வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை த.வெ.க. நிர்வாகிகள் இருவர் கைது – கனிமொழி எம்.பி. கடும் கண்டனம்!

2 Min Read

தூத்துக்குடி, ஜூன் 2 பெண்ணை ஏமாற்றி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் இருவரை சிறீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர் 1.6.2026 அன்று கைது செய்தனர். இந்தச் சம்பவத்திற்கு கனிமொழி எம்.பி. தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

பெண்ணுக்கு பாலியல் கொடுமை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந்தவர் பாலமுருகன். இவர் தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்து வருகிறார். இவரது நண்பரும், தவெக நிர்வாகியுமான ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரும் சேர்ந்து, ஏரல் பகுதியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர்.

அதன்பின், அந்தப் பெண்ணைக் காரில் அழைத்துச் சென்று, ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்க வைத்துள்ளனர். அங்கு அந்தப் பெண்ணிற்கு வழங்கப்பட்ட குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, இருவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

தவெக நிர்வாகிகள் இருவர் கைது

பாதிக்கப்பட்ட இளம்பெண் இச்சம்பவம் தொடர்பாக சிறீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் பாலமுருகன், ஜெயபால் ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்த இருவரையும் 1.6.2026 அன்று கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் (X) தளத்தில் கண்டனம்

இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“சிறீவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தல் காலத்தைப் போல திமுகவின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து ‘பொறுப்புடன்’ முதலமைச்சர் ஜோசப் விஜய் செயல்பட போவது எப்போது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், தூத்துக்குடி பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *