சுயமரியாதைக் கொள்கைக் குடும்பங்களின் ஒன்றுகூடல் விழா! திராவிடர் இயக்கக் கொள்கை வீச்சில் புத்தெழுச்சி அத்தியாயம்!

உரத்தநாட்டில்…
கழகத் தலைவர் வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார்

திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

உரத்தநாடு, ஜூன் 2- பெரியார் நாடாம் உரத்தநாட்டில் திராவிடர் கழகக் கொள்கைக் குடும்பங்களின் ஒன்று கூடல் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் கொள்கைக் குடும்பங்களின் தலைவர்; வாழ்வியல் சிந்தனைகளை வாரி வழங்கும் வள்ளல்; தமிழர் தலைவர்; மதிப்புறு முனைவர்; ஆசிரியர் அவர்கள் கலந்துகொண்டு வழிகாட்டும் உரையாற்றினார்.

உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகம் சார்பில், கொள்கைக் குடும்பங்களின் ஒன்றுகூடல் விழா 31.05.2026 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை உரத்தநாட்டிலுள்ள கதிர்மலர் அரங்கில், கலைநிகழ்ச்சி, கவியரங்கம், கருத்தரங்கம், வாழ்த்தரங்கம், அறுசுவை விருந்து என்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் உரத்தநாடு தெற்கு ஒன்றியச் செயலாளர் மா.நல்.பரமசிவம் அனைவரையும் வரவேற்றார். தெற்கு ஒன்றியத் தலைவர் த.செகநாதன் தலைமையேற்றார். தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார், நெடுவை.கு.அய்யாத்துரை, வழக்குரைஞர் மு.வீரமணி ஒன்றிய துணைத்தலைவர் கு.நேரு, ஒன்றிய துணைச்செயலாளர் கு.லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

பெரியார் வீரவிளையாட்டுக்கழக மாநிலச் செயலாளர் கபடி.நா. இராமகிருஷ்ணன், பொறியாளர் ப.பால கிருட்டிணன், புலவர் இரா.மோகன காசு ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.

136 குடும்பங்கள் சார்பாக சுமார் 400க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து கொண்டு பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து மேனாள் அமைச்சர், தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்
ஆர்.வைத்திலிங்கம் உரையாற்றினார்.

மேகதாதுவில் புதிதாக ஒரு அணை கட்டும் முயற்சியில் நாங்கள் ஈடுபடுகிறோம் என்று கருநாடக அரசின் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளவர் கூறியதைக் கண்டிக்கும் வகையில், திருவாரூரில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு, பிற்பகல் 12:15 க்கு கழகத் தலைவர் உரத்தநாட்டிற்கு வருகை தந்தார். அப்போது புதுகை பூபாளம் குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. கழகத் தலைவருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் உற்சாகமான; எழுச்சிகரமான வரவேற்பு வழங்கப்பட்டது.

கழகத் தலைவர் மேடையேறிய பிறகு, பெரியார் பிஞ்சு மா.பு.புகழினி, மாணவர் அணி வி.புதியவன், இளைஞரணி ம.விவேக், மகளிர் பாசறை பொறியாளர் ப.முகில் ஆகியோர் கவிதைகளைப் பாடினர்.

நிறைவாக தமிழர் தலைவர்; ஆசிரியர்; கொள்கைக் குடும்பங்களின் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமது உரையில், பெரியார் நாடென்று பெயர் பெற்றுள்ள ஒரே நாடு உரத்தநாடு தான் என்று அரங்கே அதிரும்படியாக தொடக்கத்தில் வாழ்த்தினார். புதுடில்லியில் பெரியார் மய்யம் அமைக்கப்பட்டுக்கொண்டிருந்த போது, முதன் முதலில் 1000 மூட்டை சிமெண்ட் வழங்கியதும், மூன்று முறை விடுதலை சந்தாக்கள் தலா 1000 வழங்கியதும், தமது பிறந்தநாளை முன்னிட்டு, உரத்தநாடு ஒக்கநாடுமேலையூரில் பவளவிழா வளைவு அமைத்ததும், நெடுவாக்கோட்டையில் வைர மோதிரம் வழங்கியதும், கண்ணந்தங்குடி கீழையூரில் பெரிய அளவிலான வெள்ளியால் ஆன பெரிய எழுதுகோல் மற்றும் கிரீடம் உள்ளிட்டவற்றை வழங்கியதும் ,

வன்னிப்பட்டில்  எடைக்கு எடை பணம் வழங்கியதும்,பெரியார் நாடாம் உரத்தநாடுதான்” என்று உரத்தநாட்டின் சிறப்புகளைப் பட்டியலிட்டார். மேலும் அவர், “அதுமட்டுமல்ல, செயல்திட்டங்களை அறிவித்தால் அன்றும் சரி, இன்றும் சரி, என்றும் முதன் முதலில் செயல்படுத்த முன்வருவது உரத்தநாடுதான்” என்று கூற, அரங்கமே கையொலிகளால் நிறைந்தது.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங். அவர்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, அவருக்கு நாங்கள் சிறுநீரகம் தருகிறோம் என்று முதலில் சென்றது உரத்தநாட்டுத் தோழர்கள்தான்; மூன்று தோழர்கள் வி.பி.சிங்.சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கே சென்று ஒருமாதம் தங்கியிருந்து தங்களை பரிசோதனை செய்துகொண்டார்கள்” என்று சொன்னதும் உணர்ச்சிவசப்பட்ட  மக்கள் கையொலிகளால் அரங்கை அதிரவிட்டனர். அப்போது, கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா,குணசேகரன், ’அப்படி வி.பி.சிங்குக்காக சிறுநீரகக் கொடை கொடுக்கச் சென்றவர்களில் ஒருவரான மேலையூர் அழகு ராமகிருஷ்ணன் மேடையிலேயே இருக்கிறார்’ என்று, கழகத் தலைவரிடம் நினைவூட்டியதும், “பாருங்கள்… மூவரில் ஒருவர் இங்கேயே இருக்கிறார்” என்று பெருமிதத்தோடு சொல்லி அரங்கை அதிரவிட்டார். அடடா… அடடா… அந்தக் காட்சியால் சில நிமிடங்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பாக இருந்தது.

உரத்தநாடு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர் களின் சிறப்புகளைப் பட்டியலிட்டுப் பேசினார். பெரியார் பிஞ்சுகள், இளை ஞர்கள் கவிதை பாடிய சிறப்பை, ”வாழையடி வாழையென வந்த கொள் கைத் திருக்கூட்டம்” என்று உவமித்துப் பாராட்டினார். மேலும் அவர், ”வேர்களும் சரியாக இருக்கின்றன; விழுதுகளும் சரியாக இருக்கின்றன” கடந்த தலைமுறை, இந்தத் தலைமுறை இரண்டையும் சிறப்பித்துக்கூறினார். நிறைவாக, “இதுபோன்ற நிகழ்ச்சிகள் இன்றைய சூழலில் அவசியம் தேவை” என்று கூறி, தமது உரையில் கூறினார். கொள்கைக் குடும்பங்களின் தலைவரோடு குடும்பம் குடும்பமாக ஒளிப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து,

கொள்கைக் குடும்பங்களின் தலைவர் மற்றும் உரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் இருவரும் நாற்காலிகளில் அமர்ந்திருக்க, கொள்கைக் குடும்பங்கள் வரிசை வரியாக வந்து தனித் தனி குடும்பங்களுடன் குடும்பத் தலைவரிடம் நன்கொடைகள் வழங்கியதுடன் ஒளிப்படம் எடுத்து மகிழ்ந்தனர். சுயமரியாதைச் சுடரொளி நெடுவாக்கோட்டை வை.குப்புசாமி – குஞ்சம்மாள் நினைவாக கு.ஆனந்தன் பெரியார் உலகம் நன்கொடையாக ரூ.1 லட்சம் வழங்கினார். நீண்ட வரிசையில் நின்று தோழர்கள் பொறுமை காத்து கழகத் தலைவருடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். பெரியார் பிஞ்சுகள் இருப்பின் கழகத் தலைவர் அவர்கள் கையைப் பிடித்து தன்னருகில் இழுத்து நிறுத்தி கன்னத்தைத் தட்டிக்கொடுத்து ஒளிப்படம் எடுக்கச் செய்தார். பெற்றவர்கள் இதைக் கண்டதும் உள்ளம் நிறைந்து போயினர். சிலர் தங்களின் அடுத்தடுத்த கொள்கை வாரிசுகளை, கொள்கைக் குடும்பத் தலைவரிடம் அறிமுகம் செய்து மகிழ்ந்ததும், அதற்கும் நேரம் ஒதுக்கி உற்சாகத்துடன் கழகத் தலைவர் கேட்டு மகிழ்ந்து அவர்களை ஊக்கப்படுத்தியதும், பக்கத்தில் அமர்ந்திருந்த ஆர்.வைத்திலிங்கம் அந்தக் காட்சிகளை உள்ளக்கிளர்ச்சியுடன் பார்த்ததும் நிகழ்ச்சியின் தனிச்சிறப்பு. இறுதியாக, அனைவரும் ஒளிப்படம் எடுத்து முடிந்தவுடன், கழகத் தலைவரிடம் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள், “அவ்வளவுதான் அய்யா” என்று சொன்னதும், யாரும் எதிர்பாரா வண்ணம், உரத்தநாடு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கத்தை சுட்டிக்காட்டி, “எங்க இரண்டு பேரையும் தனியா ஒன்னு எடுங்கய்யா” என்று அவரே தங்களை ஒளிப்படம் எடுக்கச் சொன்னதும், அனைவரும் மகிழ்ச்சியுடன் சிரித்துவிட்டனர். அதே உற்சாகத்துடன் அந்தக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர், கழகத்தின் தலைவர் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

நிகழ்ச்சியில், மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயக்குமார்,  மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன், கலைத்துறைச் செயலாளர் ச.சித்தார்த்தன், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், மாநில மாணவர் கழக இணைச்செயலாளர் மு.இளமாறன்,

கழகப் பேச்சாளர்கள் இரா.பெரியார் செல்வன், சில்லத்தூர் சிற்றரசு, மாவட்ட மகளிரணித் தலைவர் அ.கலைச்செல்வி, மாவட்ட வழக்குரைஞரணிச் செயலாளர் க.மாரிமுத்து, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளரணித் தலைவர் ஆ.இராமகிருஷ்ணன், மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் ச.அஞ்சுகம், செயலாளர் அ.வெண்ணிலா, மாவட்ட ப.க.இணைச்செயலாளர் ஆ.லெட்சுமணன், நகர செயலாளர் பு.செந்தில்குமார், மாவட்ட தொழிலாளரணித் தலைவர் ச.சந்துரு, நெடுவாக்கோட்டைத் தோழர் கு.வைத்தியலிங்கம், தெற்கு ஒன்றிய விவசாய அணித் தலைவர் ம.மதியழகன், மகளிரணித் தோழர் கு.ஜெயமணி, ஒன்றிய மகளிரணித் தலைவர் மா.அஞ்சம்மாள், நெடுகை தோழர் கு.ஆனந்தன், பெரியார் நகர் தோழர் அ.உத்திராபதி, ஒன்றிய தொழிலாளரணித் தலைவர் துரை.தன்மானம், தொண்டராம்பட்டு பெரியார் பெருந்தொண்டர் வெ.உத்திராபதி, ஒக்கநாடு மேலையூர் கிளைக்கழகத் தலைவர் அ.ராசப்பா, ஒன்றிய மாணவர் கழகத் தலைவர் க.பரணிதரன், முக்கரை பெரியார் பெருந்தொண்டர் செ.செல்வராசு, ஒக்கநாடு மேலையூர் கிளைக்கழகச் செயலாளர் நா.வீரத்தமிழன், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் ஆசிரியர் ந.சங்கர், ஆசிரியர் ந.காமராஜ், ஒன்றிய தொழிலாளரணித் தலைவர் ரெ.சசிக்குமார், வடக்கு ஒன்றிய மாணவர் கழகத் தலைவர் இரா.பெரியார் எழிலன், திராவிட மாணவர் கழக சட்டக்கல்லூரி மாணவர் ஜெ.அன்பு வீரமணி, மாவட்ட ப.க. அமைப்பாளர் குழந்தை.கவுதமன், தஞ்சை அமர்நாத், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் கக்கரை கோ.இராமமூர்த்தி, வடக்கு ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் மன்றோ மதியழகன், சென்னை செந்தமிழ் வீரசிலம்பக் கலைக்கூடம் நிறுவனர் இரா.சங்கர், முனைவர் கி.செளந்திராஜன், தஞ்சை குட்டிமணி, தஞ்சை பகுதிச் செயலாளர் வெ.துரை, விடுதலை நா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமானதாக மாற்றினர்.

இறுதியாக, உரத்தநாடு தெற்கு ஒன்றிய இளைஞரணித் தலைவர் ரெ.ரஞ்சித்குமார் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியார் பிஞ்சுகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக கொள்கை உணர்வு மிளிரக் கலந்துகொண்டதும், கொள்கைக் குடும்பங்களின் தலைவரான கழகத் தலைவருடன் அடுத்தடுத்த தலைமுறையை அறிமுகப்படுத்தி தோழர்கள் பெரு மிதப்பட்டுக்கொண்டதும், மாறிவரும் அரசியல் சூழலில் இந்நிகழ்ச்சி நம்பிக்கையூட்டக்கூடிய ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தகக்து.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *