வணக்கம்! தங்களைக் குறித்தும், தங்கள் குடும்பம் குறித்தும் அறிமுகம் செய்யுங்கள்?
என் பெயர் அ.இளங்கோவன். 1948 இல் பிறந்த எனக்கு 78 வயதாகிறது. அம்மா பெயர் கார்த்தியாயினி. அப்பா பெயர் அருணாசலம். எங்கள் சொந்த ஊர் மயிலாடுதுறை அருகேயுள்ள கூறைநாடு. எங்கள் தந்தையை “மாயவரம் அருணாசலம்” என்று அழைப்பார்கள். அந்த ஊரில் இருந்த மகாதான தெருவில் பார்ப்பனர்கள் நிறைந்து காணப்படுவார்கள். அங்கே பார்ப்பன எதிர்ப்புப் பேசுவது சற்றுச் சிரமம். எனினும் அப்பா தீவிரமாக அந்தப் பகுதியில் கொள்கையைப் பேசியவர்.
எனக்கு நான்கு வயது இருக்கும் போதே, எங்கள் குடும்பம் விருத்தாசலம் வந்துவிட்டது. இங்கு வந்ததும் 1952இல் “மயூரா கபே” எனும் பெயரில் அப்பா உணவகம் தொடங்கினார். இது விருத்தாசலம் தொடர்வண்டி நிலையத்தில் அமைந்திருந்தது. 1978 வரை இந்தக் கடை இருந்தது. இந்தப் பகுதிக்கு வரும்போதெல்லாம் ஆசிரியர் எங்கள் உணவகத்திற்கு வருவார்கள். அங்கே ஓய்வு எடுப்பார்கள்; தங்கியும் இருக்கிறார்கள். இட்லி, தோசை போன்றவை சுவையாக இருக்கும் எனப் பலமுறை கூறியிருக்கிறார்கள். அடுத்த நாளில் குதிரை வண்டியில் பயணம் செய்து விருத்தாசலம் நகரம் சென்று அங்கிருந்து பெண்ணாடம், திட்டக்குடி நிகழ்ச்சிகளுக்குச் செல்வார்கள்.
உங்கள் தந்தை காலத்தில் இருந்தே
உங்கள் குடும்பம் இயக்கத்தில் இருக்கிறது, அப்படித்தானே?
இல்லை, எங்கள் தாத்தா காலத்தில் இருந்தே இருக்கிறோம். எங்கள் தாய்மாமா பெயர் சபாபதி. அவர்களின் மாமா பெயர் சக்ரவர்த்தி. இவர் நீதிக்கட்சியில் இருந்தவர். இவரின் வீட்டிற்குத் தந்தை பெரியார் வந்துள்ளார். திராவிட சங்கப் பொறுப்பாளர்கள் என ‘குடிஅரசு’ இதழில் வந்த பட்டியலில் சக்ரவர்த்தி அவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆக தாத்தா, அப்பா, மாமா, நாங்கள், எங்கள் பிள்ளைகள் எனத் தொடர்ந்து இந்த இயக்கத்தில் இருந்து வருகிறோம்.
நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது காமராஜரை, பெரியார் தீவிரமாக ஆதரித்த நேரம். அதனையொட்டி மாணவர் காங்கிரசில் சேர்ந்தேன். மாணவர்கள் கழகத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக என்னைப் போட்டியிடச் சொன்னார்கள். ஆனால் அறிவியல் வகுப்பு மாணவர்கள் (நான் தாவரவியல் படித்தேன்) தேர்தலில் ஈடுபடக் கூடாது எனச் சில பேராசிரியர்கள் கூறினர். அதிலும் ஒரு பார்ப்பன பேராசிரியர், நான் ‘பெரியாரிஸ்ட்’ என்பதையும் சேர்த்து அறிந்து, தேர்வில் மதிப்பெண்களைக் குறைத்து வழங்கினார். மேலும் அண்ணாமலைப் பல்கலைக் கழக விடுதியில், நான் ‘விடுதலை’ நாளிதழும் வாங்கி வாசித்துக் கொண்டிருந்தேன்.
1967-க்குப் பிறகு அரசியல் சூழ்நிலை மாறி, பெரியார் திமுக ஆதரவு நிலை எடுத்தார். அதுவரை எங்கள் மாமா சபாபதி அவர்கள் ‘விடுதலை’, ‘நவசக்தி’ வாங்கியவர் ‘விடுதலை’, ‘முரசொலி’ என மாறிவிட்டார். நான் சிறிது நாட்கள் கழித்து தான் திராவிடர் கழகத்திற்கு வந்தேன். காங்கிரசில் இருந்தபோது கூட என்னைத் “தி.க. இளங்கோவன்” என்றே அழைப்பார்கள்.
தங்கள் மாமா சபாபதி அவர்களின் தாக்கம் அதிகமாகத் தெரிகிறதே?
ஆமாம்! ஒன்பது வயதில் தொடங்கி எனக்கு அரசியல் ஈடுபாடு வர அவர்தான் காரணம். கடைசிக் காலத்தில் மாமாவிற்கு நான்தான் ‘விடுதலை’ வாசித்துக் காட்டுவேன். சபாபதி அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில், திருச்சியில் இருந்து சென்னை சென்ற பெரியார், விருத்தாசலம் வருகை தந்து, சபாபதி அவர்களுக்கு ஒரு கருப்புச் சட்டை கொடுத்துச் சென்றார். இறந்த பிறகு அந்தச் சட்டையைத் தான் அவரின் உடலின் மீது போர்த்தினோம்.
ஜாதி ஒழிப்புப் போரில் கைது செய்யப்பட்டு, சபாபதி அவர்களை உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றபோது, “நீங்கள் என்ன ஜாதி?” என நீதிபதி கேட்க, “ஜாதியை ஒழிக்கத்தான் போராடிச் சிறைக்கு வந்துள்ளோம், எங்களிடமே என்ன ஜாதி என்று கேட்கலாமா?” என வினா எழுப்பியுள்ளார். ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்தார்.
இப்படி எங்கள் குடும்பத்திலும், எனக்குள்ளும் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியவர். சபாபதி அவர்கள் மறைவையொட்டி கோ.சாமிதுரை அய்யா வீட்டிற்கு வந்து விசாரித்துச் சென்றார்கள். இயக்கத்திற்கு முழுமையாக வர வேண்டும் எனவும் என்னைக் கேட்டுக் கொண்டார்கள்.
நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?
தொடர்வண்டியின் மூலம் விருத்தாசலம் வரும் நிலக்கரியை எடுத்து, பல இடங்களுக்கும் கொண்டு சேர்க்கும் ஒப்பந்தப் பணி செய்தேன். அப்போதெல்லாம் 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளைத் தான் பயன்படுத்துவோம். திண்டிவனம், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட அருகாமை ஊர்களுக்கும் எடுத்துச் செல்வோம். பிறகு நண்பர்களுடன் இணைந்து செங்கல் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டேன். இப்போது சொந்தமாக “சேலஞ்சர் பிரிக்ஸ் சேம்பர்” எனும் பெயரில் சற்றொப்ப 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன்.
எங்களது நிறுவன முத்திரையில் (Logo)
பெரியாரின் சுடர் இருக்கும்!
எனது அண்ணன் பெயர் ரூசோ. ஆசிரியர் மீது அளவு கடந்த அன்பில் இருந்தவர். அவர் கப்பல் துறையில் பொறியாளராகப் பணியாற்றினார். அதற்கு முன்பாக நீர்வளத் துறையில், திருவண்ணாமலையில் வேலை செய்தார். மேற்படிப்பு படிக்க வேண்டும், அதற்குச் சென்னையில் பணி செய்தால் வாய்ப்பாக இருக்கும் என எண்ணினார். அந்த நேரத்தில் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் சகோதரர் சுந்தரவதனம், அதே துறையில் அதிகாரியாக இருந்தார். அதை வாய்ப்பாகக் கொண்டு ஆசிரியர் அவர்கள் தான் பணி மாற்றம் பெற்றுத் தந்தார்கள். எங்கள் நான்கு தலைமுறைக் குடும்பமும் ஏதோ வகையில் ஆசிரியரால் பயன்பெற்றவர்களே!
இயக்கத்தில் எந்தெந்தப் பொறுப்புகளில் இருந்துள்ளீர்கள்?
நகரத் தலைவர், ஒன்றியச் செயலாளர், மாவட்டத் தலைவர் போன்ற பொறுப்புகளில் இருந்துள்ளேன். இப்போது மாவட்டக் காப்பாளராக இருக்கிறேன். நான் மாவட்டத் தலைவராக இருந்த போதுதான், சிதம்பரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அப்போது சில தோழர்கள் மாற்றுக் கருத்து கொண்டிருந்தார்கள். ஆனால் மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகுதான் அப்பகுதியில் அதிகமான வளர்ச்சி ஏற்பட்டது.
ஆசிரியர் செய்ததன் காரணத்தை, பின்னாளில் அனைவரும் புரிந்து கொண்டார்கள். ஆனால் அப்படி பிரித்த சமயத்திலேயே நான் அதை மனதார ஏற்றுக் கொண்டேன். ஏனெனில் அது ஒரு நல்ல முடிவு. இளம் தலைமுறையினர் அதிகம் வர வாய்ப்புக் கிடைத்தது. அதற்கும் அது ஒரு நல்ல ஏற்பாடாக இருந்தது. ஆசிரியர் செய்த மாற்றங்கள் அனைத்துமே இயக்கத்திற்கு வலிமை சேர்த்தவையே!
அந்தக் காலத்தில் இருந்தே ஆசிரியருடன் அறிமுகம் இருந்து வருகிறது. அதுகுறித்த எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?
எனது தாத்தா, அப்பா, மாமா, நான், எனது பிள்ளைகள் எனத் தொடரும் இந்த இயக்க உறவிற்கு ஈடுஇணை ஏதுமில்லை. நமது ஆசிரியர் மட்டும் இல்லாவிட்டால், இந்த இயக்கம் உலகளாவிய உயரத்தை எட்டியிருக்குமா? நான் தனிமையில் இருக்கும் போது யோசிப்பேன். சமூகத்தில் எழக்கூடிய ஒவ்வொரு பிரச்சினையின் போதும், பெரியார் இருந்திருந்தால் எப்படி அணுகி இருப்பாரோ, எப்படி முடிவெடுத்து இருப்பாரோ அப்படியே செய்து வருகிறார் ஆசிரியர் அவர்கள்.
இன்றைக்கு AI, Chatgpt என்றெல்லாம் சொல்கிறார்கள். ஏதாவது தகவல்களைக் கேட்டால் அது உடனடியாகத் தெரிவிக்கிறது. இது இன்றைய தொழில்நுட்பம்.
ஆனால் ஆசிரியரின் “நுட்பம்” ஆண்டாண்டு காலமாய் இருந்து வருவது. ஒரு பெயரைக் கூறினால் போதும், பத்தே நிமிடத்தில் அவர்களின் வரலாற்றை அச்சுப் பிசகாமல் கூறிவிடுவார்கள். அதிலும் விருத்தாசலம் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருக்கும் போது, ஆசிரியர் பேசும் பழைய நினைவுகளைக் கேட்டுப் பல நாட்கள் நாங்கள் மெய்மறந்து போயிருக்கிறோம்.
எனது அண்ணன் ரூசோ மற்றும் எனது திருமணத்தையும் ஆசிரியர் தான் நடத்தி வைத்தார்கள். எங்களுக்கு சாக்ரடீஸ், ஜீனியஸ் என இரண்டு மகன்கள். அந்தக் காலத்திலேயே என்னை “சர்வீஸ் கமிஷன்” தேர்வு எழுத ஆசிரியர் பரிந்துரை செய்தார்கள். இந்த நேர்காணல் மூலம், பழைய நினைவுகளை எல்லாம் கிளறிவிட்டீர்கள், மகிழ்ச்சியாக இருக்கிறது” என விருத்தாசலம் இளங்கோவன் கூறினார்.
