சென்னை, மே 30- தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வெயிலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னை மாநகராட்சி சார்பில் 360 சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
வெப்பத்தினால் பாதிப்பு!
கோடை வெயிலால் உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறும்போது உப்பு மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் காரணமாகப் பின்வரும் அறிகுறிகள் ஏற்படலாம்:
அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தலைசுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு, குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுதல்.
குறிப்பு: இந்த வெப்ப அலையினால் பச்சிளங்குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பொதுமக்களுக்கான ஆலோசனைகள்
உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க அதிக அளவில் மோர், உப்பு கலந்த அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஓஆர்எஸ் (ORS) உப்புக்கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும்.
அவசியமின்றி வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் வெளியே செல்லும்போது தலைக்கு பருத்தித் துணி, துண்டு அல்லது தொப்பி அணிந்து செல்ல வேண்டும்.
தீவிர மயக்கம், உடல் சோர்வு, தாகம், தலைவலி அல்லது தசை வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடி, நாடித்துடிப்பு மற்றும் சுவாசத்தை பரிசோதிக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க 360 சுகாதார நிலையங்கள் முழு வீச்சில் தயாராக உள்ளன:
மேலும், வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் பொதுமக்கள் தங்கி இளைப்பாற வசதியாக 57 வீடற்றோர் காப்பகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
