கோவை சம்பவம் மன்னிக்க முடியாத குற்றம் கடுமையான தண்டனை பெற்றுத்தர நடவடிக்கைறு முதலமைச்சர் உறுதி

சென்னை, மே 24 தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று (23.5.2026) வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: கோயம்புத்தூரில் நேற்று முன்தினம் 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையை பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தை சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தை பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின்கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் 26-ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை

 மீனவர்களுக்குத் தடை!

சென்னை, மே 24  தமிழ்நாட்டில் வரும் 26-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த மழைப்பொழிவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (மே 25): கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும். மே 26: கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். எனினும், வெயிலின் தாக்கம் குறையாமல் அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. தென் தமிழ்நாட்டுக் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால், வரும் 26-ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்குக் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது.

 

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு:

 7 நாட்களில் அறிக்கை தர
தமிழ்நாடு டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!

கோவை, மே 24 கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தற்போது களத்தில் இறங்கியுள்ளது.

இக்கொடூரக் குற்றம் குறித்து தீவிர விசாரணை நடத்தி, அடுத்த 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி)-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த கோர சம்பவத்தால் நிலைகுலைந்து போயிருக்கும் சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு உடனடியாக பக்கபலமாக நிற்க வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆணையம் பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவுகள்:

உடனடி பாதுகாப்பு

சிறுமியின் குடும்பத்தினருக்குத் தேவையான முழு பாதுகாப்பையும், ஆதரவையும் அரசு தாமதமின்றி வழங்க வேண்டும்.

உளவியல் ஆலோசனை: பெரும் துயரத்தில் இருக்கும் அக்குடும்பத்தினருக்கு தகுந்த உளவியல் ஆலோசனைகளை வழங்கிட வேண்டும்.

இவ்வழக்கில் குற்றவாளிகள் மீது காவல்துறை எடுத்து வரும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணையின் போக்கை தேசிய மகளிர் ஆணையம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *