தமிழ்நாட்டில் தந்தை பெரியார் ஏற்றிய சுயமரியாதைத் தீ இன்னும் அணையவில்லை! தொடர்ந்து அது சமூகநீதிக்காகப் போராடும்!

.பி தலைநகர் லக்னோவில் 31.5.2026 அன்று நடைபெற்ற அர்ஜக் சங்கத்தின் நிறுவன தின விழாவில் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி சிறப்புரை:

சிறப்புக் கட்டுரை சிறப்புக் கட்டுரை

Contents
உ.பி தலைநகர் லக்னோவில் 31.5.2026 அன்று நடைபெற்ற அர்ஜக் சங்கத்தின் நிறுவன தின விழாவில் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி சிறப்புரை:மனித நேயம் – சமூக நீதி – சுயமரியாதைபெரியாரின் சிந்தனையொட்டிய ராம்ஸ்வரூப் வர்மாவின் சிந்தனைகள்பெரியாரின் போராட்டம் – சமூகநீதிக்கான நூற்றாண்டுப் பயணம்வைக்கம் வீரர் பெரியார்சமூகநீதிக்காக காங்கிரசை விட்டு வெளியேறிய பெரியார்வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை காப்பாற்றிய போராட்டம்குலக்கல்வித் திட்டத்தை வீழ்த்திய மக்கள் எழுச்சிவிஸ்வகர்மா திட்டம் – புதிய வடிவில் பழைய கொள்கைசட்ட எரிப்புப் போராட்டம்:தமிழ்நாடு அரசியலை மாற்றிய பெரியாரின் தாக்கம்எம்.ஜி.ஆர். அரசு கொண்டு வந்த ரூ.9000 வருமான உச்சவரம்பு69% இடஒதுக்கீட்டிற்கு சட்ட பாதுகாப்புபெரியாரின் சிந்தனை – தமிழ்நாட்டின் அரசியல் பண்பாடுபோராட்டமும் விழிப்புணர்வும் – மாற்றத்திற்கான கருவிகள்ஓய்வறியாத போராளிஜாதி என்பது மனநிலை‘விடுதலை’ – சிந்தனையின் ஆயுதம்வடக்கும் தெற்கும் இணையும் நேரம்எதிர்காலத்திற்கான அய்ந்து பாடங்கள்நிறைவுரை

மனித நேயம் – சமூக நீதி – சுயமரியாதை

உத்தரப் பிரதேசம் கான்பூரில் வாழ்ந்த சமூகச் சீர்திருத்தவாதி இராம்ஸ்வரூப் வர்மா அவர்களால் நிறுவப்பட்ட அர்ஜக் சங்கத்தின் நிறுவன நாள் விழாவில் உங்கள் முன்னிலையில் பேசும் வாய்ப்பு கிடைத்தது குறித்து பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

தந்தை பெரியாரின் கொள்கை வழித் தோன்றலும், திராவிடர் கழகத் தலைவருமான ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் என்னை இவ்விழாவில் பங்கேற்குமாறு அனுப்பியுள்ளார். அதற்கான காரணமும் மிகப் பொருத்தமானது.

தந்தை பெரியார் தொடங்கிய திராவிட இயக்கமாம் திராவிடர் கழகம் மனிதநேயக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட இயக்கமாகும். அதேபோல், வடஇந்தியாவில் மனிதநேயத்தை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் அர்ஜக் சங்கமும் ஒரு மனிதநேய இயக்கமே. எனவே, தந்தை பெரியாரின் சிந்தனைகளும், இராம்ஸ்வரூப் வர்மாவின் சிந்தனைகளும் ஒன்றோடொன்று பரிமாறப்பட்டு, தேசிய ஒருமைப்பாடும் மனிதநேயமும் வலுப்பெற வேண்டியது காலத்தின் தேவையாகும்.

அத்தகைய வாய்ப்பை எனக்கு வழங்கிய ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இவ்விழாவில், எனது பழைய நண்பரான டாக்டர் அனூப் அவர்களை மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) நாங்கள் இணைந்து செயல்பட்டோம்.

பெரியாரின் சிந்தனையொட்டிய ராம்ஸ்வரூப் வர்மாவின் சிந்தனைகள்

ராம்ஸ்வரூப் வர்மா அவர்களின் நூல்களையும் கட்டுரைகளையும் வாசித்தபோது, தென்னிந்தியாவில் நமக்கு அதிகம் அறிமுகமில்லாத ஒரு மாபெரும் சமூக சீர்திருத்தவாதியை நான் கண்டேன். ஜாதி ஒடுக்குமுறை, மூடநம்பிக்கை, பார்ப்பன ஆதிக்கம் ஆகியவற்றிலிருந்து பகுஜன் மக்களை விடுவிப்பதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த போராளியாக அவர் விளங்கினார்.

அவர் வலியுறுத்தியது: “அரசியல் மாற்றத்திற்கு முன் சமூகப் புரட்சி அவசியம்” என்பதையே. பார்ப்பனியம், மனுதர்மம், ஜாதி ஆதிக்கம், மூடநம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் ஆகியவற்றை அவர் கடுமையாக எதிர்த்தார். ஜாதி அடக்குமுறையின் அடையாளங்களாகக் கருதப்பட்ட மனுதர்ம சாஸ்திரத்தையும் இராமாயணத்தையும் எரிக்கும் போராட்டங்களையும் முன்னெடுத்தார்.

அவரது புகழ்பெற்ற முழக்கம்: “நூற்றில் தொண்ணூறு பேர் ஒடுக்கப்பட்டவர்கள்; அந்த தொண்ணூறு சதவீதமும் நமதே!” என்பதாகும். இந்த வாசகத்தைப் படித்தபோது எனக்கு தந்தை பெரியார் கூறிய ஒரு கருத்து நினைவுக்கு வந்தது:

“97 சதவீத மக்கள் நம்மவர்கள்; 3 சதவீதம் மட்டுமே ஆதிக்க சக்திகள்.” இந்த இரண்டு சிந்தனைகளும் ஒரே உண்மையை வெளிப்படுத்துகின்றன.

பெரியாரின் போராட்டம் – சமூகநீதிக்கான நூற்றாண்டுப் பயணம்

வடஇந்தியாவில் இராம்ஸ்வரூப் வர்மா 1968-க்குப் பின்னர் முன்னெடுத்த பணிகளை, தமிழ்நாட்டில் தந்தை பெரியார் 1919-ஆம் ஆண்டிலிருந்தே முன்னெடுத்தார்.

மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்கள் விடுதலை, சமூகநீதி, சுயமரியாதை என்ற இலக்குகளுக்காக அவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார்.

மதமும் ஜாதியும் இணைந்து மக்களின் அறிவையும் உரிமைகளையும் பறித்துவிட்டன என்பதை பெரியார் உணர்ந்தார். அவர் கூறியதாவது: “மக்கள் கல்வியிலிருந்து மட்டுமல்ல; சுயமரியாதையிலிருந்தும் விலக்கப்பட்டுள்ளனர்.” எனவே, மனிதனை இழிவுபடுத்தும் ஒவ்வொரு அமைப்பையும் அவர் சவாலுக்கு உட்படுத்தினார்.

“ஜாதி வேதங்களால் உருவாக்கப்பட்டது” என்று கூறப்பட்டபோது, “அப்படியானால் வேதங்களை ஒழிப்பேன்” என்றார். “வேதங்கள் கடவுளால் கொடுக்கப்பட்டவை” என்றபோது, “அப்படியானால் அந்தக் கடவுளையே ஒழிப்பேன்” என்றார். ஏனெனில் அவரது நோக்கம் மத எதிர்ப்பை முன்னெடுப்பது அல்ல:  மனிதனை அடிமைப்படுத்தும் எண்ணங்களை ஒழிப்பதே ஆகும்.

வைக்கம் வீரர் பெரியார்

1924-ஆம் ஆண்டு கேரளாவின் வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கோவிலைச் சுற்றியுள்ள சாலைகளில் நடக்கத் தடை விதிக்கப்பட்டது.

அதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் களமிறங்கினார். அவர் போராட்டத்தை வழிநடத்தினார். இருமுறை கைது செய்யப்பட்டார். கடுமையான சிறைத் தண்டனையை அனுபவித்தார். இறுதியில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அந்தச் சாலைகள் திறக்கப்பட்டன.

இந்த மாபெரும் வெற்றிக்காக கேரள மக்கள் அவரை “வைக்கம் வீரர்” என்று போற்றினர். ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிராக தன் மாநிலத்தைத் தாண்டி போராடிய தலைவர்களில் ஒருவராக பெரியார் திகழ்ந்தார்.

சமூகநீதிக்காக காங்கிரசை விட்டு
வெளியேறிய பெரியார்

1919ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்த பெரியார், ஒரு கோரிக்கையை மட்டுமே தொடர்ந்து முன்வைத்தார். “பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்பதே அந்தக் கோரிக்கை.

1919 முதல் 1925 வரை நடைபெற்ற ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட்டிலும் அவர் இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்தார். ஆனால் பார்ப்பன ஆதிக்கம் காரணமாக அது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது. இறுதியில், சமூகநீதிக்கான போராட்டத்தை காங்கிரசுக்குள் நடத்த இயலாது என்பதை உணர்ந்த பெரியார், 1925 ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.

அவரது இலக்கு வெறும் கல்வி அல்லது வேலைவாய்ப்பு அல்ல. மக்களிடம் பறிக்கப்பட்டிருந்த மனித மரியாதையையும் சுயமரியாதையையும் மீட்டெடுப்பதே அவரது வாழ்நாள் நோக்கமாக இருந்தது.

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை
காப்பாற்றிய போராட்டம்

1916-இல் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி, 1920 தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் சமூகநீதிக்கான பல முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதில் மிக முக்கியமானது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (Communal Representation) ஆகும். 1928 முதல் 1950 வரை தமிழகத்தில் அனைத்து சமூகங்களுக்கும் உரிய பங்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னர், இந்த முறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்றமும் பின்னர் உச்சநீதிமன்றமும் அந்த அரசாணையை ரத்து செய்தன. இது சமூகநீதிக்கு எதிரான மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

ஆனால் பெரியார் அமைதியாக இருக்கவில்லை. ஒரு ஆண்டுக்கும் மேலாக மக்கள் போராட்டங்களை நடத்தினார். அவரது தொடர் போராட்டத்தின் விளைவாக, 1951-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு அரசியலமைப்புச் சட்டம் 15(4) சேர்க்கப்பட்டது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வியில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு கிடைத்தது. இந்த வரலாற்று வெற்றியின் பின்னணியில் இருந்த சக்தி பெரியாரின் சமூகநீதிப் போராட்டமே.

குலக்கல்வித் திட்டத்தை வீழ்த்திய மக்கள் எழுச்சி

1952இல் முதலமைச்சர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஆபத்தான திட்டமாக இருந்தது. அந்தத் திட்டத்தின்படி, மாணவர்கள் அரை நாள் மட்டுமே பள்ளியில் படிக்க வேண்டும். மீதமுள்ள நேரத்தில் தங்கள் பெற்றோரின் பாரம்பரியத் தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும்.

அதாவது, முடி திருத்துபவரின் மகன் அதையே செய்ய வேண்டும். தச்சரின் மகன் தச்சு வேலையையே தொடர வேண்டும். இது ஜாதி அடிப்படையிலான தொழில் அமைப்பை நிலைநிறுத்தும் திட்டமாக இருப்பதை பெரியார் உடனே உணர்ந்தார். “குழந்தைகளை அவர்களின் பாரம்பரியக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து உயர்கல்விக்கு கொண்டு செல்ல வேண்டும்; மீண்டும் அதே சங்கிலியில் கட்டிவைக்கக் கூடாது” என்று அவர் வலியுறுத்தினார்.

தந்தை பெரியார் தலைமையில் எழுந்த மக்கள் எழுச்சியின் காரணமாக ராஜாஜி பதவி விலக நேரிட்டது. குலக்கல்வித் திட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. இன்று தமிழ்நாட்டில் அனைத்து சமூகங்களும் கல்வி வாய்ப்புகளைப் பெற்றிருப்பதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

விஸ்வகர்மா திட்டம்
புதிய வடிவில் பழைய கொள்கை

18 பாரம்பரியத் தொழில் சார்ந்த ஜாதிகள் அடையாளம் காணப்பட்டு, அந்தத் தொழில்களைத் தொடரும் இளைஞர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இது உயர்கல்விக்குப் பதிலாக பாரம்பரியத் தொழிலையே ஊக்குவிக்கும் ஆபத்தான அணுகுமுறையாகும்.

எனவே, அர்ஜக் சங்கம் போன்ற அமைப்புகள் இதுபோன்ற கொள்கைகளை ஆய்வு செய்து, தேவையான இடங்களில் மக்கள் மத்தியில் எதிர்ப்பை உருவாக்க வேண்டும்.

சட்ட எரிப்புப் போராட்டம்:

ஜாதி முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார். 1957-ஆம் ஆண்டு, ஜாதியைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் சில பகுதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினார். இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக அரசியலமைப்பின் குறிப்பிட்ட பகுதிகளை மக்கள் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. அதற்குப் பிறகே “அரசியலமைப்பை எரிப்பது குற்றம்” என்று தனிச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறை சென்றனர்.பதினெட்டு பேர் சிறையிலேயே உயிரிழந்தனர். கர்ப்பிணிப் பெண்கள்கூட சிறைக்குச் சென்றனர்.

தமிழ்நாடு அரசியலை
மாற்றிய பெரியாரின் தாக்கம்

பெரியாரின் தொடர் பிரச்சாரங்களும் மக்கள் இயக்கங்களும் தமிழக அரசியலை முழுமையாக மாற்றின.  சமூகநீதியை ஏற்றுக்கொள்ளாமல் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்த முடியாத நிலை உருவானது. இது பெரியார் உருவாக்கிய சமூக விழிப்புணர்வின் வெற்றியாகும்.

எம்.ஜி.ஆர். அரசு கொண்டு வந்த
ரூ.9000 வருமான உச்சவரம்பு

1979-இல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு கொண்டு வந்தார்.

தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பும் போராட்டங்களும் வெடித்தன. அப்போது தந்தை பெரியார் மறைந்துபோய் விட்டாலும், அவர் உருவாக்கிய இயக்கமும் சமூகநீதிக்கான போராட்ட மரபும் உயிர்ப்புடன் இருந்தது. திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா கி. வீரமணி அவர்கள் தலைமையில் தீவிரமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்தச் சூழ்நிலையிலேயே மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) குறிப்பிடத்தக்க தேர்தல் பின்னடைவைச் சந்தித்தது.

மேலும், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 31 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது சமூகநீதிப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான வெற்றியாக அமைந்தது.

69% இடஒதுக்கீட்டிற்கு சட்ட பாதுகாப்பு

அதன்பிறகு, மண்டல் ஆணையம் தொடர்பான இந்திரா சாஹ்னி வழக்கில் உச்சநீதிமன்றம், இடஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்று தீர்ப்பளித்தது. ஆனால் தமிழ்நாட்டில் ஏற்கெனவே 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது.

அய்யா கி. வீரமணி அவர்களின் தலைமையில், தமிழ்நாடு முழுவதும் மக்களை நேரடியாகச் சந்தித்து, 69 சதவீத இடஒதுக்கீட்டை எந்த நிலையிலும் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை உருவாக்கினர். மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான மக்கள் அழுத்தமும் சமூகநீதிக்கான குரலும் வலுப்பெற்றது.

அந்த நேரத்தில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சராக அ.தி.மு.க. தலைவர் பார்ப்பன பெண்மணி செல்வி
ஜெ. ஜெயலலிதா அவர்கள் இருந்தார். ஆனால், சமூகநீதியை தனது உயிர்மூச்சாகக் கொண்ட தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகச் சூழல், 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வரலாற்றுப் பொறுப்பை அவர்மீது ஏற்படுத்தியது.

அதன் விளைவாக, 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் சட்டம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அந்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் (Ninth Schedule) சேர்க்கப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு கிடைத்தது. இது சமூகநீதிக்காக திராவிடர் இயக்கம் நடத்திய நீண்டகாலப் போராட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளில் ஒன்றாகும்.

பெரியாரின் சிந்தனை
தமிழ்நாட்டின் அரசியல் பண்பாடு

அரசியல் அதிகாரம் என்பது தேர்தல் வெற்றியால் மட்டுமே நிலைத்து நிற்காது; மக்களின் மனதில் பதிந்துள்ள சமூகநீதிக் கொள்கைகளை மதிக்கும் வரையில்தான் அது நிலைக்கும். இதுவே தமிழ்நாட்டின் தனித்துவமான அரசியல் பண்பாடாக உருவாகியுள்ளது. எந்த ஆட்சியும் சமூகநீதிக்கு எதிராகச் சென்றால், மக்கள் அதை ஏற்க மாட்டார்கள் என்ற விழிப்புணர்வை பெரியார் விதைத்தார்.

போராட்டமும் விழிப்புணர்வும்
– மாற்றத்திற்கான கருவிகள்

அர்ஜக் சங்கம் போன்ற இயக்கங்கள் ஒவ்வொரு அரசின் கொள்கைகளையும் சமூகநீதியின் பார்வையில் ஆய்வு செய்ய வேண்டும். அந்தக் கொள்கைகள் பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் அல்லது ஏழை மக்களின் நலனுக்கு எதிரானவை என்றால், உடனடியாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஓய்வறியாத போராளி

பெரியார் தனது வாழ்க்கையின் கடைசி நாள் வரை மக்கள் பணியிலேயே இருந்தார். ஒருநாள் கூட வீட்டில் அமைதியாக அமர்ந்து வாழ்ந்தவர் அல்ல. எப்போதும் பயணங்கள். எப்போதும் மக்கள் சந்திப்புகள். எப்போதும் உரைகள். எப்போதும் சிந்தனைப் பிரச்சாரங்கள். 1973 டிசம்பர் 24 அன்று அவர் மறைந்தார். அவருடைய வாழ்க்கை முழுவதும் ஒரு போராட்ட வரலாறாக இருந்தது.

ஜாதி என்பது மனநிலை

டாக்டர் அம்பேத்கர் கூறியது போல, “ஜாதி என்பது ஒரு மனநிலை.” அந்த மனநிலையை மாற்றாமல் ஜாதியை ஒழிக்க முடியாது. சட்டங்கள் மட்டும் போதாது. அரசியல் அதிகாரம் மட்டும் போதாது. மக்களின் சிந்தனையை மாற்ற வேண்டும். அவர்களின் மனங்களில் கேள்விகளை எழுப்ப வேண்டும். பகுத்தறிவை விதைக்க வேண்டும். அதற்காகவே பெரியார் அறிவியல் அணுகுமுறையுடன் செயல்பட்டார்.

‘விடுதலை’ – சிந்தனையின் ஆயுதம்

1925ஆம் ஆண்டிலேயே பெரியார் தனது கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல பத்திரிகைப் பணியைத் தொடங்கினார். பின்னர் உருவான “விடுதலை” நாளிதழ் இன்று வரை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

உலகிலேயே பகுத்தறிவு சிந்தனையைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் அரிய நாளிதழ்களில் ஒன்றாக அது விளங்குகிறது. சமூகநீதி, பெண்கள் உரிமை, மதச்சார்பின்மை, ஜனநாயகம், மனித உரிமைகள் போன்ற பல்வேறு கேள்விகளில் மக்களை சிந்திக்கச் செய்து வருகிறது. இதுவே பெரியார் பின்பற்றிய அறிவியல் பிரச்சார முறையாகும்.

வடக்கும் தெற்கும் இணையும் நேரம்

இராம்ஸ்வரூப் வர்மாவைப் பற்றி அறிந்தபோது, அவருக்கும் பெரியாருக்கும் இடையே ஆழமான கருத்தியல் ஒற்றுமை இருப்பதை உணர்ந்தேன். ஒருவர் வடஇந்தியாவில் மனிதநேயப் புரட்சிக்காகப் போராடினார். மற்றொருவர் தென்னிந்தியாவில் சுயமரியாதைப் புரட்சிக்காகப் போராடினார். இருவரின் இலக்கும் ஒன்றே: ஜாதியற்ற சமூகம், மூடநம்பிக்கையற்ற வாழ்க்கை, சமத்துவமான மனித உறவுகள்.

எதிர்காலத்திற்கான அய்ந்து பாடங்கள்

  1. சமூகநீதியே மய்யக் கருத்தாக இருக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றமே எந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும்.
  2. பகுத்தறிவு அவசியம். மூடநம்பிக்கைகள் மற்றும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளிலிருந்து சமூகத்தை விடுவிக்க பகுத்தறிவு தேவை.
  3. பாலின சமத்துவம் பேரம் பேச முடியாத உரிமை. பெண்கள் விடுதலை மற்றும் சம உரிமை எந்தச் சூழலிலும் புறக்கணிக்கப்படக் கூடாது.
  4. கல்வியே விடுதலை. ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய ஆயுதம் கல்வி மட்டுமே.
  5. பிரதிநிதித்துவம் முக்கியம். அனைத்து சமூகங்களுக்கும் உரிய பங்கேற்பும் பிரதிநிதித்துவமும் உறுதி செய்யப்பட வேண்டும்.

நிறைவுரை

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சுயமரியாதையின் தீபத்தை ஏற்றினார். அந்த ஒளி இன்னும் அணையவில்லை. அது சமூகநீதிக்காகப் போராடும் ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.

இன்று நாம் இங்கே உறுதி ஏற்க வேண்டும்: ஜாதிக்கு முன் தலைகுனிய மாட்டோம். சமத்துவமின்மைக்கு சரணடைய மாட்டோம். அநீதியைக் கண்டு மௌனமாக இருக்க மாட்டோம். சிந்திப்போம். கேள்வி கேட்போம். ஒடுக்குமுறையை எதிர்ப்போம். சுயமரியாதையுடன் வாழ்வோம். பெரியாரின் குரலும், இராம்ஸ்வரூப் வர்மாவின் குரலும், தலைமுறைகள் தாண்டி ஒலித்துக் கொண்டே இருக்கும்.

பகுத்தறிவோடு சிந்தியுங்கள்! சுயமரியாதையுடன் வாழுங்கள்! நன்றி. வணக்கம்.

(ஆங்கில பேச்சின் தமிழாக்க சுருக்கம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *