அண்மைக்காலமாக நாட்டின் சில பகுதிகளில் மத ரீதியான ஊர்வலங் களின் போது பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான செயல்கள் அரங்கேறி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தற்போது இணையதளங்களில் காணொலி வேகமாகப் பரவி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நபர் பன்றிக்குட்டியைத் கையில் ஏந்தியபடி உற்சாகமாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார். அவரைச் சுற்றியுள்ள மற்றவர்கள் கைகளில் கத்திகள் மற்றும் வாள்களை ஏந்தி ஆக்ரோஷமாக முழக்கமிடுவதைக் காண முடிகிறது. இசுலாமிய மார்க்கத்தில் பன்றி ஹராமாகக் (‘புனித’மற்றதாக) கருதப்படும் நிலையில், திட்டமிட்டே மசூதிகளின் முன்பாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மத மோதல்களைத் தூண்டும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
‘புனித’மானதாகக் கருதப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு முன்பாக, மற்றொரு மதத்தினர் வெறுக்கும் விலங்கைக் கொண்டு வருவது வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கும் செயல் எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆயுதக் கலாச்சாரம்: ஊர்வலங்களில் பகிரங்கமாக கத்திகள் மற்றும் ஆயுதங்களைக் கையாளுவது சட்ட ஒழுங்கிற்கு விடப்படும் சவாலாகக் கருதப்படுகிறது.
மேற்குவங்கம் மற்றும் அசாமில் பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு சில அமைப்பினர் தங்களுக்குக் கூடுதல் அதிகாரம் கிடைத்துவிட்டது போன்ற தோரணையில் இது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. “யார் ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் அனைவருக்கும் பொதுவானது” என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் காவல்துறை உள்ளது.
