பரந்தூர் விமான நிலையத்திற்கான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது – இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை பயப்பதல்ல! பெரும் விரிவான வளர்ச்சியைத் தரவல்ல விமான நிலையப் பணியை நிறுத்திவிட்டு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சிப்காட் கொண்டு வருவது ஏற்கத்தக்கதல்ல!பரந்தூர் விமான நிலையப் பணிகள் முடக்கப்படக் கூடாது! பழைய அதிமுக ஆட்சியாளர்களின் செயல்பாடுகளால் முன்பு ஏற்பட்ட நட்டம், புதிய ஆட்சியாளர்களாலும் தொடரப் படக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுள் முக்கியமான பரந்தூர் விமான நிலையப் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. பரந்தூர் பகுதியில் விமான நிலையத்தின் புதிய டெர்மினலை அமைக்க, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5600 ஏக்கர் பரப்பளவில் விரிவான திட்டம் தீட்டப்பட்டு, அதற்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணியும், அதையொட்டி அடிப்படைப் பணிகளும் தொடங்கப்பட்டு நடந்துவந்தன.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை பயப்பதல்ல!
பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜோசப் விஜய் பரந்தூருக்குச் சென்று விவசாயிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். நீர் நிலைகளில் விமான நிலையம் கட்டக்கூடாது என்று விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது விமான நிலையத்திற்கான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை பயப்பதல்ல.
உலகின் பெரும் நாடுகளில் விமான நிலைய விரிவாக்கங்கள், புதிய கட்டுமானங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. விமானப் போக்குவரத்தின் வேகம் பெருகியபடி இருக்கும் சூழலில், அதற்கு ஈடுகொடுக்க, வளர்ந்த நாடுகள் மேலும் மேலும் போட்டி போடுகின்றன.
சென்னை மட்டும் பின் தங்கி இருக்கலாகுமா?
இந்தியாவின் முதன்மையான டில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் 77.8 மில்லியன் பயணிகளைக் கையாளுகிறது. மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் பன்னாட்டு விமான நிலையம் 54.8 மில்லியன் பயணிகளையும், பெங்களூரு கெம்பேகவுடா பன்னாட்டு விமான நிலையம் 40 மில்லியன் பயணிகளையும், அய்தராபாத் ராஜீவ் காந்தி பன்னாட்டு விமான நிலையம் 29 மில்லியன் பயணிகளையும் கையாளுகின்றன, ஆனால், சென்னை பன்னாட்டு விமான நிலையம் 22 மில்லியன் பயணிகளை மட்டும் தான் கையாளுகிறது. இந்தியாவின் நான்கு பெருநகரங்களில் நாம் தான் கடைசி! கொல்கத்தாவும் இதே 22 மில்லியன் பயணிகளைத் தான் கையாளுகிறது. ஆனால் கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் 45 லட்சம் பேருக்கானதாகத் தரம் உயர்த்தப்படும் வேலை நடக்கிறது. இந் நிலையில் சென்னை மட்டும் பின் தங்கி இருக்கலாகுமா?
முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை
கைவிடுதல் கூடாது!
விமான நிலையங்களின் உருவாக்கம், விரிவாக்கம் என்பவை வெறும் பயணிகள் தொடர்புடையது மட்டுமல்ல; பொருளாதாரப் பெருக்கத்தின் வாய்ப்பு. புதிய கட்டமைப்புப் பெருக்கத்திற்குத் தூண்டுகோல். பல பெரும் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான அடிப்படை ஈர்ப்பு. அதன்மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பெருகும். உப தொழில் வாய்ப்புகள் அதிகமாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை முழுமையான புரிதலின்றி கைவிடுதல் கூடாது.
விமான நிலையப் பணியை நிறுத்திவிட்டு
சிப்காட் கொண்டு வருவது வரவேற்கத்தக்கதா?
கையகப்படுத்தப்பட்ட 1700 ஏக்கர் நிலங்களையும் மீண்டும் அந்த விவசாயிகளுக்கே திருப்பித் தர இயலாது. அதற்கு வழங்கப்பட்ட ஈடுத் தொகையை அவர்களிடமிருந்து திரும்பப் பெறுதல் சாத்தியமில்லை. அந்த நிலத்தில் சிப்காட் வரலாம் என்று பேசப்படுகிறது. சிப்காட் கொண்டு வருதல் தவறில்லை. ஆனால், அதைவிட பெரும் விரிவான வளர்ச்சியைத் தரவல்ல விமான நிலையப் பணியை நிறுத்திவிட்டு சிப்காட் கொண்டு வருவது வரவேற்கத்தக்கதல்ல!
பொருளாதார வளர்ச்சிக்கான சில முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்போது நிலங்களைக் கையகப்படுத்தாமல் அரசால் எந்த வளர்ச்சித் திட்டத்தைக் கொண்டு வர முடியும்? அதைப் புரிந்துதானே அரசியலமைப்புச் சட்டத்தில் அதற்கான பிரிவில் அரசுக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
ஆட்சி யார் கையில் இருந்தாலும், அரசாங்கம் என்பது தொடர்ந்து இயங்கி வருவது.
பல திட்டங்களை முடக்கியதால், நட்டம் முந்தைய ஆட்சிக்கு அல்ல; தமிழ்நாட்டுக்குத் தான்!
முந்தைய அரசு கொண்டுவந்து செயல்படுத்தத் தொடங்கிய திட்டத்தை இப்படி நிறுத்துவது அறிவு டைமையாகாது. கடந்த 2006-2011 ஆட்சிக் காலத்தி லும், அதற்கு முன்பும் தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த பல திட்டங்கள் அடுத்த ஆட்சியாளர்களால் பாதியில் நிறுத்தப்பட்டன. பின்னர் கடும் சட்டப் போராட்டங்களுக்குப் பின், மெட்ரோ, மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை உள்ளிட்ட சில திட்டங்கள் மீட்கப்பட்டன. பல திட்டங்களை முடக்கியதால், நட்டம் முந்தைய ஆட்சிக்கு அல்ல; தமிழ்நாட்டுக்குத் தான். பல ஆண்டுகள் வளர்ச்சிகள் தேங்கிப் போயின. அப்படி, பரந்தூர் விமான நிலையமும் அமைந்துவிடக் கூடாது. பழைய அதிமுக ஆட்சியாளர்களின் செயல்பாடுகளால் முன்பு ஏற்பட்ட நட்டம், புதிய ஆட்சியாளர்களாலும் தொடரப் படக் கூடாது. வளர்ச்சியுற்ற தமிழ்நாட்டை வாக்கு வங்கிக் கண்ணோட்டம் அழித்துவிடக் கூடாது!
(பரந்தூர் விமான நிலையம் குறித்த விரிவான தகவல்களை 2 ஆம் பக்கம் காண்க)
https://viduthalai.in/189552/
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
30.5.2026
