சட்டமன்றத்தில் ஒலித்த ஸநாதன எதிர்ப்புக் குரல்! -கி.தளபதிராஜ்

7 Min Read

வடலூரில் நடைபெற்ற வள்ளலார் 200-ஆவது பிறந்தநாள் விழாவில் அன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, “10 ஆயிரம் ஆண்டு ஸநாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். அவர் ஸநாதன தர்மத்தின் ஒளிரும் சூரியன். ஸநாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களை படித்தவன், அப்போது வள்ளலாரின் நூல்களைப் படித்தபோது மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது. எல்லா உயிர்களையும் நம்மில் ஓர் அங்கமாகப் பார்ப்பதுதான் ஸநாதன தர்மம். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் வரிகள் ஸநாதன தர்மத்தின் வெளிப்பாடு” என்று பேசியதன் விளைவு அதன் எதிர்ப்பலை இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆளுநரின் இந்த உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வள்ளலார் சபை கண்ட வடலூரிலேயே அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டத்தை நடத்தினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். தமிழ்நாடு முழுவதும் ஸநாதன எதிர்ப்புத் தீ பற்றி எரிந்தது.

கட்டுரை, ஞாயிறு மலர்

சென்னையில் 2.9.2023 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய ஸநாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், “சில விஷயங்களை எதிர்க்க முடியாது; ஆனால், அவை அழிக்கப்பட வேண்டும். டெங்கு கொசு, மலேரியா அல்லது கரோனா வைரஸ் போன்றவற்றை ஒழிப்பது போல் ஸநாதனத்தையும் ஒழிக்க வேண்டும்!” என்று சூளுரைத்தார். ஆரியம் அதிர்ந்தது. விவாதங்கள் சூடு பிடித்தன. ஸநாதனம் என்றால் இந்து மதம். ஒரு மதத்தை ஒழிக்க வேண்டும் என்று ஓர் அமைச்சர் எப்படிப் பேசலாம்? எனப் பஞ்சகச்சங்கள் இறுக்கி முடியப்பட்டன. ஒரு கட்டத்தில் இந்துக்களையே ஒழிக்கச் சொல்கிறார் உதயநிதி என்று திரித்தார்கள். எதற்கும் அயராது தான் கொண்ட கருத்தில் உறுதியாக நின்றார் உதயநிதி.

பின்னர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் தமிழ் சேவா சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில்தான் ஜாதியப் பாகுபாடுகள் அதிகம் நடைபெறுகிறது” என்று பேசி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டுப்போனார்.

அதைத் தொடர்ந்து 20.9.2023 அன்று மதுரை வந்த அமைச்சர் உதயநிதி அவர்களிடம் இது குறித்துப் பத்திரிகையாளர்கள் கேட்க, “அதற்காகத்தான் ஸநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறோம். ஜாதிய வேறுபாடுகள் இருக்கக் கூடாது. ஸநாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்து விடும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் நம்பவில்லையா? நம்புங்கள்!” என்று பதிலடி கொடுத்தார். மேலும், திமுக மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கும் மேலூர் நிகழ்ச்சியில் பேசியவர், “புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவில் சாமியார்களுக்கு என்ன வேலை? நாட்டின் முதற்குடிமகள் குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை.

இங்குதான் ஸநாதனம் நிலை நிறுத்தப்படுகிறது. இதைத்தான் திமுக ஒழிக்க வேண்டும் என்கிறது. ஸநாதனம் பற்றிப் அறிஞர் அண்ணா அவர்கள் எவ்வளவோ பேசியிருக்கிறார். “ஸநாதனச் சேற்றில் இருந்து இன்னும் நம் மக்கள் வெளியேறாதது வருத்தம் அளிக்கிறது. இன்னும் சிலர் அந்தச் சேற்றை சந்தனம் என நினைக்கின்றனர். அதனை நினைத்து வெட்கப்படுகிறேன்” என்றார். ‘அந்த வழியிலேயே திமுக செல்கிறது’ என்றார். ஆப்பசைத்த குரங்காய் அலறினர் ஸநாதனிகள்! எல்லா உயிர்களையும் நம்மில் ஒரு அங்கமாகப் பார்ப்பதுதான் ஸநாதன தர்மம் என்று அவர்கள் கூறுவது உண்மையா?

பெயர் வைப்பதில் ஸநாதனம்

காசி ‘பிரதான இந்து வித்யா சாலை’ சபையார் அறிவுறுத்தலின்டி, மதுரை ‘பிரம்ம ஞான சபை’ தலைவர் ப.நாராயண அய்யரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 1905இல் வெளிவந்த நூல் ‘சநாதநதர்மம்’. அதில் ‘இந்துமதம் சம்பந்தமான சாமான்ய ஆசாரங்களும் சமஸ்காரங்களும்’ (2ஆவது பிரிவு 12ஆவது அத்தியாயம்) என்ற பகுதியில் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த 16ஆம் நாள் நாமகரணம் ருக்வேத மந்திரத்துடன் செய்யப்படுகிறது. அப்படி சூட்டப்படும் பெயரானது அந்தந்த ஜாதிக்குரியதாக இருக்க வேண்டும். “பிராமணப் பெயர்கள் மங்கள வாசகமாகவும், சத்திரியன் பெயர் பல வாசகமாகவும், வைசியன் பெயர் கனவாசகமாகவும், சூத்திரன் பெயர் தாழ்மை வாசகமாகவும் இருக்க வேண்டும்” என்று சொல்கிறது. மேற்படி கருத்தே மனுஸ்மிருதி ஸ்லோகத்திலும் உள்ளதாக அந்த ஆசிரியர் குறிப்பிடுகிறார். இப்படித்தானே நம் தாத்தனுக்கும் பூட்டனுக்கும் பெயர் சூட்டினார்கள்? பாவாடை, தோலான், தொப்புலான், குஞ்சு, மண்ணாங்கட்டி, இப்படிப்பட்ட பெயர்களைத்தானே நம் சமூகம் கண்டது?

கட்டுரை, ஞாயிறு மலர்

தீண்டாமை

மேற்படிப் புத்தகம்தான் “ஒருவன் அசுத்தமான வஸ்துவையோ வேற்று மனுஷாளையோ தொட்டால் அவன் சரீரம் ஸநானத்தினால் சுத்தமாகிறது” என்று சொல்கிறது. (பக்கம் 223)

நால் வருணம்

இரண்டாவது பிரிவு ஏழாவது அத்தியாயம், “நான்கு வருணங்களில் சூத்திர வர்ணத்தின் முக்கியக் கடமை சேவகம் செய்வது” என்றும், “பிராமண வருணத்தின் கடமை குருவாகவும் ஆசிரியனாகவும் இருப்பது” என்றும் குறிப்பிடுகிறது. (பக்கம் 278) இதே கருத்தைத்தான், “நான்கு வருணங்களும் என்னால், குணங்கள் கருமங்கள் இவைகளைப் பாகம் செய்ததினால் உண்டாக்கப்பட்டவை. அவைகளுக்கு நானே கர்த்தா என்று அறி! மூன்று வருணத்தாருக்கும் ஊழியம் செய்வதே சூத்திரனுக்குக் கடமையுடனான கருமமாக இருக்கிறது” என்று பகவத் கீதையும் சொல்கிறது. இதுதான் எல்லா உயிர்களையும் நம்மில் ஒரு அங்கமாகப் பார்ப்பதா?

ஸநாதனம்! – வ.வே .சு அய்யர்

சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் நடந்து நூறாண்டுகள் கடந்துவிட்டது. வ.வே.சு. அய்யரால் நிர்வகிக்கப்பட்ட சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர் – பார்ப்னரல்லாதார் பேதப்படுத்தப்பட்டதை எதிர்த்துப் பெரியார் போராடினார்! குருகுலத்தைக் கண்டித்து பல பத்திரிக்கைகளும் எழுதிய நிலையில் வ.வே.சு. அய்யர் கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா? “ஒரு தனி மனிதனுக்குச் சாதாரணமாக ஜாதியின் அமைப்பை மாற்ற அதிகாரம் கிடையாது. மேற்படி விஷயம் மாறுதலுக்கு விரோதமானதால் அநேகர் ஆட்சேபிப்பார்கள். மாறுதல் புத்தியினால் கூறப்பட்டாலும், குதர்க்கமின்றிக் கூறப்படும் ஆட்சேபனைகளுக்குப் பொறுமையோடும், அன்போடும், யுக்தியோடும், ஸநாதன தர்மத்தோடு பொருந்தும்படி பதில் சொல்வதே மாறுதலுக்காகப் பாடுபடுபவரின் கடனாகும்” என்றார்.

“மாணவர்களை ஒரே இடத்தில் அமரச் செய்து உணவளிக்க வேண்டும்” என்று சொன்னால் “ஸநாதன தர்மத்தோடு பொருந்தும்படி பேச வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். இதுதான் ஸநாதன தர்மம்!

ஸநாதன தர்மம்! – கைவல்ய சாமியார்

ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ‘சமதர்மம்’ பத்திரிகையில் ஸநாதனம் குறித்து கட்டுரை ஒன்றை தீட்டியிருக்கிறார் கைவல்ய சாமியார்.

“ஸநாதன தருமம் என்று ஒரு தருமம் எங்கள் நாட்டில் இருக்கிறது. அது எங்கள் வேத தருமம்! கடவுளால் கொடுக்கப்பட்டது. அதைத்தவிர வேறு தருமத்தை எங்கள் கடவுள் சொல்லவில்லை. இந்தத் தருமம் எங்கள் நாட்டு ரத்தத்தில், தசையில், எலும்பில், மூளைக்குள் கலந்திருக்கிறது.

‘அறிவு பொது’ என்பதை உலக தருமம் எல்லாம் ஒப்புக்கொள்கின்றன. எங்கள் ஸநாதன தருமம் மாத்திரம் அதை ஒப்புக்கொள்வதில்லை . அதனால்தான் விசாரித்து அறியும் புத்தி எங்களிடம் இல்லை. ‘பிரம்ம ஞானமும் விரிந்த வாழ்வும் சூத்திரர்களுக்குக் கிடையாது!’ என்று அந்தத் தருமம் முன்னமே விதித்துவிட்டது. சூத்திரன் என்றால் மடையன். பாப்பார தாசி மகன் என்பது பொருள். பெரிய பண்ணை, சின்ன பண்ணை, மிட்டா மிராசு, முதலியார், நாயுடுகார், பிள்ளைவாள், தேசிகர், கவுண்டர், செட்டியார், நாடார், நாட்டார், நாயக்கர், சேர்வை முதலிய எல்லோரும் சூத்திரர்கள் என்றே ஸநாதன தர்மம் சொன்னதும் அல்லாமல், அனுபவத்திலும் ஆளாக்கி விட்டது.

துருக்கியர்கள், அரபியர்கள், முகலாயர்கள், டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர், பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர்கள் இத்தனை ஜாதிக்காரர்கள் எங்கள் தேசத்தை ஆண்டும் நூற்றுக்கு 70 பேருக்கு மேல் இந்தக் காலத்திலும் கூடப் படிக்க வில்லை என்றால்  அறிவு எல்லோருக்கும் பொதுவல்ல என்கிற விதிப் போட்ட அந்த ஸநாதன தருமத்தின் சக்தியை நீயே தெரிந்து கொள்! தமிழ்நாட்டு தெய்வங்களிடம் தேங்காய், பழம், சோறு என்று சொல்லுவது கூட ஸநாதன தர்ம பாஷையில் சொன்னால் தான் தெய்வங்களுக்கு அர்த்தமாகும் என்ற ஏற்பாட்டைச் செய்து விட்ட ஸநாதன தர்மத்தின் மகிமையை நீ தெரிந்து கொள்! உன் பெயரைக் கேட்டவுடன் எல்லோருக்கும் அர்த்தமாகிறது. ஸநாதன தர்மம் என்றால் எங்களில் எத்தனைப் பேருக்கு அர்த்தம் ஆகும்? ஸநாதன தர்மம் என்றால் பழைய தர்மம் என்று பண்டிதர்கள் சொல்கிறார்கள். எங்கிருந்து பழையது ஆரம்பிக்குமோ? எங்கே போய் முடியுமோ ? நாமறியோம்.

அர்த்தமாகாத தர்மத்தைக் காணக்கிடைக்காத கடவுள் கொடுத்தார். புத்தியுள்ளவன், புத்தி இல்லாதவன் கழுத்தில் மாட்டினான். அந்த ஸநாதன தருமம் கடவுளிடமிருந்து வந்திருந்தாலும் உலக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் குரூரமான கொடுங்கோன்மையை நடத்துவதுதான் அதன் தொழில். தெய்வத்தின் பெயர் சொல்லி மனிதனை மனிதன் கீழ்ப்படுத்தி அவமதிக்கும்படி செய்வது தான் அதன் அதிகாரம்!

‘பிராமணனுக்கு’ மல உபாதையை சுத்தம் செய்து கொள்ள எத்தனை அளவு தண்ணீர் வேண்டுமோ அந்த அளவில் பாதி தண்ணீர்தான் சூத்திரனுக்கும் பெண்களுக்கும் என்று அந்த ஸநாதனம் சொல்கிறது” என்று ஸநாதன தர்மத்தின் யோக்கியதையைத் தோலுரித்து நிர்வாணப்படுத்தியவர் கைவல்யசாமியார்.

(சமதர்மம்: 8.8.1934)

ஸநாதன தருமம்! – சுவாமி சிவானந்த சரஸ்வதி

“ஸநாதன தருமம், மனு தருமம், வர்ணாசிரம தருமம் ஆகிய சைவம், வைணவம், தருமம் என்பனவெல்லாம் பிராமண மதம் என்றே கொள்ள வேண்டுவதன்றி பெயர் மாற்றத்தால் மயங்க வேண்டாம்” எனக் குறிப்பிடுகிறார் சுவாமி சிவானந்த சரஸ்வதி .

(நூல்: ‘ஞான சூரியன்’, முதல் பதிப்பு 1927)

ஸநாதன எதிர்ப்பு என்பது இன்று நேற்று ஏற்பட்டதன்று. அது திராவிடஇயக்கத்தின் அடிநாதம். பல நூற்றாண்டைக் கடந்த வரலாறு. “பதவி எங்களுக்குத் தோள் துண்டு! கொள்கைதான் வேட்டி!” என்றார் பேரறிஞர் அண்ணா. “வெற்றி பெற்றால் அண்ணா வழி! தோல்வியுற்றால் பெரியார் வழி!” என்றார் கலைஞர்.

கலைஞரின் கொள்கை வாரிசுக்குச் சொல்லித் தர வேண்டுமா? சட்டமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக தன் முதல் உரையிலேயே “ஸநாதனம் ஒழிக!” என்று ஆர்ப்பரித் திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *