“டில்லி பா.ஜ.க. அரசு விரைவில் தூக்கியெறியப்படும்” சுவேந்து அதிகாரிக்கு எதிராக மம்தா, அபிஷேக் முழக்கம்!

2 Min Read

கொல்கத்தா, மே 24 மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அங்கு அரசியல் களம் தலைகீழாக மாறியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக நீடித்த மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்து, சுவேந்து அதிகாரி தலைமையில் புதிய பாஜக அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்த ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அங்கு அரசியல் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.

தனது இல்லத்தில் நடைபெற்ற திரிணாமூல் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய மம்தா, புதிய பாஜக அரசுக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசியதாவது: “மாநிலத்தில் புதிதாக அமைந்துள்ள பாஜக அரசு நமது அரசியல் சாசனத்தைச் சிதைத்து வருகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய வன்முறைகள் என்ற பெயரில் சிறுபான்மைச் சமூகத்தினர் திட்டமிட்டு குறி வைக்கப்படுகிறார்கள். ஏழை நடைபாதை வியாபாரிகளின் கடைகள் புல்டோசர்கள் கொண்டு இடித்துத் தள்ளப்படுகின்றன. ஆனால், இந்த அராஜகம் நீண்ட காலம் நீடிக்காது. டில்லியில் உள்ள பாஜக அரசும் மிக விரைவில் அதிகாரத்தில் இருந்து அகற்றப் படும்.”

சொந்தக் கட்சியின் மாநகராட்சி தாக்கீது– சவால் விட்ட அபிஷேக்

இதற்கிடையில், மம்தாவின் உறவினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக்கின் இல்லத்திற்கு கொல்கத்தா மாநகராட்சி தாக்கீது அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுமதியற்ற கட்டுமானங்களை இடிக்கக் கோரும் இந்த தாக்கீதை அனுப்பிய கொல்கத்தா மாநகராட்சி, இன்னும் திரிணாமூல் காங்கிரஸின் பிடியில்தான் உள்ளது. மம்தாவின் நெருங்கிய ஆதரவாளரான ஃபிர்ஹாத் ஹக்கிம் தான் இன்னமும் கொல்கத்தாவின் மேயராக இருக்கிறார்.

இருப்பினும் இந்த தாக்கீது விவகாரம் குறித்துப் பேசிய அபிஷேக், “பாஜகவினர் தங்களுக்கு வேண்டியதைச் செய்து கொள்ளட்டும். என் வீட்டை இடித்தாலும் சரி, எத்தனை தாக்கீது அனுப்பினாலும் சரி, இதற்கெல்லாம் நான் அஞ்சப் போவதில்லை. என்ன நடந்தாலும் பாஜகவுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும்” எனச் சவால் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் சுவேந்து
அதிகாரி மீது ஊழல் புகார்

தற்போதைய முதலமைச்சர் சுவேந்து அதிகாரியை 2014ஆம் ஆண்டின் ‘நாரதா ஸ்டிங் ஆபரேஷன்’ ஊழல் வழக்கைக் குறிப்பிட்டு அபிஷேக் கடுமையாகச் சாடினார். “மேற்கு வங்கம் எத்தனையோ முதலமைச்சர்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் கேமராவிற்கு முன்னால் லஞ்சம் வாங்கிய ஒரு நபர் முதலமைச்சராக அமர்ந்திருப்பது நமது மாநில வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை” என ஆவேசமாகத் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *