கோவி.லெனின்
தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர்
‘தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்’ எனத் தந்தை பெரியாரால் போற்றப்பட்டவர் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரும் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தவருமான பானகல் அரசர் எனும் இராமராய நிங்கர். அவரது பிறந்தநாளான ஜூலை 9 அன்று தி.மு.கழகத் தலைவர் அவர்கள் இந்த வரிகளைக் குறிப்பிட்டு, பானகல் அரசரின் ஆட்சிக்கால சாதனைகளை நினைவுப்படுத்தி அறிக்கை பதிவிட்டிருந்தார்.
பானகல் அரசர் தலைமையிலான நீதிக் கட்சி ஆட்சியில் வகுப்புவாரி இடஒதுக்கீடு, பெண்களுக்கு வாக்குரிமை, சட்டமன்றத்தில் பெண்களுக்கானப் பிரதிநிதித்துவம் ஆகியவை முன்னெடுக்கப்பட்டதுடன், இந்து சமய அறநிலையப் பாது காப்புச் சட்டம்நிறைவேற்றப்பட்டது.மன்னர்களால் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கானத் திருக்கோயில் களையும் அதற்கு சொந்தமான உடைமைகளையும் ஒரு சில பிரிவினரே காலம் காலமாக அனுபவித்து வந்த நிலையை மாற்றி, அவற்றை உரிய முறையில் கணக்கெடுத்துப் பராமரிப்பதற்காக நீதிக்கட்சி அரசால் உருவாக்கப்பட்டு, நடை முறைப்படுத்தப்பட்டது அறநிலையப் பாதுகாப்புச் சட்டம்.
பானகல் அரசர் காலத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்து சமய அறநிலையப் பாதுகாப்பு சட்டம், பின்னர் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியின் முதலமைச்சர்கள் ஓமந்தூர் இராமசாமியார், பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலங்களில் புதிய விதிகளும் இணைக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறை உருவானது. முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் கோயில் அறங்காவலர் குழுக்களில் பட்டியல் இனத்தவர்களும் பெண்களும் இடம்பெறும் நிலை உருவானது.
பிறப்பால் உயர்ந்த ஜாதியாகவும், பணத்தால் உயர்ந்த வர்க்கமாகவும் கருதிக் கொண்டிருந்தவர்களின் பிடியில் இருந்த திருக்கோயில் சொத்துகள், உரிய முறையில் அரசாங்கத்தின் பதிவேடுகளில் இடம்பெற்று, அவற்றின் கணக்கு வழக்குகள் உள்ளிட்ட நிர்வாகத்தினை இந்து சமய அறநிலையத்துறை கவனித்து வருகிறது. தமிழ்நாட்டில் 100 ஆண்டுகாலமாக நடைமுறையில் உள்ள அறநிலையப் பாதுகாப்பினை மதவாத அரசியல்வாதிகளும், அவர்களின் பரிவாரங்களும் விரும்புவதில்லை.தங்களின் அதிகாரம் பறிபோனதாக அவர்கள் நினைப்பதால், அறநிலையத்துறையிடமிருந்து கோயில்களை எடுத்துவிட்டு, அதனைத் தாங்கள் விரும்பும் அமைப்புகளிடமோ தனியாரிடமோ வழங்க வேண்டும் என்பதுதான் அவர்களின் தொடர்ச்சியான நிலைப்பாடாகவும் தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியாகவும் உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. என ஆட்சிகள் மாறியபோதும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்தான் திருக்கோயில்களின் நிர்வாகம் இருந்து வருகிறது. கோயில் திருப்பணிகள், குடமுழுக்கு, திருவிழாக்கள் ஆகியவற்றை அறநிலையத்துறை மேற்கொள்கிறது. அன்னதானக் கூடம், திருமண மண்டபம், கல்லூரிகள், கருணை இல்லங்கள் ஆகியவையும் அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவையனைத்தும் நிர்வாக நடவடிக்கைகள்தான். கோயிலின் ஆகம முறைகள், வழிபாட்டுத் தன்மைகள், உற்சவத்திற்கு உகந்த நாட்கள் போன்ற ஆன்மிக நம்பிக்கைக்குரியவற்றில் அறநிலையத்துறை தலையிடுவதில்லை.
2021-2026 திராவிட மாடல் ஆட்சியில் ஏறத்தாழ 4000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றதுடன், பழமையான கோயில்களின் புனரமைப்புக்கானத் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. பல வகை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து 8,107 ஏக்கர் கோயில் நிலங்களை அறநிலையத்துறை மீட்டது. இதன் மதிப்பு ரூ.8,435 கோடியாகும். கோயில் நில ஆக்கிரமிப்பு மோசடியில் ஆர்.எஸ்.எஸ்–பா.ஜ.க ஆதரவாளர்கள் பலர் ஈடுபட்டிருந்ததும் அம்பலமானது.
திருக்கோயில்களை அறநிலையத்துறையிடமிருந்து எடுத்து தனிப்பட்ட அமைப்புகளிடம் வழங்கவேண்டும் என்றும், அரசாங்கத்திற்குப் பதில் இந்து மதத்தைச் சேர்ந்தஅமைப்புகள்தான் கோயில்களை நிர்வகிக்க வேண்டும் என்றும் மதவாத அரசியல் அடிப்படையில் தொடர்ந்து குரல் எழுப்புகிறவர்கள் எதற்காக அப்படிச் சொல்கிறார்கள் என்பதற்கான உண்மையான காரணத்தை அயோத்தி இராமர் கோயில் நிதி வசூல் விவகாரமும், காணிக்கைத் திருட்டும் அம்பலப்படுத்தியுள்ளன.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், இராமன் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், கோயில் கட்டும் பணிகளுக்காக சிறீராம ஜென்ம பூமி தீர்த்த சேஷ்ஸ்தரா டிரஸ்ட் எனும் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையைத் தொடங்கிவைத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. இந்த அறக்கட்டளையின் பொதுச் செயலாளராக சம்பட் ராய் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அறக்கட்டளையில் பொறுப்பில் இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்கள். உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இராமர் கோயில் கட்டும் பணியில் தொடர்புடையவர். அயோத்தியில் இராமர் கோயில் கட்டும் பணியைத் தொடங்கி வைத்தவர் பிரதமர் மோடி. கோயில் கட்டி முடிக்கப்பட்ட தும் அதனைத் திறந்து வைக்கும் விழாவிலும் அவரே முதன்மையாக இருந்தார்.
இந்து மதத்தின் பாதுகாவலர்கள் நாங்கள்தான் என்று சொல்லிக் கொண்டு, ‘ஜெய் சிறீராம்’ கோஷம்போடும் அமைப்பினர், அயோத்தியில் கோயில் நிதியை சுரண்டி, இராமனுக்கு நாமம் போட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாமம் அல்ல, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மோசடி நாமத்தைப் போட்டிருக்கிறார்கள்.இராமர் கோயில் கட்டுவதற்காக உலகெங்கும் உள்ள இந்துக்களிடம் நிதி வசூல் செய்யப்பட்டது. இந்தியாவில் உள்ள பக்தர்களும் வாரி வழங்கினார்கள். ஏழைகள் கூட தங்களின் உண்மையான பக்தியின் காரணமாக, அயோத்தி இராமர் கோயிலுக்கு தங்களிடமிருந்த தங்கம், வெள்ளி ஆகியவற்றைக் காணிக்கையாக வழங்கினர். பணக்காரர்கள் இலட்சக்கணக்கில் பணமும், வைரம் உள்ளிட்ட நவரத்தினங்களையும் வழங்கினர். இந்த காணிக்கைகள் களவு போயிருப்பதாக புகார் எழுந்தது.
இராமர் கோயிலை நிர்வகிக்கும் சிறீராம ஜென்மபூமி தீர்த்த சேஷ்ஸ்தரா அறக்கட்டளையின் நிர்வாக ஊழல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என உத்தரப்பிரதேசத்தில் உள்ள இராம பக்தர்களும், அரசியல் கட்சிகளும் குரல் எழுப்பின. ஒன்றிய உள்துறையின் முன்னாள் செயலாளர் ஒருவர், இராமர் கோயிலுக்கு காணிக்கையாக அளித்த தன்னுடைய தங்க இராமாயணப் புத்தகம் பற்றியும் புகார் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக உத்தரப்பிர தேசத்தை ஆளும் பா.ஜ.க.வின் முதல்வர் ஆதித்யநாத் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி) அமைத்தார்.
எஸ்.அய்.டி. விசாரணையில் காணிக்கைத் திருட்டு நடந்திருப்பதும், நில மோசடிகளும் கண்டறியப்பட்டன. 180 நாட்களுக்குப் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டிய சி.சி.டி.வி. கேமரா பதிவுகளில் 45 நாட்களுக்கானப் பதிவுகள் மட்டுமே இருந்தன. மற்றவை அழிக்கப்பட்டுவிட்டன. இந்தப் பதிவுகளை ஆராய்ந்ததில் 40 நாட்களில் 70 திருட்டுவேலைகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.ஸ்ரீராம ஜென்மபூமி டிரஸ்ட் நிர்வாகம் போலிரசீதுகள் போட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
காணிக்கைத் திருட்டு தொடர்பான எஸ்.அய்.டி.யின் விசாரணையைத் தொடர்ந்து, பெயரளவுக்கு சிலரைக் கைது செய்தது உத்தரப்பிரதேச பா.ஜ.க. அரசு. அவர்களில் பலர், கோயில் காணிக்கையை எண்ணக்கூடிய வேலையைப் பார்ப்பவர்கள்தான். அவர்களிடமிருந்து 80 இலட்ச ரூபாய் பறிமுதல் செய்திருப்பதாக எஸ்.அய்.டி.யின் அறிக்கை தெரிவிக்கிறது. 200 கோடி ஊழலில் 80 இலட்சத்தைக் கண்டறிந்துவிட்டதாக காலரைத் தூக்கி விட்டுக் கொள்கிறது உத்தரபிரதேச அரசு நிர்வாகம். இது, உண்மையான குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்காக நடத்தப்படும்நாடகம் என்பதை அரசியல் கட்சிகளும் பொதுநல அமைப்புகளும் ஆதாரங்களுடன் முன்வைக்கின்றன.
இராமஜென்மபூமி அறக்கட்டளைக்கு வந்து குவிந்த நிதி மூலமாக விவசாய நிலங்கள் வாங்கப்பட்டன. “கோயிலுக்காக என்று சொல்லி எங்களிடம் மிகக் குறைந்த விலைக்கு வாங்கிய நிலங்களை, கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்ட தனியாரிடம் அதிக விலைக்கு விற்கிறது ராமஜென்மபூமி டிரஸ்ட்” என்று விவசாயிகள் சங்கத்தினர் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்கள்.
பக்தர்கள் அளித்த காணிக்கை, விவசாயிகளிடமிருந்து வாங்கிய நிலம், கோயிலுக்கு சொந்தமான சிலைகள் எனப் பலவும் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த சேஷ்ஸ்தரா அறக்கட்டளையால் மோசடி செய்யப்பட்டுள்ளது. இராமர் பெயரில் நடத்தப்பட்டிருக்கும் இந்த மாபெரும் ஊழல் குறித்து பிரதமரோஅவரது கட்சி நிர்வாகிகளோ ஏன் வாய் திறக்கவில்லை என்றும், உச்சநீதிமன்ற அளவில் இந்த ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ளது போன்ற அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு மாறாக, கோயில்களை தனியார் அமைப்பிடம் கொடுப்பதும், அதுவும் மதத்தின் பெயரை வைத்து அரசியல் செய்பவர்கள் கைகளில் கொடுப்பதும் எத்தகைய மோசடிக்கு வழிவகுக்கும் என்பதை இராமர் கோயில் விவகாரம் நிரூபித்துள்ளது. அறநிலையத்துறை ஏன் அவசியமானது என்பதற்கு அயோத்தி ஊழலே சாட்சியமாகியுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியில் திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, கோயில் கணக்கில் சேர்த்ததற்கு மாறாக, தற்போது நடைபெறும் த.வெ.க ஆட்சியில் கோயில் சொத்துகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மோசடிகள் தொடர்கின்றன. பழநி அடிவாரம் பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் 60 ஆண்டுகாலமாகத் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நிலையில் உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடரப்பட்டு, திராவிட மாடல் ஆட்சியில் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள் அந்த நிலம் மீட்கப்பட்டு, நீதிமன்றங்களின்உத்தரவுப்படி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது. திருக்கோயில் நிலத்தைப் போராடி மீட்டு, ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், த.வெ.க அரசு அதனை ஜூலை 2ஆம் நாள் தனிநபர்களுக்குப் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளது.
லஞ்ச- ஊழல் இல்லாத ஆட்சி என பஞ்ச் வசனம் பேசுகிறார் விஜய். பழநியில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.40 ஏக்கர் கோயில் சொத்து, த.வெ.க. ஆட்சியில் பறிபோய் இருக்கிறது. மக்களை மட்டுமல்ல, கடவுளையும் ஏமாற்றும் மோசடி ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது.
நன்றி: ‘முரசொலி’, 15.7.2026
