சிதம்பரம், மே 29 கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று (28.5.2026) செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரளா முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்ததையும், அதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் தலைவர்களை கைது செய்ததையும் வன்மையாக கண்டிக்கிறேன். பினராயி மாணவர் பருவத்தில் இருந்தே மார்க்சிய சிந்தனையில் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறந்த முதலமைச்சராக செயல்பட்டவர்.
அமலாக்கத் துறை அவரை குறி வைத்து சோதனை என்ற பெயரில் கைது செய்வது மிரட்டுகின்ற வேலை. ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு ஏற்றி வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேகதாது அணை கட்டுவதை கண்டித்து ஜூன் 2ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் மதிமுக தலைமையில் நடைபெறுகிறது.
கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையில் உள்ள செண்பகவல்லி அணையை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களை நீதிபதிகள் பிணையில் விடுவிக்க கூடாது. அவர்களுக்கு மரண தண்டனை அல்லது வாழ்நாள் சிறை தண்டனை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
