சென்னை, மே 26- தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா அல்லது தள்ளிப்போகுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்தார். இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக பல்வேறு தரப்பிலிருந்து தள்ளிவைக்கக் கோரிக்கைகள் வந்துள்ளன. ஜூன் முதல் வாரத்தில் வெப்ப அலை நீடிக்குமா அல்லது பருவமழை தொடங்கிவிடுமா என்பது குறித்த அறிவியல் பூர்வமான அறிக்கையை வானிலை ஆய்வு மய்யத்திடம் கேட்டுள்ளோம். அந்த அறிக்கை கிடைத்தவுடன், முதலமைச்சருடன் ஆலோசித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும்.
பாட நேரம் குறைவு
பள்ளிகளில் பாடத்திற்காக செலவிடப்படும் நேரம் ஏற்கெனவே 1,050 மணிநேரத்திலிருந்து 950 மணிநேரமாகக் குறைந்துள்ளது. தற்போது மீண்டும் 10 நாட்கள் பள்ளிகள் திறப்பைத் தள்ளிப் போட்டால், அந்தப் பாட நேர இழப்பை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டியுள்ளது.
3ஆம் வகுப்பு வரையிலான சிறிய குழந்தைகளுக்கு ஜூன் 4ஆம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்படும்.
காலை உணவுத் திட்டம் தொடரும்!
பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார்களைத் தெரிவிக்க, புதிய பாடப் புத்தகங்களிலேயே புகார் எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. 1ஆம் வகுப்பு முதலே குழந்தைகள் இதனைத் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காலை மற்றும் மதிய உணவுத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படும், மேலும் அவை மேம்படுத்தப்படும்.
மூடநம்பிக்கைகளைப் புறந்தள்ளி, அறிவியல் கண்டுபிடிப்புகள், சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு பள்ளிக் கல்வித்துறை முன்னுரிமை அளிக்கும். மாணவர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்க்கப் பல்வேறு திட்டங்களும், சுற்றறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கையில் பள்ளிக் கல்வித்துறை உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
