே தெரியாத போது, நமக்கு என்ன தெரியும்? அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது முதலமைச்சருக்குத் தெரிந்தால்,நல்லது. முதல மைச்சருக்கே தெரியாது என்றால், எப்படி நமக்குத் தெரியும்? யாராலும் ‘ஆரூடம்’ கணிக்க முடியாது.

தீயணைப்பு நிலையங்கள் போன்றவை நம்முடைய அமைப்புகள்!

அதை முற்றிலும் எல்லோரும் உணரக்கூடிய அளவிற்கொரு நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் தோழர்களே, இந்தப் போராட்டம். நம்முடைய தோழர்களிடம் நான் சந்தேகத்தோடு சொன்னேன், நான்கு நாள்களுக்கு முன்புகூட சொன்னேன். இது  தாமதிக்க வேண்டிய பிரச்சினை இல்லை. இது ஒன்றும் சம்பந்தி முறை, மாமன் முறை, தாய்மாமன் உறவு என்றெல்லாம் சொல்லி இயல்பாக வருவது போன்று இல்லை. ஓரிடத்தில் தீப்பிடித்தால், உடனே அந்தத் தீயை அணைப்பதற்கு தீயணைப்பு நிலையத்திலிருந்து எப்படித் தீயணைப்பு வண்டிகள் வருமோ, அதுபோன்றதுதான் நம்முடைய அமைப்புகள். தொடங்கும்போதே, அதைத் தடுக்கவேண்டும் என்ப தற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம்.

அந்த வகையில்தான், தமிழ்நாட்டைப் பாலை வனமாக்கக் கூடாது. நம்முடைய விவசாயிகளுடைய உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும். மீண்டும் மேகதாது அணை கூடாது என்று சொல்கிற நேரத்தில், எரிகிற நெருப்பில், எண்ணெய் மட்டுமல்ல,  பெட்ரோல் ஊற்றுவது போன்று இன்னொரு செய்தி வருகிறது. அது என்னவென்றால், கருநாடக மாநிலத்தில் ஏற்கெனவே இருந்த சித்தராமையா, முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி, இந்தப் பிரச்சினையில் யார் மிகக் கடுமையாகப் பேசி வருபவரும், தமிழ்நாட்டு மக்களின் உணர்விற்கு மதிப்பளிக்காதவருமான சிவகுமார் என்பவர் முதலமைச்சராக வந்திருக்கிறார்.  அந்த ‘சிவனுடைய குமார்’, என்ன செய்யப் போகிறார் என்று எல்லோருக்கும் தெரியும்.

அவர் ஏதோ இந்தியாவுக்கே ராஜா என்று நினைத்துக் கொண்டு,  தமிழ்நாட்டுக்கு உரிமையே கிடையாது என்று, காவிரி நீர் நமக்கு இல்லை என்று சொல்கிறார். அவர் இப்பொழுது முதலமைச்சராக வந்திருக்கிறார்,  என்ன ஆகப் போகிறதோ?

தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் பிரதிபலிக்க வேண்டும்!

இந்தப் பிரச்சினை ஒவ்வொரு நாளும், நம்முடைய துயரத்தை, துன்பத்தை, நம்முடைய உரிமைகள் பறிப்பை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆகவே, தாய்மார்களே, பெரியோர்களே, இந்தத் திருவாரூர் போராட்டம் ஒரு தொடக்கம். இது முடிவல்ல! இது எல்லா இடங்களிலும் தமிழ்நாட்டில் பிரதிபலிக்க வேண்டும். நம்முடைய உரிமைகளுக்குக் குரல் கொடுக்க வேண்டும். இப்போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த தோழர்கள் அத்தனை பேருக்கும் நன்றி சொல்லி, இந்த உரிமைகள் குறித்து ஒலி முழக்கத்தை சொல்கிறேன். அதை நீங்கள் திரும்பவுச் சொல்லி, நம்முடைய கண்டனத்தைப் பதிவு செய்வோம்.

‘‘வாழ்க வாழ்க வாழ்கவே

தந்தை பெரியார் வாழ்கவே!

வெல்க வெல்க வெல்கவே!

தமிழர் உரிமை வெல்கவே!

காப்போம், காப்போம்!

காவிரி உரிமையைக் காப்போம்!

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்

காவிரி ஆற்றின் குறுக்கே

மீண்டும் புதிய அணைகட்ட

முயற்சிக்கின்ற கருநாடக அரசைக்

கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்

மேகதாது அணைக்கட்டா?

தமிழ்நாட்டுக்குத் தலைவெட்டா?

அணை கட்டாதே, அணை கட்டாதே

மீண்டும் ஒரு அணை கட்டாதே!

வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே

தமிழ்நாட்டை வஞ்சிக்காதே

கருநாடக அரசே வஞ்சிக்காதே!

ஒன்றிய அரசே வஞ்சிக்காதே!

உச்சநீதிமன்றமே வஞ்சிக்காதே!

காவிரி நீர் எங்கள் உரிமை

சட்டமும், தீர்ப்பும் சொல்லும் உண்மை!

மேகதாது அணைத் திட்டம்

தமிழ்நாட்டைப் பாலையாக்கும்

ஆபத்தான திட்டமே!

மீறாதே, மீறாதே

புதிய அணை என்ற பெயரால்

வரைமுறையை மீறாதே!

தீர்ப்புகளை மீறாதே!

கருநாடக அரசே மீறாதே!

அரசியல் அல்ல; அரசியல் அல்ல!

தமிழ்நாட்டின் வாழ்வுரிமை!

காவிரி எங்கள் வாழ்வுரிமை!

காவிரி எங்கள் வாழ்வாதாரம்!

காவிரி தடுப்பு – தரும் சேதாரம்!

கருநாடக அரசே வஞ்சிக்காதே

ஒன்றிய அரசே ஒன்றிய அரசே

வேடிக்கை பார்க்காதே!

வேடிக்கை பார்க்காதே!

கருநாடகத்தின் வஞ்சனையை

கருநாடகத்தின் சட்டமீறலை

வேடிக்கை பார்க்காதே!

வேடிக்கை பார்க்காதே!

உச்சநீதிமன்றமே

மெத்தனம் காட்டாதே!

தமிழர் நிலத்தைப் பாலையாக்கும்

கருநாடகத்தின் திட்டத்தில்

மெத்தனம் காட்டாதே!

போராடுவோம், வெற்றி பெறுவோம்

வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!’’ என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒலி முழக்கம் எழுப்ப, தோழர்கள் அனைவரும் திரும்பச் சொன்னார்கள்.       (உரை நிறைவு)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *