தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து – ஆட்சி இன்னும் அமைக்காத நிலையில்,
பி.எம்.சிறீ. திட்டம் என்று மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதா?
பி.எம்.சிறீ. திட்டம் என்று மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதா?
தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து, அரசு அமைக்கப்படாத நிலையில், பி.எம்.சிறீ. திட்டம் என்று மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதா? தமிழ்நாடு அதனை ஒருபோதும் ஏற்காது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
கண்டிக்கத்தக்கது!
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து, இன்னும் ஓர் அரசு பொறுப்பேற்காத நிலையில், ஒன்றிய அரசு தனது மும்மொழித் திட்டத்தைத் திணிக்கும் பி.எம்.சிறீ. திட்டத்தை ஏற்கச் சொல்லி நெருக்கடி தருவது கண்டிக்கத்தக்கதாகும்.
மு.க.ஸ்டாலின் மிக உறுதியாக நின்று மறுத்தார்!
பி.எம்.சிறீ. திட்டத்தை ஏற்றால் தான், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு அரசுக்குத் தர வேண்டிய கல்விக்கான நிதி ரூ.2,152 கோடி வழங்கப்படும் என்று முன்பு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியபோதே, தமிழ்நாட்டில் கடும் கண்டனம் எழுந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக உறுதியாக இதனை மறுத்தார். ‘10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும் ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம்’ என்று சுயமரியாதையுடன் நின்றார். மாணவர்கள், தர்மேந்திர பிரதானுக்குக் கருப்புக் கொடி காட்டவிருக்கின்றனர் என்று அறிந்து, தனது பயணத்தை ரத்து செய்தார் என்பது வரலாறு.
பா.ஜ.க.வால் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை நேரடியாக ஆள முடியாது!
இந்நிலையில் மீண்டும் அதனை வலியுறுத்தி, தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்க வழிவகுக்கும் பி.எம்.சிறீ. திட்டத்தில் கையொப்பமிட நெருக்கடி கொடுக்கிறது – ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க அரசு! ஒன்று ஹிந்தித் திணிப்பு – இல்லையேல் நிதி மறுப்பு என்று தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைத் தடுக்க, நிதி நெருக்கடி மூலம் தமிழ்நாட்டைப் பணிய வைக்கலாம் என்று ஒன்றிய பி.ஜே.பி. அரசு கருதுகிறது. யார் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கிறார்கள் என்பது பிரச்சினையல்ல; யாரால் ஆட்சி அமைக்க முடியாது என்பதுதான் முக்கியம்! பா.ஜ.க.வால் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை நேரடியாக ஆள முடியாது.
தமிழ்நாடு ஒருபோதும் இதற்குப் பணியாது. தமிழ்நாட்டு மாணவர்களும் இதனை ஏற்க மாட்டார்கள். கடும் போராட்டங்களை மாணவர்களிடம் திணிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முயலக் கூடாது. இல்லையெனில், அதற்குரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
சந்தடி சாக்கில் கந்த(க)ப் பொடி தூவ நினைக்கிறதா ஒன்றிய பா.ஜ.க. அரசு? தமிழ்நாடு பொங்கி எழுவது உறுதி!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
7.5.2026
