சிறையிலிருந்து வெளியே வந்த 18 போராளிகளும் கூட்டாக ஓர் அறிக்கை வெளியிட்டனர். “எங்கள் தண்டனைக் காலம் முடியுமுன்னே யுவராஜா பட்டம் ஏற்றதன் பலனாக எங்களுக்கு விடுதலை கிடைத்ததாக அறிகிறோம். வைக்கம் உள்பட எல்லா பொது ரஸ்தாக்கிலும் எல்லாரும் நடமாடலாம் என அரசாங்கம் அறிவிப்பதன் நிகழ்வாகவே எங்கள் விடுதலை என அறிய நாங்கள் ஆவலாயிருக்கிறோம். அப்படி இல்லாவிட்டால் வைக்கம் போராட்டத்தை இனியும் நடத்துவோம். யாரும் சந்தேகப்பட வேண்டாம். அடுத்த சனிக்கிழமை கேரள காங்கிரஸ் கூடுகிறது. அதற்குள் அரசு தங்கள் எண்ணத்தை வெளியிட்டு விடுவார்கள் என்று நம்புகிறோம்” என அந்த அறிக்கைக் கூறியது.

சத்தியாகிரகி குமாரசாமிப் பிள்ளை என்பவர், அவர் நண்பர் டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர் மனைவியுடன் கோயிலுக்கு வழிபடச் சென்றார். தேவஸ்தான காவலாளி வேலுப்பிள்ளை என்பவர் கோயில் கொடிமரத்தின் அருகே அவர்களைத் தடுத்தார். கிருஷ்ணசாமி அய்யர் மனைவி அமைதியாகத் திரும்பிவிட்டார். குமாரசாமிப் பிள்ளையோ பிடிவாதமாகக் கோயிலுக்குள் சென்றுவிட்டார். கோயிலின் உள்ளே இருந்த நம்பூதிரி இளைஞர்கள் சிலர் அவரைக் குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே எறிந்தனர். அவர் நாயர் ஜாதியைச் சேர்ந்தவராயினும் ஈழவர் மற்றும் புலையர்களுடன் சமபந்தி போஜனம் உண்டார். அதனால், கோயில் தீட்டாகிவிட்டது என்பதே அவர்கள் வாதம். எனவே, அவரை கோயிலினுள் அனுமதிக்க முடியாதாம். இதை தேவஸ்தான மேலாளரும் ஆதரித்தார். இது மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.

1.9.1924 அன்று திருவாங்கூர் தர்பார் மண்டபத்தில் யுவராஜாவுக்கு மகுடம் சூட்டும் வைபவம். திவான் ராகவையா வரவேற்றார். அரியணையின் வலப்புறம் “ரீஜண்ட” (மகாராணி) அமர்ந்திருந்தார். இளவரசர் அரியணைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். வேத முழக்கங்கள் முழங்கின. பத்மநாபசாமிக் கோயில் நம்பூதிரி அர்ச்சகர்கள் மன்னர் தலையில் மணிமகுடம் சூட்டினார். யுவராஜா அரசராக பதவி ஏற்றதை முன்னிட்டு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதே காரணத்தின் விளைவாகவே தந்தை பெரியாரும், கேசவமேனனும், ஜார்ஜ் ஜோசப்பும் மற்றும் 15 வைக்கம் சத்தியாகிரகிகளும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

வைக்கம் சத்தியாகிரகம் பற்றி சிறீநாராயணகுரு, “வைக்கத்தில் இப்போது நடைபெறும் சத்தியாகிரகத்தில், சத்தியாகிரகிகள் அனுஸ்டிக்கும் செயல்பாட்டில் எனக்கு சம்மதமில்லை. வேலிக்கு வெளியே மழையில் தொண்டர்கள் நின்று ஆர்ப்பாட்டம் செய்வதால் ஒரு பிரயோஜனமுமில்லை. மனிதர்களில் ஒரு பிரிவினர் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என பாவித்து காரியமாற்றும் இடங்களில் எல்லாம் அந்த அநீதி உத்தரவை மீற வேண்டும். தடுக்கப்பட்ட ரஸ்தாக்களில் நடக்கும்போது அடியோ, அவமானப்படுத்தினாலும்கூட சகித்துக் கொள்ள வேண்டும். வேலி போட்டிருந்தால் ஏறி குதிக்க வேண்டும். சாலைகள் மட்டுமின்றி வைக்கம் கோயில் முதல் அனைத்துக் கோயில்களிலும் பிரவேசிக்க வேண்டும். அரசுக்கு முன்னதாகவே இதைத் தெரிவித்து விட வேண்டும். அவசியம் நேர்ந்தால் உயிரை விடவும் ஆயத்தமாக இருக்க வேண்டும்” என்றார்.
வைக்கம் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு, ஆறு மாதம் சிறை தண்டனைப் பெற்ற டி.கே.மாதவனின் மனைவி சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு கைதானபோது ஒரு அறிக்கை விட்டார். “லட்சக்கணக்கான மானுடர்கள் பொது ரஸ்தாக்களில் சுயேச்சையுடன் செல்லத் தடை போட்டுள்ளனர். தன் விருப்பத்தின்படி உலவித் திரிய கேவலம் நாய்க்குக் கூடச் சர்வ சுதந்திரம் உண்டு. ஆனால், சக மனிதருக்கு அந்த ரஸ்தாக்களில் பிரவேசிக்கும் உரிமை கூட இல்லை. இதைவிட அவமதிப்புக்கும், அவமானகரமானதும் உள்ள விசயம் வேறு ஏதேனும் இருக்க முடியுமா? இதைவிட கொடியதான, வெறுக்கத்தக்க விசயம் வேறு உண்டா? இதைவிட அநீதியானதும், மனதைப் பிளக்கக் கூடியதுமான துன்பம் ஏதேனுமுண்டா? என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
“வைக்கத்தில் தீண்டாமைப் போராட்டம் எழுந்தது. ராமசாமி நாயக்கர் அங்கே சென்று சத்தியாகிரகம் செய்தார். திருவாங்கூர் அரசு அவரை சிறைப்பிடித்தது. அப்பொழுது யான் “வைக்கம் வீரர்” என்று தலைப்பீந்து நாயக்கர் தியாகத்தை வியந்து, வியந்து ‘நவசக்தி’யில் எழுதுவேன். “வைக்கம் வீரர்” என்பது அவருக்கு ஒரு பட்டமாகவே வழங்கலாயிற்று” என திரு.வி.க. எழுதினார். “ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் தலைமை இயக்கத்திற்கு புதிய உயிர் கொடுத்தது” என கேரள வரலாற்றிசிரியர் டி.கே.ரவீந்திரன் எழுதினார். ஆனாலும், வைக்கம் சத்தியாகிரகத்தில் ஆரம்ப முதலே இடைஞ்சல்கள் செய்த காந்தியாரின் பெயர் பிரபலமாக குறிக்கப்பட்டதே ஒழிய, ராமசாமி நாயக்கர் பற்றியோ, தமிழ்நாட்டுத் தொண்டர்கள் பற்றியோ, அதில் ஈடுபட்ட வீராங்கணைகள் பற்றியோ பெரிதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி வரலாற்றில் குறிக்கப்படவில்லை.
வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட கேரளத் தலைவர்கள் உள்பட யாருமே இரு முறை சிறை செல்லவில்லை. ராமசாமி நாயக்கர் மட்டுமே இருமுறை தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் மற்ற சத்தியாகிரகிகள் சாதாரண அரசியல் கைதிகள் போல் நடத்தப்பட்டபோது, நம் தலைவர் ராமசாமி நாயக்கர் மட்டும் கடைசி வரை காலில் சங்கிலியோடும், மரத்தாலியும் அணிவிக்கப்பட்டு, ஒரு கொலைக் குற்றவாளி போலத் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். 4 மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டதும் அவர் ஒருவருக்கே! சிறையில் 74 நாட்களும், வைக்கம் பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் 67 நாட்களும் என மொத்தம் 141 நாட்கள் (4 மாதங்கள், 21 நாட்கள்) அவர் வைக்கம் போராட்டக் களத்தில் இருந்தார். ஆனாலும், அவர் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்ற கறை வரலாற்றில் படிந்திருக்கிறது.
கேசவ மேனன் என்ற கேரள காங்கிரஸ் தலைவர் ராமசாமி நாயக்கரைப் பற்றிக் குறிப்பிட்டபோது, “காலில் விலங்கு, தலையில் கைதிக் குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்கும் முண்டு, கழுத்தில் கைதி எண் பொறித்த மரத்தாலி என்று அணிவிக்கப் பெற்று கொலைகார, கொள்ளைக்காரக் கைதி போல் சிறையில் வேலை செய்கிறார். மற்றவர்களைவிட இரு மடங்கு வேலை செய்கிறார். ஜாதி இந்துவான அவர் கேரளத்தில் உள்ள தீண்டத்தகாதவர்களின் உரிமைகளுக்காக செய்த சத்தியாகிரகம் நமக்குப் புது வாழ்வை தந்திருக்கிறது. இந்த உன்னத லட்சியத்திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார். அவருக்கு இருக்கக் கூடிய நாட்டுப் பற்று, உற்சாகம், அனுபவம், பெருந்தன்மை, பெரும் பக்குவம் உடைய இன்னொருவரை இந்நாட்டில் காண முடியுமா? இந்த நாட்டில் நிகழும் கொடுமைகளை நீக்க எவ்வளவு கஷ்ட, நஷ்டங்களையும் ஏற்கலாம் என்று ஒருவர் வந்தாரே; அதைப் பார்த்து இந்த மாநில மக்களுக்கு வெட்கம் ஏற்படவில்லையா? கேரளத் தலைவர்கள் இனியாவது சாய்வு நாற்காலியைத் தூக்கி எறிந்துவிட்டு, தங்கள் பங்கை சத்தியாகிரகத்திற்கு செலுத்துவார்களா? என்று கேட்டார். (சான்று: “வைக்கம் போராட்டம்” – கு.வெ.கி.ஆசான்)
ஆரம்பக் கட்டத்திலேயே சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட கேரளத் தலைவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டதால், சத்தியாகிரகத்தைத் தொடர்ந்து நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. சத்தியாகிரகமே தோல்வி அடைந்துவிடுமோ என்ற நிலைகூட ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் சத்தியாகிரகிகளின் தலைவர்களுக்கு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் ராமசாமி நாயக்கர் கதர் பிரச்சினை, காங்கிரஸ் பிரச்சாரம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ராமசாமி நாயக்கர் தீவிரமாக இருந்தார். கேரளத் தலைவர்கள் சத்தியாகிரகத்தின் தோல்வியை எண்ணி மீண்டும், மீண்டும் ராமசாமி நாயக்கரை சத்தியாகிரகத்திற்கு வரச் சொல்லி வற்புறுத்தவே ராமசாமி நாயக்கர் வைக்கம் போவது பற்றி முடிவெடுத்தார்.
ஒன்றுமில்லாத கதர் பிரச்சாரத்திற்கே ஆயிரம் தடைகள் இருக்கும்பொழுது, ஜாதியக் கொடுமைகளை எதிர்க்கும் வைக்கம் போராட்டத்தில் மேலும் பல தொல்லைகள் இருக்கும் என்று ராமசாமி நாயக்கர் தெரிந்தே இருந்தார். “கேரளத்திலிருந்து வந்த கட்டளையை மீற முடியவில்லை. அடக்குமுறை ஓங்கி விட்டது. நெருக்கடி உருவாகிவிட்டது. ஜார்ஜ் ஜோசப் உள்பட பலரும் கைதாகி விட்டனர். அதனால்தான் நான் புறப்பட்டு விட்டேன். நானும் கைதாகலாம். அது ஒரு பெரிய காரியமல்ல” என்று கூறிவிட்டுத்தான் நாயக்கர் வைக்கம் புறப்பட்டார். ஆனால், வேண்டுமென்றே அவர் பெயர் இருட்டடிக்கப்பட்டது.
வைக்கம் போராட்டத்தின் தீவிரத் தன்மையாலும், அகில இந்திய காங்கிரஸ், கேரள காங்கிரஸ் தீவிர ஆதரவினாலும் திருவாங்கூர் அரசாங்கம் இறங்கி வந்தது. வைக்கம் போராட்டம் தொடங்கிய 17ஆவது மாதம் 7.8.1925 அன்று திருவாங்கூர் மகாராணி ஒரு ஆணையை வெளியிட்டார். அந்த ஆணைப்படி கீழ்க்காணும் எட்டுப் பேர் மீது விதிக்கப்பட்ட தடையாணை விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் 1. ஈ.வெ.ராமசாமி நாயக்கர், 2. டாக்டர் எம்.பெருமாள் நாயுடு, 3.சகோதரன் அய்யப்பன், 4.எம்.மாதுன்னி, 5.சங்கர அய்யர், 6.செங்கரத்து குஞ்ஞன் பிள்ளை, 7. அய்யாமுத்து கவுண்டர், 8.சத்தியவிரத சாமிகள் ஆகியோரே அந்த எட்டுப் பேர்.
திருவாங்கூர் ராணியார் மற்றொரு ஆணை பிறப்பித்தார். அந்த ஆணையின் மூலம் மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள மூன்று தெருக்களில் அனைத்து மக்களும் நடக்கலாம் என்றும், கிழக்குப் பக்க சாலையில், குருக்கள் வசிப்பதால் அந்தச் சாலையில் தாழ்த்தப்பட்டவர்கள் போகக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. மூன்று சாலைகளில் முதன்முதலாக சத்தியாகிரகிகள் நடந்து செல்லும்பொழுது, அரசாங்கம் பலத்த காவலர் பாதுகாப்பைப் போட்டிருந்தது. அதில் போராட்டத்தில் வென்ற சத்தியாகிரகிகள், “சீக்கிரம் அந்தக் கிழக்குப் பக்கச் சாலையையும் அனைவருக்கும் திறந்துவிட வேண்டும் என்று மகாராணியார் ஆணையிட வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தனர்.
“குருதேவ தர்மம்” இதழில், “ராமசாமி நாயக்கர் தமிழ்நாட்டிற்கு முடியுமுன்னரே திரும்பி விட்டார். அவர் தமிழ்நாடு திரும்பி பல மாதங்கள் கழித்தே வைக்கம் சத்தியாகிரகம் முடிவுக்கு வந்தது” என்று எழுதியது. ஆனால், 11.9.1924 அன்று, வைக்கத்திலிருந்து, ஈரோடு வந்தார். அவர் வருகைக்காகவே காத்திருந்தது போலவே அவரைக் காவல்துறை கைது செய்து சென்னைக்குக் கூட்டிச் சென்றுவிட்டது. அங்கு அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். மைலாப்பூரில் முன்பு அவர் பேசிய சொற்பொழிவுக்காக அவர் மேல் போடப்பட்ட வழக்கு இது. சிறையிலிருந்து வெளியே வந்தாலும் காவல்துறை வழக்கைத் தொடர்ந்து நடத்தியது. அதனால் அவர் சென்னையிலேயே தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
8.3.1924 அன்று அவர் பேசிய கூட்டத்திற்கு ஆறு மாதம் கழித்து அரசாங்கம் அவரைக் கைது செய்தது. அவர் மீண்டும் திருவாங்கூர் வந்து தொல்லைக் கொடுக்காமல் இருக்கச் செய்யவே பார்ப்பன திருவாங்கூர் திவான் ஏற்பாட்டில், இங்குள்ள மேலதிகாரிகள் எடுத்த நடவடிக்கையே இது.
இதைப்பற்றி ராமசாமி நாயக்கரின் மனைவி நாகம்மையார் ஆற்றிய எதிர்வினை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. நாகம்மையார் அவர்கள் எவ்வளவு பெரிய வீராங்கனை என்பதற்கான சான்றாக அந்த நிகழ்வு இருக்கிறது. பொது வாழ்க்கையில் பெண்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்த ஒரு காலக்கட்டத்தில் தந்தை பெரியார் பெண்ணுரிமைகளைப் பேசியதோடு நில்லாமல், தன் வீட்டுப் பெண்களையே பொது வாழ்வில் ஈடுபடுத்தி ஒரு பெரும் புரட்சியை நிகழ்த்திய காலக்கட்டம் அது.
கள்ளுக்கடை மறியலாகட்டும், வைக்கம் போராட்டக் களமாகட்டும், தன் மனைவி நாகம்மையார், தங்கை கண்ணம்மாள் போன்றோரை தீவிரமாக ஈடுபடச் செய்தார் தந்தை பெரியார். வைக்கத்தை விட்டு ஈரோடு வந்த அன்றே ராமசாமி நாயக்கர் கைதானார். அதைப் பற்றி நாகம்மையார் குறிப்பிடும்பொழுது, “என் கணவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இந்த மாதம் முதல் தேதி திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையானார். 11.9.1924 அன்று காலையே 10 மணிக்கு, மறுபடியும் ‘ராஜ துரோக’க் குற்றசாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கும் குறையாத தண்டனை கிடைக்கக் கூடிய பாக்கியம் தனக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்லி, என்னிடம் விடைப் பெற்றுக் கொண்டு சிறைக்குப் புறப்பட்டுவிட்டார்.
அவர் திரும்பத் திரும்ப தேச ஊழியம் செய்வதன் பொருட்டு சிறைக்குப் போகும் பாக்கியம் பெற வேண்டும் என்றும், அதற்காகவே அவருக்கு ஆயுள் வளர வேண்டும் என்றும் கடவுளையும், காந்தியாரையும் பிராத்திக்கிறேன்” என்று அறிக்கை விட்டார்.
வரலாற்றில் இதைப் போன்ற இணையர்களைப் பார்க்க முடியுமா? பொது வாழ்க்கையில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெறுவதைப் “பாக்கியம்” என்றும், அதுபோன்று அவர் சிறைக்குச் செல்வதற்காகவே அவர், “நீண்ட நாட்கள் வாழ வேண்டும்” என்கின்ற வீர மனைவியையும் வரலாறு என்றும் போற்றும்!
(தொடருவேன்…)
