சென்னை, மே 24 நாடு முழுவதும் கடந்த 8 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 3ஆவது முறையாக நேற்று (23.5.2026) காலை உயர்த்தப்பட்டது. 82 காசு முதல் ரூ.1.10 வரை அதிகரிப்பால் மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க ராணுவம் கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. இதனால், பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
ஒருபுறம் கச்சா எண்ணெய் விலை உயர்வு, மறுபுறம் சப்ளை இன்றி தட்டுப்பாடு இருப்பதால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த மார்ச் 7ஆம் தேதி 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.60ம், மே 1ஆம் தேதி 19 கிலோ வணிக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.998ம் அதிகரிக்கப்பட்டது. இதன்பின், கடந்த 15ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலையை ரூ.3ஆம், கடந்த 19ஆம் தேதி ரூ.1ம் அதிரடியாக உயர்த்தினர்.
இந்த விலையேற்றத்தின் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வராத நிலையில், நேற்று (23ஆம் தேதி) காலை 3ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. நாடு முழுவதும் 82 காசு முதல் ரூ.1.10 வரை உயர்த்தியுள்ளனர்.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.49இல் இருந்து 82 காசு உயர்ந்து ரூ.105.31 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.96.11இல் இருந்து 87 காசு உயர்ந்து ரூ.96.98 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுவே சேலத்தில் பெட்ரோல் 105.32இல் இருந்து ரூ.106.13 ஆகவும், டீசல் ரூ.96.98இல் இருந்து ரூ.97.85 ஆகவும் அதிகரித்துள்ளது. டில்லியில் பெட்ரோல் விலை நேற்று 87 காசு உயர்ந்து ரூ.99.51 ஆகவும், டீசல் 91 காசு உயர்ந்து ரூ.92.49 ஆகவும், மும்பையில் ெபட்ரோல் 86 காசு உயர்ந்து ரூ.108.45 ஆகவும், டீசல் 94 காசு உயர்ந்து ரூ.95.02 ஆகவும், கொல்கத்தாவில் பெட்ரோல் 98 காசு உயர்ந்து 110.64 ஆகவும், டீசல் 95 காசு உயர்ந்து ரூ.97.02 ஆகவும் அதிகரித்துள்ளது. சில நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.113க்கும், டீசல் ரூ.101க்கும் அதிகமாக விற்பனையாகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தி யாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்க துவங்கியுள்ளது. பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதாலும், இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாலும் விலையை உயர்த்தியிருப்பதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்விலையேற்றத்தால் ஒன்றிய பாஜ அரசு மீது, மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கச்சா எண்ணெய் விலை குறைந்த போது, அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் இருந்து விட்டு, தற்போது கச்சா எண்ணெய் விலை உயரும் போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்துவதை திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.
200 டாலருக்கு மேல் உயரும்
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் வணிகத்தை கணிக்கும் தனியார் அமைப்பான உட்மெக்கன்சி நிறுவனம், ‘‘ஈரான் கடல் பகுதியான ஹார்மூஸ் நீரிணையை தொடர்ந்து மூடி வைத்து, கச்சா எண்ணெய் வணிகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் பட்சத்தில், சந்தையில் கச்சா எண்ணெய் விலை 200 டாலர் வரை உயரும் நிலை உருவாகும்,’’ என எச்சரித்துள்ளது. இப்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 200 டாலருக்கு சென்று விட்டால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ரூ.210அய் கடக்கும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
