‘விடுதலை’ நாளேட்டின் 92 ஆம் ஆண்டு தொய்வற்ற தொடர் பயணம்!
ஜாதி, தீண்டாமையற்ற, பெண்ணடிமை, மூடநம்பிக்கை அழிந்த, ‘அனைவருக்கும் அனைத்தும்’ தரும் சமூகநீதி, சமச்சீர் சமதர்ம சமூகம் அமைக்க,
‘‘அறிவியல் மனப்பாங்கை’’ அவனியெங்கும் ஏற்படுத்தி, எழுச்சி கொள்ளும் பணியான–
‘விடுதலை’ பணியில் ஒரு நாளும் ஓயமாட்டோம் –
சலிப்பினால் ஒருபோதும் சாயமாட்டோம்!
ஜாதி, தீண்டாமையற்ற, பெண்ணடிமை, மூடநம்பிக்கை அழிந்த, ‘அனைவருக்கும் அனைத்தும்’ தரும் சமூகநீதி, சமச்சீர் சமதர்ம சமூகம் அமைக்க,
‘‘அறிவியல் மனப்பாங்கை’’ அவனியெங்கும் ஏற்படுத்தி, எழுச்சி கொள்ளும் பணியான–
‘விடுதலை’ பணியில் ஒரு நாளும் ஓயமாட்டோம் –
சலிப்பினால் ஒருபோதும் சாயமாட்டோம்!
‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை

ஜாதி, தீண்டாமையற்ற, பெண்ணடிமை, மூடநம்பிக்கை அழிந்த, ‘அனைவருக்கும் அனைத்தும்’ தரும் சமூகநீதி, சமச்சீர் சமதர்ம சமூகம் அமைக்க, ‘‘அறிவியல் மனப்பாங்கை’’ அவனியெங்கும் ஏற்படுத்தி, எழுச்சி கொள்ளும் பணியான நம் பணியில் ஓயமாட்டோம். சலிப்பினால் ஒருபோதும் சாயமாட்டோம்; வெற்றி கிட்டும்வரை, துவளாமல், உற்சாகம் துளியும் குறையாமல் ‘விடுதலை’யின் பயணம் செல்லும்! அது வெல்லும்!! வரலாறு அதைச் சொல்லும்!!! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
இன்று (1.6.2026) ‘விடுதலை’ நாளேடு தனது 92 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!
கருத்துக் கூர்மை மிகுந்த நுண்மையும், நேர்மையும், துணிவும் கலந்த
ஓர் அதிசய அறிவாயுதம்!
ஓர் அதிசய அறிவாயுதம்!
தந்தை பெரியார் என்ற பகுத்தறிவு, சுயமரியாதைப் பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்ட கருத்துக் கூர்மை மிகுந்த நுண்மையும், நேர்மையும், துணிவும் கலந்த ஓர் அதிசய அறிவாயுதம்!
தந்தை தந்த அருட்கொடை – அறிவுக்கொடை!
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு!
பிறப்பதற்கு முன்னேயே போராட்டக் களத்தில் நின்று, வென்று காட்டிய பிறகே, ‘சுயமரியாதைக் கருவிலிருந்து’ பிரசவிக்கப்பட்ட’ ஒரு சிறப்பு ஏடு – புரட்சி நாளிதழ்!
பொருளாதாரக் கண்ணோட்டத்தில் என்றும் அது நிதி லாபங்களைப் பெற்றதே இல்லை. ஆனால், சமூகநீதி, பகுத்தறிவு, சுயமரியாதை, மானுடத்தின் உரிமைகளை வென்றெடுத்தல் என்ற ஆய்வு நோக்கில் – அது பல காலகட்டங்களில் –பன்முகத் தாக்கு தலையும், பலவகை விழுப்புண்களை நெஞ்சிலும், முகத்திலும் ஏற்றுப் பழக்கப்பட்ட – வெற்றிகளைக் குவித்த, குவிக்கும் ஒரு போர்க் கருவி!
கருத்துக் கொள்கைப் போராட்டங்களில் தனித்து நின்று அன்றும், இன்றும், என்றும் வென்று காட்டிடும் வீரியத்தின் ஒளிவீச்சு!
‘நான்’ அல்ல –
‘நாம்’ வளர்த்து வருகிறோம்!
‘நாம்’ வளர்த்து வருகிறோம்!
ஏறத்தாழ எனக்கு நன்றாக நினைவு தெரிந்த காலந்தொட்டு, வினையாற்றுவதை நிறுத்தாத இன்று வரை ‘விடுதலை’யின் தொடர் ‘வாசக நேயர்’ ஆன எனது இளமைக்கு வார்த்த பாலாக அது என்னை வளர்த்தது; பிறகு, 1962 முதல் அதனை ‘நான்’ அல்ல – ‘நாம்’ அதை வளர்த்து வருகிறோம் – மெல்ல மெல்ல. ஆனால், உறுதியாக! அது வாகை சூடி வருகிறது. இடையிடையே தோன்றி, அதனைச் சோதனைக்குள்ளாக்கிய ‘சுனாமி’களான 1976 நெருக்கடி காலமும், கோவிட்–19 (2020–2022) பெருந்தொற்றுக் காலமும் அதை வீழ்த்திடவில்லை.
ஓர் அறிவுக்
கலங்கரை வெளிச்சம்!
கலங்கரை வெளிச்சம்!
அவ்வப்போது பழைய வெள்ளைக்கார அரசின் ஜாமீன் கேட்பு, பரிசோதனை தொடங்கி, ‘தணிக்கை’ என்ற பெயரால் ஆரியத்தின் பழிவாங்கும் படலங்கள் என்ற பல சூழல்களையும், சூறாவளிகளையும் சந்தித்தும், சரியாத சரித்திரத்தினைப் பெற்ற, சமர்க்களத்தில் சாயாத போர் வீரனாகவே தனித்து நின்று காட்டும் ஓர் அறிவுக் கலங்கரை வெளிச்சம்!
லட்சக்கணக்கில் அது விற்பனையாகாத நாளேடுதான் – அறிவு நாணயத்துடன் ஒப்புக் கொள்வதில் பெருமிதம் அடைகிறோம்.
லட்சக்கணக்கானோர் பல வகையில் படிக்கத் தவறாத ஏடு!
பொதுநலம் சார்ந்த
ஒரு போர்க் கருவி!
ஒரு போர்க் கருவி!
ஆனால், லட்சக்கணக்கில் விற்பனையாகும் நாளேடுகளால் சாதிக்க முடியாதவற்றை – அதன் சிந்தனை கூர் அம்புகளால் ஆட்சிகளின் முடிவுகளை – அன்று முதல் இன்றுவரை – ஏன், நாளையும் கூட மாற்றிட வைக்கும் பொதுநலம் சார்ந்த ஒரு போர்க் கருவி (ஏடு) ஆகும்!
பாமர மக்களையும், அறியாமை இருளில் தவித்து, இருட்டையே கொண்டாடி வந்த மக்களுக்கு, விடியலை நாளும் தந்து மகிழும் ‘ஞானசூரியனான’ ஓர் தனித்தன்மையான புரட்சி நாளேடு!
1962 ஆம் ஆண்டு முன்புவரை ‘விடுதலை’ ஏட்டின் வாசகனாகவே இருந்த என்னை அழைத்து, ‘அதன் ஆசிரியராக இரு’ என்று அன்பு ஆணையிட்டார் நம் அறிவு ஆசான்!
அதுமட்டுமா?
‘‘விடுதலை’யை உங்களிடம் ஒப்படைக்கிறேன்’’ என்று கூட கூறாது, ‘‘ஏகபோகத்திற்கு ஒப்படைக்கி றேன்’’ என்று கூறி, எனது ‘விடுதலை’ப் பணியை பொறுப்பும், கவலையும், சுயநல எண்ணம் குறுக்கிடாத நேர்மைப் பணியாக – அறிவுச் சுமையாக – நித்தமும் உழைப்பதனை அந்த நம்பிக்கை, என்மீது மீளாக் கடனாக, மாளாக் கடமையாகச் சுமத்திய கணம் முதற்கொண்டு, எனது வாழ்வு முடியும்வரை எனது மூச்சுக் காற்று ‘விடுதலை’யைப் பாதுகாப்பதும், நாளும் வளர்ச்சி அடைவதன்மூலம் புது உலகமான ‘பேதமிலாப் பேசு சுயமரியாதை உலகாம்’ ஒரு பெரும் அறிவியல் கருவியாக்கி, பருவம் பாராது உழைப்பதில் அளவற்ற மகிழ்ச்சியை அறுவடை செய்பவன்.
இப்பணி ஒரு தனி நபரின் பணி அல்ல!
ஒரு கூட்டு முயற்சி; அய்யாவும், அன்னையாரும், ஆதரவாளர்களும் வைத்த முழு நம்பிக்கையின் வெளிப்பாடு!
நம் பணியில் ஒரு நாளும் ஓயமாட்டோம்; சலிப்பினால்
ஒருபோதும் சாயமாட்டோம்!
ஒருபோதும் சாயமாட்டோம்!
பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம்; ஏமாற்றங்களாக அவை என்றும் மாறாத அளவில் தடுமாற்றம் இன்றி தளரா நடைபோட்டு, தடைக்கற்கள் பல வந்தாலும், அவற்றை ‘தாங்கும், தாண்டும் தடந்தோள்’ வீரர்களின் வீறுகொண்ட பேராதரவுடன், ‘விடுதலை’யின் வெற்றிப் பயணம் முன்னிலும் கூடுதல் வேகத்துடன், விவேகத்துடன் இலக்கு நோக்கிய அம்பாகி, அது தனது களப் போர்களில் கடமை யாற்றி, விழுப்புண்களையும் பெற்று, இலக்கை – ஜாதி, தீண்டாமையற்ற, பெண்ணடிமை, மூடநம்பிக்கை அழிந்த, ‘அனைவருக்கும் அனைத்தும்’ தரும் சமூகநீதி, சமச்சீர் சமதர்ம சமூகம் அமைக்க, அறிவியல் மனப்பாங்கை அவனியோருக்கு ஏற்படுத்தி, எழுச்சி கொள்ளும் பணியான நம் பணியில் ஓயமாட்டோம். சலிப்பினால் ஒருபோதும் சாயமாட்டோம்!
‘விடுதலை’ நாளேட்டை நாளும் மக்கள் படிப்பது, ‘சமூக விஞ்ஞானப் பாடங்களை அன்றாடம் கற்றுத் தெளிவது என்பதே பொருள்’ என்று விளக்கத் தவறாதீர்கள்!
ஒரு முக்கிய அன்பு வேண்டுகோள்!
அருள்கூர்ந்து சந்திக்க வரும் நண்பர்கள் சால்வையோ, துண்டோ, புத்தகமோ கூடத் தராது, கொடுக்க விரும்பினால், ‘விடுதலை’ சந்தா ஒன்றோ, இரண்டோ, முகவரியுடன் தாருங்கள்; குறைந்த தொகை என்றாலும் பரவாயில்லை, அதனை ‘விடுதலை வளர்ச்சி நிதி’ என்று குறிப்பிட்டுத் தரலாம்.
இது என் அன்பு வேண்டுகோள், நிறைவேற்றுவீர்கள் அல்லவா?
சிறு குறு தொழில் நடத்துவோரிடம் சந்தாவோ அல்லது சிறு வளர்ச்சி நிதியோ பெற்று, உலகம் முழுவதும் PDF மூலம் செல்லும் ஏடு ‘விடுதலை என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்!
அதன்மூலம் லட்சக்கணக்கில் ‘விடுதலை’யை படிக்கிறார்கள்!
தோழர்களே, தோழர்களே!
வெற்றி கிட்டும்வரை, துவளாமல், உற்சாகம் துளியும் குறையாமல் அதன் பயணம் செல்லும்! வெல்லும்!! வரலாறு அதைச் சொல்லும்!!!
எமது பயணம் தொடரும்!
உங்கள் ஆதரவு என்ற ஊக்கமாத்திரை, நிச்சயம் எமக்குக் கிடைக்கும் என்ற நல் நம்பிக்கையுடன் ‘விடுதலை’ 92 ஆம் ஆண்டில் கொள்கை உறுதி யோடு எமது பயணம் தொடரும்!
‘விடுதலை’ வாழ்ந்தால், வளர்ந்தால் எவரே வீழ்வர்?
‘விடுதலை’ வீழ்ந்தால், எவரே வாழ்வர்– மறவாதீர்!
‘‘ஒரு இல்லம் தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம், அங்கு ‘விடுதலை’ வருவதும், அதை அவர்கள் படிப்பதும் ஆகும்.’’
– தவத்திரு குன்றக்குடி அடிகளார்
வாசகர் நேயர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்!
ஆசிரியர்,
விடுதலை
சென்னை
1.6.2026
