சென்னை, ஜூன் 3- பொறியியல் படிப்புக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூன் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக் கழக துறைக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என தமிழ்நாட்டில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் சுமார் 1.70 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவை பொதுக் கலந்தாய்வு மூலம் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.
அந்த வகையில், வரும் 2026-2027ஆம் கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களில் சேருவதற்கான இணைய வழியில் விண்ணப்ப பதிவு கடந்த மே 3ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று (1.6.2026) மாலை நிலவரப்படி 2.87 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்ப அவகாசம் இன்றுடன் (ஜூன் 2) முடிவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலை யில், மாணவர்கள் நலன் கருதி, அவகாசம் ஜூன் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
எனவே, பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org என்ற இணைய தளம் வாயிலாக 5ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சான்றிதழ்களை 6ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்.
