தமிழ்நாடு ஒருபோதும் ஏற்கவே ஏற்காது! வன்மையான கண்டனத்திற்குரியது!

3 Min Read

சமஸ்கிருத மயமான ‘வந்தே மாதர’த்திற்கு முதலிடம் தந்து
‘‘மீண்டும் தமிழுக்கு மூன்றாமிடமா?’’

சமஸ்கிருத மயமான ‘வந்தே மாதர’த்திற்கு முதலிடம் தந்து ‘‘மீண்டும் தமிழுக்கு மூன்றாமிடமா?’’  தமிழ்நாடு ஒருபோதும் ஏற்கவே ஏற்காது! இது வன்மையான கண்டனத்திற்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இன்று (21.5.2026) காலை ஜோசப் விஜய் அவர்களது ஆட்சி, தனது அமைச்சரவையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை அறிவித்து, 23 புதிய அமைச்சர்கள் (காங்கிரஸ் கட்சிக்குத் தந்த இரண்டு அமைச்சர்கள் உள்பட) பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  நிகழ்ச்சியின் தொடக்கத்தில், முதலிடம்  ‘வந்தே மாதரம்’ பாட்டுக்கு! (சமஸ்கிருத மயமாக்கப்பட்ட வங்காளம்) இரண்டாவது, ‘ஜன கண மன அதி நாயக’ ‘நாட்டுப் பண்’ என்பதைப் பாடி, ‘நீராரும் கடலுடுத்த’ என்ற மொழி வாழ்த்துப் பாடல் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. முந்தைய ‘திராவிட மாடல்’ அரசு, தொடர்ந்து கடைப்பிடித்த செம்மொழியாம் எம் மொழி தமிழுக்கு முதலிடம் தந்து, தேசியப் பண் (‘ஜன கண மன’ பாட்டு) சட்டமன்றத்தில் இறுதியில்தான் இசைக்கப்படும் வகையில் நிகழ்வை நடத்தியபோது, அதற்கு அடாவடித்தனம் செய்த, முன்னிருந்த ஆர்.என்.ரவி என்ற ஆளுநரின் போக்கை அனுமதிக்காமல், இந்த உரிமையை அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிலைநாட்டினார்.

தமிழுக்கு நிரந்தரமாக மூன்றாமிடம் என்றாக்கியுள்ளார் பொறுப்பு ஆளுநர்?

சென்றமுறை பதவியேற்பு விழாவின்போது நடைபெற்ற அதே முறை போன்றே, இம்முறையும் இன்றைய  பதவியேற்பு விழாவையும் நடத்திக் காட்டி, தமிழுக்கு நிரந்தரமாக மூன்றாம் இடம் என்றாக்கியுள்ளார் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் – அதனை ஏற்றுக்கொண்டுள்ளது தமிழ்நாடு புதிய அரசு.

முன்பு, இதுபற்றி வன்மையான கண்டனத்தைத் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகளும், நாமும் எழுப்பிய நிலையில், புதிய முதலமைச்சர் சார்பில், அவரது அமைச்சர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜூனா அவர்கள் மூலம், ‘‘இனிமேல் இப்படி நடக்காது’’ என்றும், ‘‘தமிழ் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படுவதை ஏற்கமாட்டோம்’’ என்றும் கூறப்பட்ட வாக்குறுதி, இவ்வளவு விரைவில், சில நாள்களிலேயே காற்றில் பறக்கவிடப்படுகிறதா?

தமிழ்நாட்டிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்துவதா?

இந்த ஆட்சியின் தொடக்கமே தமிழ்நாட்டின் மரபை உடைத்து, சமஸ்கிருதத்தினை முதன் மொழியாக்கி, தமிழை மூன்றாவது இடத்திற்குத் தள்ளிவிட்டு மகிழும் ஆர்.எஸ்.எஸ். – சமஸ்கிருதப் பண்பாட்டுத் திணிப்பை, டில்லி எஜமானத் தனத்திற்கு அடிபணியும் போக்குக்கு இடந்தந்து தமிழ்நாட்டிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்துவதா?

‘கொள்கை எதிரிகளிடம்’ இப்படி ஒரு சமரசப் போக்கா? இதைத் தமிழ்நாடு ஒருபோதும் ஏற்கவே ஏற்காது!

புதிய ஆட்சியின் ‘‘நம்பகத்தன்மை’’ இப்போது இவ்வளவு குறுகிய இடைவெளியில் சந்தேகத்திற்குரிய கேள்விக்குறியாகலாமா?

முன்பு, ஆளுநர் மாளிகையின் ‘லோக் பவன்’ ஏற்பாடு செய்தது என்று ஒருவகை சமாதானம் கூறப்பட்டது.

இப்போது புதிய முதலமைச்சராகியுள்ள மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களின் ஆணைப்படி நடக்கவேண்டிய பொதுத் துறை (Public Department) நிகழ்ச்சிதானே! இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நிரல் முறைப்படி, புதிய முதலமைச்சர் ஒப்புதலுடன்தானே நடந்திருக்கவேண்டும்?

அலட்சியப்படுத்துவது
வன்மையான கண்டனத்திற்குரியது!

இது தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தமான உணர்வு பொங்கும், உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினை – அதனை அலட்சியப்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது!

இதனைத் தமிழ்நாட்டு மக்களின் எச்சரிக்கையாகக் கொண்டு, பார்க்கத் தவறினால், அதன் பாரதூர விளைவுகளை இவ்வளவு விரைவில் ஏற்கவேண்டிய கட்டாயம் புதிய அரசுக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாதது!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை    

21.5.2026   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *